பிரேசில் | சுதேசிகளைக் கொன்றொழிக்கும் கொறோணாவைரஸ்

பிரேசில் | சுதேசிகளைக் கொன்றொழிக்கும் கொறோணாவைரஸ்

Spread the love

அமசோன் மழைக்காடுகளில் வசித்துவரும் சுதேசிகளில் கொறோணாவைரஸ் நோய்த்தொற்று மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது. பிரேசிலின் அராரா பகுதியில் வாழும் சுதேசிகளில் 46 % மானோர் நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொறோணவைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் 1 மில்லியனுக்கு மேலாகவும், இறந்துபோனவர்கள் 47,700 எனவும் ஜோன் ஹொப்கின்ஸ் தரவு மையம் தெரிவிக்கிறது. குடியேறிய பிரேசில்வாசிகளின் இறப்பு வீதம் 6.4% ஆகவிருக்கும்போது, அங்குள்ள சுதேசிகளின் இறப்பு வீதம் 12.6 % த்தை எட்டியுள்ளது இம் மையம் மேலும் தெரிவிக்கிறது.

கச்சோஈறா சேகா பிரதேசத்தில் வாழும் அராரா குலத்தைச் சேர்ந்த 121 பேரில் 46% மானோருக்கு நோய் தொற்றியுள்ளது எனவும், நகரிலிருந்து 3 நாட்கள் தூரத்திலிருக்கும் இக் கிராமத்தில் மருந்துகளோ அல்லது சுவாசக் கருவிகளோ இல்லை எனவும் சுதேசிகளின் உரிமைகளுக்காகப் பாடுபட்டுவரும் Survival International என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.



1987 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அராரா குலம் இன்னும் வெளியார் நோய்களுக்கு அறிமுகமாகவில்லை. வெளியாரிடமிருந்து தம்மைப் பாதுகாக்கும்படி அவர்கள் கேட்டு வருகின்றார்கள்.

அராரா குலம் வாழ்ந்துவந்த மழைக்காடுகள் சமீப காலங்களில் மும்முரமான காடழிப்புக்குள்ளாகியிருந்தது. ஜனவரி 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலப்பகுதியில், 8,000 ஹெடெயர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது கொறோனாவைரஸ் தனது கைங்கரியத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது.

பிரேசில் மழைக்காடுகளில் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக சுதேசிய குலங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது அவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 900,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

பிரேசிலிந் தற்போதய ஜனாதிபதி பொல்சொனாறோ, சுதேசிகளின் நிலங்களும் அவர்களது காலச்சார உரிமைகளும் பறிக்கப்பட்டு அவர்கள் முற்று முழுதாக இதர குடியேறிகளுடன் சேர்த்துவிடப்படவேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக் இருக்கிறார். எனவே சுதேசிகளைக் காப்பாற்ற அரசாங்கத்திடமிருந்து எந்தவித உதவிகளும் கிடைப்பதாயில்லை.

Print Friendly, PDF & Email