பிரேசில் தேர்தல்: இடதுசாரி லூலாவின் சமரசம்
மாயமான்
பிரேசில் ஜனாதிபதிக்கான முதலாவது சுற்றுத் தேர்தல்கள் அக்டோபர் 2 நடைபெற்றது. அதில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா 48% வாக்குகளையும் தற்போதைய ஜனாதிபதி ஜெயர் பொல்சனாறோ 43%மான வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். இறுதிச் சுற்றுத் தேர்தல் அக்டோபர் 30 நடக்கவிருக்கிறது.
லூலா டா சில்வா 2003 முதல் 2010 வரை பிரேசிலின் ஜனாதிபதியாகவிருந்தவர். லத்தின் அமெரிக்காவில் இடதுசாரிகளின் மீளெழுச்சியின் முகமாகப் பார்க்கப்படும் லூலா இந்தத் தடவை வெற்றியீட்டுவார் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவரது ஆட்சிக் காலத்தில் உழைக்கும் மக்கள் பல அனுகூலங்களை அனுபவித்தனர். உலகத்தின் சுவாசப் பை எனக்கூறப்படும் வனங்களும் வளங்களும் பாதுகாக்கப்பட்டன. சுதேசிய மக்களது உரிமைகள் பேணப்பட்டன. 2018 இல் ஆட்சிக்கு வந்த பொல்சனாரோ ஒரு தீவிர வலதுசாரி. அவர் ஆட்சியைப் பொறுப்பேற்றதும் லூலாவின் சமூக சீர்திருத்தங்கள் தூக்கியெறியப்பட்டன. வனங்கள் எரிக்கப்பட்டன. அமெரிக்க நிறுவனங்கள் வளங்களைக் கொள்ளையிட அனுமதிக்கப்பட்டன. சுதேசிகளின் கலாச்சார /இனவழிப்பு துரிதப்படுத்தப்பட்டது.
பிரேசிலின் உழைக்கும் மக்கள் கட்சியின் ஸ்தாபகரான லூலா இப்போது மாறிவிட்ட ஒருவர். தனது இடதுசாரிக் கொள்கையிலிருந்தும் மத்தியை நோக்கி நகர்ந்திருக்கிறார். அது ஒரு ய்தார்த்தமான நகர்வு எனப் பேசப்படுகிறது. கொடுமையான அமெரிக்க வலதுசாரி நாசகாரச் சூழலில் தப்பிப் பிழைப்பதும் ஒரு தந்திரோபாய நகர்வு என்பதைப் பல லத்தீன் அமெரிக்க அரசியல் தலைவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். லூலாவுக்கும் வேறு வழியில்லை. பொல்சனாரோவை வீட்டுக்கு அனுப்புவது தான் மக்களின் முதற் கடமை. அது நிறைவேறுவதற்கான சாத்தியங்களுண்டு எனக் கூறப்படுகிறது.

உலகின் இயக்கச் சமநிலையைப் பேணுவதற்கென அனுப்பப்பட்ட கோவிட் பெருந்தொற்று தனது கடமையைச் சரியாகச் செய்திருக்கிறது. கோவிட் ஒழிப்பின் பேரில் பொல்சனாரோ பல வலதுசாரித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். பல்லாயிரக் கணக்கான ஏக்கர்கள் வனங்கள் அழிக்கப்பட்டு பெரு நிறுவனக்களுக்கு தாரைவார்க்கப்பட்டன. சுரங்க நிறுவனங்கள் நிலங்களைத் தோண்டி கழிவுகளைக் ஆறுகளில் விட்டதால சுதேகளின் வாழ்வு நாசமாக்கப்பட்டது. உலகின் எதிர்ப்பை உதாசீனம் செய்த பொல்சனாரோவுக்கு அமெரிக்க முதலாளித்துவம் முண்டு கொடுத்தது. இதையெல்லாம் மீறி கோவிட் தனது இருப்பை நிரூபித்தது. அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் கூட பொல்சனாரோவின் கொள்கைகளை விமர்சிக்க ஆரம்பித்தனர். தேர்தலில் வெல்வதற்காகவாவது தீவிர இடதுசாரிக் கொள்கைகளைக் கைவிட்டு நடுவுக்கு நகருமாறு லூலாவுக்கு ஆலோசனைகளை வழங்கினர். லூலாவின் மிதவாதம் இப்போ அமெரிக்காவில் புகழப்படும் ஒன்றாக இருக்கிறது. லூலா இப்போது அமெரிக்காவின் ‘எங்களில் ஒருவாராக’ ஆக்கப்பட்டிருக்கிறார். இதுவும் அமெரிக்காவின் ஒரு ராஜதந்திர நகர்வாகவும் இருக்கலாம். மாற்றத்தின் தேவைக்காக அதைச் சகித்துக்கொள்ள லூலா தயார் எனக் கருதப்படுகிறது. லத்தின் அமெரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைக் கைகழுவ அமெரிக்கா தயாரில்லை.
பெரும்பாலான பிரேசிலியர்கள் பொல்சனாரோவின் மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். ராய்ட்டர் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் லூலாவுக்கு ஆதரவாக 51% மக்களும், பொல்சனாரோவுக்கு ஆதரவாக 43% மக்களும் வாக்களித்திருக்கிறார்கள். அக்டோபர் 30 அன்று லூலா பிரேசிலின் ஜனாதிபதியாக வருவார் எனக் கூறப்படுகிறது. இம் மாற்றத்திற்கான காரணம் மக்களின் மனங்களில் மட்டுமல்ல லூலாவின் கொள்கை நகர்விலும் தங்கியிருக்கிறது.
இருப்பினும் பொல்சனாரோவை எளிதில் ஒதுக்கிவிடவும் முடியாது. ‘Tropical Trump’ என அழைக்கப்படும் அவருக்கு ஆதரவாக வலதுசாரிகள் மேலும் தீவிரமாக உழைக்கலாம். தீவிர வலதுசாரிகளின் எழுச்சி உலகமெங்கும் முடுக்கப்பட்டு வரும் காலமிது. நாமுண்டு நமது சோலியுண்டு ஒதுங்கியிருந்த இவ்வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிப்பு நிலையங்களுக்குப் படையெடுக்கிறார்கள். ட்றம்பின் வருகை அதற்கு வழிசெய்திருக்கிறது. ஜோ பைடன் போன்றோரது சந்தர்ப்பவாத மிதவாதத்தையும் அது அடித்துச்சென்றுவிடும் ஆபத்து தோன்றியிருக்கிறது. எனவே லூலாவுக்கு ஆதரவான இன்றைய அமெரிக்க கோஷங்கள் பைடன் போன்றோரின் ஒரு தற்காப்பு நடவடிக்கை. எனவே லூலா வெல்வார். அமசோன் வனங்களைப் பாதுகாக்க எப்படியான சமரசமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.,