பிரியந்தவைப் பாதுகாக்க முயற்சித்த பாகிஸ்தானியருக்கு சிவிலியன் உயர் விருது – பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு
பாகிஸ்தானில் மத வெறியர்களால் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தியவதனகே பிரியந்தவைத் தாக்குதலினின்றும் பாதுகாக்க முயற்சித்த மாலிக் அட்னான் என்னும் பாகிஸ்தானியருக்கு பாகிஸ்தானிய அரசின் இரண்டாவது அதி உயர் சிவிலியன் விருதான ‘தம்கா இ ஷுயாத்’ விருதை அளிக்கவுள்ளதாக பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

பிரியந்த மீது வெறியர்கள் தாக்கும்போது தான் அத்தாக்குதல்களைப் பெற்றுக்கொண்டு தன்னுடலைக் கவசமாக்கி அவரைப் பாதுகாக்க அட்னான் முயற்சித்தார் எனவும் தாக்குதல் மிகவும் மோசமாக இருந்ததால் அவர் அம்முயற்சியைக் கைவிடவேண்டி ஏற்பட்டுவிட்டது எனவும் கூறப்படுகிறது.
“தன்னுயிருக்கு ஆபத்து விளையக்கூடிய நிலையிருந்தும், பிரியந்த தியவடனவின் உயிரைப் பாதுகாக்கத் துணிச்சலுடனும் வீரத்துடனும் பாடுபட்ட மாலிக் அட்னான் அவர்களுக்கு ‘தம்கா இ ஷுயாத்’ விருதைத் தேசத்தின் சார்பாக அளித்துக் கெளரவிக்க விரும்புகிறேன்” என பிரதமர் கான் த்ன் ருவீட் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
ஆலையொன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த தியவதனகே பிரியந்தா கடந்த வெள்ளியன்று சில மத வெறியர்களால் தாக்கப்பட்டுப் பின்னர் வீதியோரத்தில் வைத்துத் தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்டிருந்தார். ஆலையில் இஸ்லாமிய மதம் சம்பந்தமான வாசகங்கள் கொண்ட சுவரொட்டியைக் கிழித்தெறிந்து தமது மதத்தை நிந்தனை செய்தார் என்ற காரணத்துக்காக அவர் கொல்லப்பட்டார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பிரியந்த மீது மத வெறியர்கள் தாக்குதலை நடத்தும்போது இடையில் புகுந்து அவரைப் பாதுகாக்க மாலிக் அட்னான் முயற்சித்திருந்தார் எனவும் தாக்குதல் மிக மோசமான நிலையை எய்தியதும் அவரால் தொடர்ந்தும் தாக்குப்பிடிக்க முடியாமையால் முயற்சியைக் கைவிடவேண்டி ஏற்பட்டது எனவும் தெரியவருகிறது. மாலிக் அட்னான் பிரியந்த பணிபுரிந்த ஆலையில் பணிபுரிபவராவார்.
பிரிய்நத கொல்லப்பட்டபின்னர் வெறியர்கள் அவரது உடலுக்குத் தீமூட்ட முயற்சித்தபோது அவர்களைக் கும்பிட்டு தீவைக்க வேண்டாமென இன்னுமொருவர் கெஞ்சினார் எனவும் அவரைப் புறம் தள்ளிவிட்டு அவ்வெறியர்கள் உடலைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள் எனவும் சமூக வலைத்தளங்களை மேற்காட்டிச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார் எனவும் அதே வேளை பாக்கிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரும் இச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்து உரிய தண்டனைகளைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இச் சம்பவம் தொடர்பாக இதுவரை 13 முக்கிய சந்தேகநபர்கள் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவருகிறது. அதே வேளை பிரியந்தவின் அஸ்தி இறுதிக் கிரியைகளுக்காக இன்று இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.