பிரியங்கா சொப்றாவை யூனிசெப் நல்லெண்ண தூதுவர் கடமையிலிருந்து அகற்ற வேண்டும் – பாகிஸ்தான் வலியுறுத்தல்!
ஐ.நா.சர்வதேச குழந்தைகள் அவசரகால நிதிய (UNICEF) அமைப்பின் நல்லெண்ண தூதுவர் கடமையிலிருந்து முன்னாள் அழகுராணி பிரியங்கா சொப்ராவை அகற்ற வேண்டுமெனப் பாகிஸ்தான் வற்புறுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் போர் மற்றும் இந்திய அரசுக்கான அவரது ஆதரவு நிலைப்பாடு அவர் எடுத்துள்ள கடமையைப் பரிகாசத்துக்குள்ளாக்குகிறது, எனப் பாகிஸ்தான் கருதுவதால் அவரை உடனடியாகக் கடமையிலிருந்து நீக்க வேண்டும் எனப் பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் ஷிறீன் மசாரி, யூனிசெப் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹென்றியெற்றா போர் க்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் முறுகல் நிலையிலுள்ள இச் சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைப் பகிரங்கமாகத் தெரிவித்தன் மூலம் சொப்ரா நடுநிலை தவறிவிட்டார் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
” இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு அமைதியையும் நல்லெண்ணத்தையும் பேண வேண்டிய செல்வி சொப்ராவின் நிலப்பாட்டுக்கு எதிரானது. சொப்ரா ஐ.நா. வின் குழந்தைகள் நிதியத்த்இன் நல்லெண்ணத் தூதுவர். சர்வதேச விதிகளை மீறிய மோடியின் அரசாங்கத்தை ஆதைக்கும் நிலைப்பாட்டை எடுப்பது ஐ.நா.வின் மீதான நம்பகத் தன்மைக்குக் குந்தகம் விளைவிக்கும்” என மசாரி தன் கடிதத்த்இல் குறிப்பிட்டுள்ளார்.
” அவர் உடனடியாக நீக்கப்படாவிட்டால் சமாதானத்தைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட அப் பதவி உலகெங்கும் பெரிகசிக்கப்படும் ஒன்றாகிவிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோணியோ குட்டெறெஸ் அவர்களின் பேச்சாளர் ஸ்டெபேன் டுஜாறிக், “ஐ.நா. வின் நல்லெண்ணத் தூதுவர் அவர் சார்ந்த யூனிசெப் விவகாரங்களில் மட்டும் பக்கசார்பற்றவராக இருந்தால் போதுமானது. தனிப்பட்ட விடயங்களில் அவர் தனது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் தெரிவிப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கிறார். அவரது தனிப்பட்ட கருத்துக்கள் அவர் சார்ந்த நிற்வனத்தைப் பிரதிபலிக்காது” எனத் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி 26 அன்று பாகிஸ்தான் கிராமமொன்றின் மீது இந்தியா குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து பிரியங்கா சொப்ரா “ஜெய் ஹிந்த் #இந்தியப்படைகள் என கீச்சல் செய்தியை அனுப்பியிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.