பிரேசிலின் உதைபந்தாட்ட நாயகன் பெலே 82 ஆவது வயதில் புற்றுநோயால் மரணம்
உதை பந்தாட்ட உலகின் தலைசிறந்த ஆட்ட நாயகனாகத் திகழ்ந்த பெலே என அன்போடு அழைக்கப்பட்ட எட்ஸன் அராந்தேஸ் டோ நசிமென்ரோ தனது 82 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக மரணமானார். மூன்று தடவைகள் பிரேசில் நாட்டிற்கு உலக கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்த பெலே நேற்று (28) சவோ போலோவில் காலமானார். இவர் சில காலமாக பெருங்குடல் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு சவோ போலோ அல்பேர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ மனையில் கடந்த சில வாரங்களாகச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனளிக்காமையால் இறந்துபோனதாகவும் கூறப்படுகிறது.
உதைபந்தாட்ட உலகின் முடிசூடா நாயகனாகத் திகழ்ந்த பெலே தனது 17 ஆவது வயதில், 1958 இல் சுவீடனில் நடைபெற்ற உலகக் கிண்ணத்துக்கான போட்டியை பிரேசிலுக்காக வென்று கொடுத்தார். இதைத் தொடர்ந்து இறக்கும்வரை அவர் பிரேசில் நாட்டின் அதிகம் துதிக்கப்பட்ட விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தார். இச்சுற்றுப் போட்டியின் அரை இறுதியில் பிரான்ஸுக்கு எதிராக தொடர்ந்து மூன்று கோல்களையும் (ஹட்றிக்) பின்னர் இறுதிப் போட்டியில் சுவீடனுக்கு எதிராக இரண்டு கோல்களையும் போட்டு கிண்ணத்தைத் தட்டிச் சென்றிருந்தார். அதற்கு அடுத்ததாக 1962 இல் சிலியில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் உடற் காயம் காரணமாக விளையாடவில்லை. தொடர்ந்து 1970 இல் மெக்சிக்கோவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசிலுக்காக கிண்ணத்தைத் தட்டிச் சென்றிருந்தார்.
பெலே 1956 இல், அவரது 15 ஆவது வயதில் சவோ போலோ வின் கிளப்புகளில் ஒன்றான சான்ரோசில் இணைந்து தனது உதைபந்தாட்ட தொழிலை ஆரம்பித்தார். இவர் அங்கு விளையாடியபோது சான்ரோஸ் ஆறு தடவைகள் லீக் சம்பியனாகவும் 1974 இல் இரண்டு தடவைகள் தென்னமெரிக்க, உலக சம்பியனாகவும் தேறியிருந்தது. 92 ஆட்டங்களில் 77 கோல்களை ஈட்டிக் கொடுத்துவிட்டு 1971 இல் பிரேசிலின் தேசிய குழுவிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் நியூ யோர்க் கொஸ்மோஸ் கிளப்பிற்காக விளையாடிவிட்டு 1977 இல் முற்றாக ஓய்வு பெற்றார்.

விளையாட்டுக்கு அப்பால் பெலேயின் சமூக பங்களிப்பும் தொடர்ந்தது. 1992 இல் சுற்றுச் சூழலுக்கான ஐ.நா. தூதுவரகாவும் 1994 இல் யுனெஸ்கோவின் நன்னம்பிக்கைத் தூதுவராகவும் பணியாற்றியிருந்தார். இவரது சேவைகளை மெச்சி 1997 இல் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கெளரவ பிரபுப் பட்டத்தை வழங்கியிருந்தார். பிரான்சின் உதைபந்தாட்ட சஞ்சிகையான ‘பிரான்ஸ் ஃபுட்போல்’ இனால் ஐரோப்பிய விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த வருடாந்த விருதான ‘தங்கப் பந்து’ (Ballon D’or) முதல் தடவையாக 2015 இல் பெலேயிற்கு வழங்கப்பட்டது மட்டுமல்லாது அத்ற்கு முந்திய 7 வருடங்களுக்கான விருதும் அவருக்கு ஒன்றாக வழங்கப்பட்டது. றொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்கும் இவ் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
2021 இல் பெலேயிற்கு பெருங்குடலில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய வயது காரணமாக சிகிச்சைகள் பலனளிக்காது டிசம்பர் 28, 2022 இல் மரணமானார். (Image Credit: Getty Images)