கிருஷ்ணானந்தா

பிரேமச்சந்திரனை வாட்டி எடுக்கும் இமாலயப் பிரகடனம்

கேட்டுக்கு வெளியெ வடிவேலரின் சைக்கிள் வேகமாக வந்து பிரேக் அடித்து நின்றது.

“என்ன வடிவேலர் காலங்காத்தால. போன கிழமைதானே சந்திச்சனாங்க. அதுக்குள்ள யாரோ வெடி கொழுத்திப் போட்டுட்டாங்க போல?”

“ஓமடா கிருசு. பெரிய வெடியல்லோ கொழுத்திப் போட்டிருக்கிறாங்கள். சனம் பேப்பர் வாங்கேலாம ஓடித் திரியுது. என்னவோ இமாசலப் பிரகடனமாம். பிரசித்தம் தான் அடிக்காத குறை. நீ கேள்விப்பட்டனியோ?”

“ஓமண்ணை காத்தில வந்திது. ஏதோ செய்யிறாங்க செய்யட்டுமே. அதுக்கு ஏன் நீங்க பதட்டப்படுகிறீங்க?”

“இஞ்ச வா கிருசு. கோகிலாம்பாள் கொலை வழக்குக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில தினத்தந்தி எண்டா வடிவேலர் தான் எண்டு எல்லாருக்கும் தெரியும். சந்திக்குச் சந்தி சனம் என்ர சைகிளைப் பிடிச்சுக்கொண்டு விடாதுகள் எண்டும் உனக்குத் தெரியும். இந்த இமாசலப் பிரகடனத்தைப் பத்தி நீ விளங்கப்படுத்தா விட்டால் நான் உங்கயே படுத்திடுவன்” வடிவேலரின் பின்பக்கத்தால் புகை வரும்போல இருந்தது.

“அண்ணை அது ஒண்டும் பெரிய விசயமில்லை. உவங்கள் சைக்கிள் காரரும், பிரேமச்சந்திரன் போல மக்களால் தூக்கி எறியப்பட்டவங்களும் தான் இதை ஊதிப் பெரிசாக்கி விட்டாங்கள்”

“சரி அதைத் தான் விளக்கமாச் சொல்லன் ராசா”

“நேபாளம் தெரியுமல்லோ? அங்க இமாலயம் எண்டொரு மலை இருக்கு. நம்ம கீரி மலையை விடக் கொஞ்சம் பெரிசு. அங்க ஒரு ஓட்டலிலை கொஞ்ச புத்த பிக்குமாரும் கொஞ்ச புலம்பெயர்ந்த தமிழரும் இரகசியமாகச் சந்திச்சிருக்கினம்”

“அதுவும் ராஜபக்சவின்ர ஓட்டலோ”

“அது தெரியாது. அச்சந்திப்பில அவை ஒரு தீர்மானம் எடுத்து அதுக்கு ‘இமாலயப் பிரகடனம்’ எண்டு பெயர்வைச்சிருக்கினம். அதில இலங்கையை முன்னேத்திறதுக்கான ஆறு அம்சத் திட்டங்கள் இருக்கு”

“இப்பிடித்தான் திம்புவில கூடி நாலு அம்சப் பிரகடனம் ஒண்டை முந்திச் செய்தவை. அதே நிறைவேற இல்லை. இப்ப ஆறோட வருகினம். நடக்கிற காரியம் தான். அது சரி அதுக்கேன் இவை துள்ளுகினம்?”

“அண்ணை வடிவாப் பாத்தா இந்த கூட்டமைப்புக் காரங்கள் கத்திற விசயங்களைத்தான் உலகத் தமிழர் பேரவை வேற மாதிரிச் சோடிச்சுக் குடுத்திருக்குது. ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு, ஏற்கெனவே அரசியலமைப்புகுள்ள இருக்கிற அதிகாரப் பகிர்வை இயலுமானவரை நடைமுறைப்படுத்தல், இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தைப் பேணக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நடந்து முடிந்த துன்பியல் சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறுதல் எண்டு போகுது. புதிய மொந்தையில் கள்ளு பழசுதான்”

“அப்ப இதுக்குப் பின்னால கூட்டமைப்பு இருக்குமெண்டு சந்தேகப்படுகிறியோ?”

“அப்பிடித்தான் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் எதிரிகள் சொல்லுகினம். அப்பிடித்தான் இருந்தாலும் விசயம் நல்லதெண்டால் அதை ஆதரிக்கிற நாகரிகம் அவங்களிட்ட இல்லை”

“அப்ப எங்கட ரணில் ராஜபக்சவின்ர திட்டமாக இருக்குமோ?” வடிவேலர் கண்ணைச் சிமிட்டினார்.

“இந்த ரெண்டு பாட்டியையும் ஒண்டாக் கொண்டுவந்தது ஒரு ஐரோப்பிய நாடு. அது எது எண்டதை இப்ப சொல்ல மாட்டன். அதில இருந்து ஒண்டு தெரியோணும் பெரியவையின்ர ஆதரவில்லாம அல்லது அவைக்குத் தெரியாம இது நடந்திருக்காது. இந்தியாவுக்குச் சொல்லாம இதை இவை செய்திருக்க மாட்டினம். அட் லீஸ்ட் அந்த ஐரோப்பிய நாடு எல்லாரையும் ஒருங்கிணைத்துக் குடுத்திருக்கும். உலகத் தமிழர் பேரவை இதில ஒரு கருவி மட்டும் எண்டுதான் நான் நினைக்கிறன்”

“அப்ப ஏன் அரசாங்கத்தை இதில் ஈடுபடுத்தாம புத்த பிக்குமாரைக் கொண்டுவந்திருக்கினம். பிரேமச்சந்திரனுக்கு இது தெரிஞ்சமாதிரி வேற ஒருவருக்கும் தெரியேல்லைத்தானே. என்ன இருந்தாலும் அந்தாள் ஒரு மண்டைக்காய் தான். இல்லை எண்டு சொல்லுவியோ?”

“அண்ணை, உங்களுக்குத் தெரியும் தானே. இதை அரசாங்கம் கொண்டு போனால் எதிர்க்கட்சிகள் களத்தில இறங்கியிருக்கும். தங்களுக்கு முன்வரிசையில நிக்கவேண்டும் எண்டிறதுக்காக பிக்குமாரின்ர கால்களில விழுந்து கதறி அவங்களை அழைச்சுக்கொண்டு ஊர்வலம் வந்திருப்பாங்கள். ராஜபக்சக்கள் சந்தர்ப்பத்தைப் பாத்து றிலே தடியப் புடுங்கிக்கொண்டு ஓடி வெண்டிடுவாங்கள். பிரகடனம் திரும்பி நேபாளம் தான் போகோணும். அதனால தான் சண்டியனை இஞ்ச மொனிட்டராக்கியிருக்கு”

“நீ சொல்லிறதிலயும் விசயம் இருக்குத் தான். இல்லாட்டி இப்ப காவிகள் தாமரை மொட்டுகளோட பெரிய ஊர்வலமே நடத்தியிருக்கும்”

“பாத்தீங்களா. இப்ப சிங்களவர் மத்தியில இருக்கக்கூடிய அதி தீவிர இனவெறிக் குழுமாடு சரத் வீரசேகராவே “அட் லீஸ்ட் உலகத் தமிழர் பேரவை தனிநாடு கேட்கேல்லை” எண்டு இப்பிரகடனத்தை விமர்சிக்காம விட்டிருக்கு. அதுக்கு பிக்குமார் முன்னாலை நிக்கிறதுதான் காரணம். ஒரு சிங்களப் பேப்பர் தானும் எதிராக இதுவரை ஒண்டும் எழுதேல்லை. மகிந்த ராஜபக்ச தன்ர ஆதரவைத் தெரிவிச்சுப் போட்டேர் ஆனா எப்ப நாக்கைப் புரட்டுவாரோ தெரியாது. முஸ்லிம் தலைமை எல்லாரும் ஆதரவைத் தெரிவிச்சுப் போட்டினம். அமெரிக்க தூதுவர் பெண்மணியும் இதுக்காக வழிபாடு செய்திருக்கிறா. புத்த பிக்குமாரில உயர்சாதி அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள் பிரிக்காமல் ஓதிவிட்டினம். வேறென்ன வேணும்”

“அப்ப இது உலகத் தமிழர் பேரவைக்கு படு வெற்றி எண்டு சொல்லிற”

“‘ஒப்பந்தங்கள் எண்டிறது கிழித்தெறியப்படுகிறதுக்காக எழுதப்படுபவை’ எண்டிறது இலங்கைக்கே உரிய தனித்துவமான கோட்பாடு. இது உங்களுக்கு நல்லாய்த் தெரியும். அதே வேளை இரண்டு தமிழர் எதிர்க்காமல் விட்டால் அது தமிழ் அரசியல் இல்லை எண்டதும் உங்களுக்குத் தெரியும். இந்த நிலையில இவங்களை ஓட விடுகிறது தான் நல்லது எண்டு நான் நினைக்கிறன்”

“அப்ப ரணில், தான் ஜனாதிபதி தேர்தலில வெல்லிறதுக்கெண்டு போட்ட பிளான் எண்டிறதைப் பத்தி என்ன சொல்லிற?”

“அப்ப ஆரு வரவேணுமெண்டு நீங்க நினைக்கிறீங்க. நாமல் ராஜபக்ச அல்லது ஜே.வி.பி அல்லது சுரேஷ் பிரேமச்சந்திரன்?”

“வாய்ப்பே இல்லை ராசா”

“அது தான் யதார்த்தம். இந்தப் பிரகடனத்தை நல்லாய் உத்துப் பாத்தீங்களெண்டால் உலகத் தமிழர் பேரவை இப்ப ‘இலங்கைத் தேசியவாதிகள் போல’, சம்பந்தர் ஐயா போல கொடியை ஆட்டாமல், ‘கொடியை ஆட்டியிருக்கினம்’. இந்த மொழியைத்தான் சிங்களச் சனம் புரிஞ்சுகொள்ளும். பொருளாதர ரீதியில் இலங்கையை ‘நாம் இலங்கையர்’ முன்னேற்ற வேணும் எண்டு முழங்கியிருக்கினம். அதாவது “நீங்கள் நினைக்கிறது போல நாங்கள் உங்கள் எதிரிகளல்ல, அஞ்சற்க” எண்டு பக்கத்தில போய்ச் சொல்லியிருக்கினம். அதை அதியுச்ச சிங்களக் காவலர்களான புத்த பிக்குகளின் காதுகளில் பிரித்து ஓதியிருப்பது எண்டுதான் எடுக்க வேணும். இலங்கையில இது முதல் தடவையாக நடந்திருக்குது”

“ஏதோ நீயும் அவங்களோட சேந்துதான் தீர்மானம் எடுத்தது போலக் கதைக்கிற. சரி அப்ப பிரேமச்சந்திரன் சொல்லிறதுபோல 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றச்சொல்லி ஏன் இவை கேட்கேல்ல?”

“அவருக்கும் சரி, உங்களுக்கும்சரி 13 ஆவது திருத்தம் எண்டா என்னெண்டு விளங்கேல்லை. இந்த பிரகடனத்தில “ஏற்கெனவே அரசியமைப்பில இருக்கிற விடயங்களை நிறைவேற்ற முயற்சிகளை எடுக்கவேண்டும்” எண்டு சொல்லியிருக்கிறது என்னெண்டு நினைக்கிறீங்க? அது தான் 13 ஆவது திருத்தம். அது ஏற்கெனவே அரசியலமைப்பில இருக்கிற ஒண்டு”

“அப்ப நீ சொல்லிறதைப் பாத்தா மற்றவங்களுக்குப் பேர் வந்துவிடும் எண்டிறதுக்காகத் தான் இவை எதிர்க்கினம்”

“எதிர்க்கட்சி எண்டா எல்லாத்தையும் எதிர்க்கிறது எண்டுதான் அவைக்குப் படிப்பிச்சிருக்கு. நடுக்கடல், நாய் எண்டு ஏதோ சொல்லுவினம்”

“இது ‘வாறேர்…வாறேர் திரும்பவும் அடிவாங்கைத்தர வாறேர்’ எண்ட மாதிரிப் போகும் போல. நான் வாறன்.” வடிவேலர் கிளம்பினார்.