News & AnalysisSri Lanka

பிரியங்கா ஃபெர்னாண்டோவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு உண்டு – லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

லண்டனில் தமிழர்களால் நடத்தப்பட்ட ஊர்வலத்தின்போது ‘கழுத்தை வெட்டுவேன்’ எனச் சைகை காட்டிய இலங்கை தூதரக பாதுகாப்பு அதிகாரியாகிய பிரியங்கா ஃபெர்னாண்டோவுக்கு இராஜதந்திர விதிவிலக்கு (diplomatic immunity) வழங்கப்பட முடியாதென கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லுபடியாகாதென லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேஜர் ஜெனெரல் பிரியங்கா ஃபெர்ணாண்டோ லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது வெளியே தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். அப்போது அவர் தமிழர்களை நோக்கி ‘கழுத்தை வெட்டுவேன்’ எனச் சைகை காட்டியது கொலை மிரட்டலுக்குக்குச் சமமானது என அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இராஜதந்திர விதிவிலக்கு அந்தஸ்து இக்குற்றத்திலிருந்தும் தன்னைப் பாதுகாக்கிறது என வாதாடிய அவரது தரப்பைக் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியிருந்தது. இத் தீர்ப்புக்கு எதிராக ஃபெர்னாண்டோ மேற்கொண்ட மேந்முறையீட்டைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த லண்டன் உயர்நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாது என அவழக்கைத் தள்ளுபடிசெய்து தீர்ப்பளித்துள்ளது.

“1961 இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியென்னா ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கையும், பிரித்தானியாவும் ‘நாடுகள்’ என்ற அந்தஸ்தைக் கொண்டவையாகையால் ஃபெர்னாண்டோ இராஜதந்திர அந்தஸ்துக்கு முற்றிலும் உரித்துடையவர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.