Spread the love

லண்டனில் தமிழ் ஆர்ப்பாட்டக்காரருக்குக் கழுத்தை வெட்டுவேன் எனச் சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கா பெர்ணாண்டோ உட்பட 177 இராணுவ அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கொடுத்துக் கெளரவித்துள்ளார் கோதாபய ராஜபக்ச.

ஒரு ஃபீல்ட் மார்ஷல் இன்னுமொரு லெப்டினண்ட் ஜெனெரலுக்கு செய்வதுமில்லை, நான் இன் நிகழ்வில் பங்கு கொள்ளப் போவதுமில்லை

ஃபீல்ட் மார்ஷல் சரத் ன்சேகா

பெருந்தொகையான பதவி உயர்வுகள் ஏக காலத்தில் வழங்கப்பட்டமை இலங்கையின் சமீப கால வரலாற்றில் இதுவே முதலாவதாகும். போர்க்குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவினால் பயணத் தடை விதிக்கப்பட்ட இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன ஆகியோரின் பரிந்துரைகளின்படி இப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.

இன்று (மே 19) நடைபெற்ற 11 வது தேசிய வீரர் தினக் கொண்டாட்டத்தின்போது கோதாபய ராஜபக்ச இப் பதவி உயர்வுகளை வழங்கினார்.

“இலங்கையின் பாதுகாப்பு படைகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சர்வதேச அமைப்புகளிலிருந்து இலங்கையை வெளியேற்ற நான் தயங்கப் போவதில்லை” என பத்தரமுல்லவில் நடைபெற்ற இந் நிகழ்வில் பேசிய கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


நிகழ்வைப் புறக்கணித்த சரத் பொன்சேகா

இதே வேளை, முன்னாள் இராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நிகழ்வில் பங்குபற்ற வைத்து கோதாபயவுக்கு ‘சல்யூட் அடிக்க’ வைக்க வேண்டுமென இன் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்கள் பலரும் முயற்சித்ததாகவும் அது கடைசிவரை நிறைவேறவில்லை எனவும் பேசப்படுகிறது.

பொதுஜன பெரமுன கட்சிக்காரரும், கோதாபயவின் கீழ் அணிதிரண்டுள்ள முன்னாள் இராணுவத்தினரும் சரத் பொன்சேகா சல்யூட் செய்வதைப் படமெடுத்து தமது பிரச்சாரங்களுக்குப் பாவிக்கவிருந்தனரென்றும் சில கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளீயிட்டுள்ளன.

மஹிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பாளர் றோஹன் வெலிவித சரத் பொன்சேகாவை இன் நிகழ்வுக்கு அழைக்கப் பல தடவைகள் தொலைபேசி அழைப்பின் மூலம் முயற்சித்ததாகவும் ஆனால் பொன்சேகாவை அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சரத் பொன்சேகா ” ஒரு ஃபீல்ட் மார்ஷல் இன்னுமொரு லெப்டினண்ட் ஜெனெரலுக்கு செய்வதுமில்லை, நான் இன் நிகழ்வில் பங்கு கொள்ளப் போவதுமில்லை” என அவரது சகபாடி ஒருவருக்குத் தெரிவித்ததாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


Print Friendly, PDF & Email
Related:  மங்கள சமரவீரவை குற்ற விசாரணைப் பிரிவு 5 மணித்தியாலங்களுக்கு விசாரணை!