பிரேசில்: லூலாவின் மீள்வருகை – மகிழ்ச்சியில் அமசோன் வனம்!

சிவதாசன்

நடந்து முடிந்த இரண்டாம் சுற்றுத் தேர்தலில் லூலா என அழைக்கப்படும் லுயீஸ் இனாச்சியோ லூலா டா சில்வா ஜெயர் பொல்சனாறோவைத் தோற்கடித்திருக்கிறார். வெற்றி கணிசமானதாக இல்லாவிட்டாலும் (50.9%) இவ்வெற்றி மிக அவசியமானதும் காலப்பொருத்தமானதுமாகும்.

இவ்வெற்றி பல சங்கதிகளைச் சொல்கிறது. லூலா தனது ‘இடதுசாரிச்’ சங்கைப் பலமாக ஊதவில்லை. பிரேசிலின் ஏழைகளின் பரிதாப நிலைக்கு அமெரிக்க கூசா தூக்கியான பொல்சனாரோவையோ அல்லது அவரது எசமானான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையோ திட்டவில்லை. வெனிசுவேலாவையோ அல்லது இதர தென்னமெரிக்க இடதுகளையோ துணைக்கழைக்கவில்லை. அப்படியிருந்தும் வெற்றியீட்டியிருக்கிறார். அதற்கு காரணம் அவர் தன்னைக் கூடிய தூரம் வலப்பக்கத்துக்கு நகர்த்தியிருக்கிறார். அது ஒரு சங்கதி.

தென்னமெரிக்காவில் அதி பெரிய நாடு பிரேசில். மிகவும் அகன்ற ஏழை – பணக்கார இடைவெளியில் இந்தியாவுடன் போட்டியிடும் தகமையைக் கொண்ட ஒரே நாடு பிரேசில். ஆனாலும் அதனால் உலக அரங்கில் இந்தியாவின் நிலையைக்கூட எட்ட முடியவில்லை. ஏகாதிபத்திய சுரண்டலுக்குத் தேவையான அத்தனை கனிம, வன வளங்களையும் அப்பூமி சுமந்துகொண்டிருப்பதுவே காரணம். ஏற்கெனவே ஆட்சியிலிருந்தபோது லூலா தொழிலாளர்களை முதன்மைப்படுத்தியிருந்தார். அமெரிக்காவின் ஒரு மெதுமையான சதி மூலம் அவர் இறக்கப்பட்டு பொல்சனானாரோ பதவியில் அமர்த்தப்பட்டார். எனவே இந்தத் தடவை தொழிலாள மாட்டை விட்டுவிட்டு அமெரிக்க மாட்டை ஆடியும் பாடியும் கறந்திருக்கிறார். 49.1% வாக்குகளைப் பெற்ற பொல்சனாரோ தோல்வியை ஒப்புக்கொள்வதற்கு முன்னரே அமெரிக்க ஜனாதிபதி பைடனின் பாராட்டுக்கள் லூலாவின் மடியில் வீழ்ந்துவிட்டன. வழக்கம் போல ட்றம்ப் பாணியில் “வாக்கு மோசடி நடைபெற்றுவிட்டது, இத் தேர்தலை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை” என வெனிசுவேலாவில் செய்ததைப் போல பைடன் அடம்பிடித்திருக்கலாம், ஆனால் அவரும் அதைச் செய்யவில்லை. உலகம் போகிற போக்கில் சீனா, ரஸ்யாவுக்கு அதிக நண்பர்களைச் சேர்த்துவிடக்கூடாது என்ற யதார்த்த சிந்தனையாகவும் இருக்கலாம். இந்தத் தடவை தேர்தல் வாக்குச் சீட்டுகளில் ‘சோசலிசம்’ காணாமல் போயிருந்தது தற்செயலான விடயமல்ல என்பது இன்னுமொரு சங்கதி.

இத் தேர்தலில் பொல்சனாரோ ஒரு மிகச்சிறிய தோல்வியையே அடைந்திருக்கிறார். அதாவது அவரது தீவிர வலதுசாரி, மதசாரிகளின் வாக்குகள் எங்கும் போய்விடவில்லை. மாறாக லூலாவின் மத்தி நோக்கிய நகர்வு அமெரிக்காவைத் திருதிப்படுத்தியது போலவே பிரேசிலின் மத்தியதர வர்க்கத்தையும் ஈர்த்திருக்கிறது. லூலாவின் இந்த யதார்த்த நகர்வு நிரந்தரமாக இருக்குமானால் தென்னமெரிக்காவில் அமெரிக்கச் சதிகளுக்கு இனிமேல் அவசியமிராது. உலக அரங்கில் பிரேசிலுக்கான நியாயமான இடம் ஒதுக்கப்படும். செங்கொடிகளால் ஈர்க்கப்பட்ட இன்னும் சில நாடுகளும் இந்நகர்வுகளை மேற்கொள்ளும். அமெரிக்கா தனது வளங்களை சீன, ரஸ்ய எதிர்ப்புகளுக்குப் பாவிக்கலாம். லத்தின் அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார மேம்பாடு அமெரிக்க எல்லைகளில் லத்தீனோ மக்களைக் குவிக்காது. எப்பக்கமும் அமெரிக்காவுக்கு வெற்றியோ வெற்றி. இதுவும் ஒரு சங்கதி.

இத் தேர்தலில் லூலா செங்கொடியைத் தூக்காதது ஒரு மூலோபாயமா அல்லது பட்டறிவின்பாலோ தெரியாது. ஆனால் இலங்கை போன்ற கொடிகளைத் தூக்கியவுடன் உருக்கொண்டாடும் மக்களைக்கொண்ட நாடுகளுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டுமென்பதே எனது விருப்பம். எட்டு லட்சம் மக்களைக் கொன்ற இனக்கலவரத்தின் பின்னர் எழுந்த ருவாண்டாவை ஒரு யதார்த்தவாதி உலகம் வியக்கக் கட்டியெழுப்பியிருக்கிறார். உணர்வுகளுக்கல்ல யதார்த்தத்துக்கே முதலிடமென்ற துணிச்சல் மிகுந்த முன்னெடுப்பு பிரேசிலிலும் நடைபெற்றிருக்கிறது. இது பலரும் பொறாமைப்படும் சங்கதி.

என்னதான் இருந்தாலும் நம்மைச் சுவாசிக்க வைக்கும் பிரேசிலின் சுவாசப்பைகளுக்கு கோவிட் பொல்சனாரோவிடமிருந்து லூலா சற்றே விடுதலை வாங்கித் தருவாராகில் அவர் ஒரு புண்ணியவான். (Image Credit: ©  AP Photo/Andre Penner)