India

பிரியாணியில் கலக்கப்படும் நறுமணப் பொருட்கள் ‘ஆண்மையைப்’ பாதிக்கிறதாம்

வங்காளத்தில் இரண்டு உணவகங்கள் மூடப்பட்டன

ரபீந்திரநாத் கோஷ்

பிரியாணியில் கலக்கப்படும் நறுமணப் பொருட்கள் (spices) ஆண்மைத் தன்மையைக் குறைப்பதாகக் குற்றஞ்சாட்டி மேற்கு வங்காளத்தில் இரண்டு உணவகங்கள் பலாத்காரமாக மூடப்பட்டுள்ளன. தினமூல் காங்கிரஸ் தலைவர் ரபீந்திர நாத் கோஷினது உத்தரவின் பேரில் இக்கட்டளைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதென அறியப்படுகிறது. இவ்விரண்டு பிரியாணிக் கடைகளும் அரசாங்க அனுமதியின்றி நடத்தப்பட்டன எனவும் கோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரியாணி உணவு தமது ஆண் தன்மையைப் பாதித்துவிட்டதாகப் பலர் தனக்கு முறைப்படு செய்திருந்ததன் காரணத்தால் இந்த முடிவை எட்டியதாக மமதா பனேர்ஜி அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சரான கோஷ் தெரிவித்துள்ளார். “தமது உடலுறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் இக் கடைகளில் விற்கப்படும் பிரியாணிகளில் கலக்கப்படும் பொருட்கள் சந்தேகத்துக்குரியவை எனவும் கடந்த சில நாட்களாக இப்பகுதியிலுள்ள மக்கள் கொடுத்த முறையீடுகளினால் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என கோஷ் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

இம்முறையீடுகளை அடுத்து சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர் மேற்கொண்ட பரிசோதனைகளின்போது இரண்டு உணவகங்கள் அனுமதியின்றி செயற்பட்டதால் அவற்றை மூடுவதற்கு நகராட்சி அலுவலகம் முடிவுசெய்தது எனக் கூறப்படுகிறது.