NewsWorld

பிரித்தானிய மஹாராணி மீதான கொலை முயற்சி – இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் கைது!

பிரித்தானிய மஹாராணி எலிசபெத் II தங்கும் விடுமுறை இல்லமான விண்ட்சர் அரண்மனைக்குள் அம்பு வில்லுடன் நுழைந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தாரென அவரது தந்தையார் தெரிவித்துள்ளார்.

பேர்க்‌ஷயரில் அமைந்திருக்கும் அரண்மனைக் கோட்டையின் சுவர்மீது ஏறி உள்ளே நுழைந்த 19 வயது ஜஸ்வந்த் சிங்க் தற்போது பிரித்தானிய மனநோய்ச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் எனவும் இச் சம்பவம் குறித்து அவரது தந்தையார் ஜாஸ்பில் ஷெய்ல் நடைபெற்ற தவறுக்காக வருந்துவதாகவும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.



கடந்த 9 மாதங்களில், கோட்டை மதிலைத் தாண்டி விண்ட்சர் மாளிகை வளவுக்குள் அத்துமீறிப் புகுந்த வெளியார்களில் ஜஸ்வந்த் சிங்க் ஐந்தாவது நபராவார். அன்றய தினம் 95 வயதுடைய எலிசபெத் மஹாராணி கோட்டைக்குள் இருந்தார் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி ஒன்றை ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸ் பார்வையிட்டுவருகிறதென்றும் அதில் தன்னை ஒரு இந்திய சீக்கியர் எனக் கூறிக்கொள்ளும் முகமூடியணிந்த ஜஸ்வந்த் சிங்க், 1919 இல் இந்தியாவில் பிரித்தானிய பொலிசரினால் மேற்கொள்ளப்பட்ட ஜாலியன்வாலா படுகொலைகளுக்குப் பழிவாங்குமுகமாக மஹாராணியைக் கொலைசெய்ய வந்தேன் எனக் கூறுவதாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் பெற்றோர்கள் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளர்கள் எனவும், ஹாம்ப்ஷையரிலுள்ள நோர்த் பட்டெஸ்லி என்னும் கிராமத்தில் வசதியான வீடொன்றில் சந்தேகநபர் அவரது சகோதரி, பெற்றார் சகிதம் வசித்து வந்தார் எனவும் கூறப்படுகிறது.

“ராஜ குடும்பத்தின் அரசியான மாஹாராணியைக் கொலைசெய்ய நான் முயல்வேன். 1919 ஜாலியன்வாலா படுகொலைக்கு வஞ்சம் தீர்ப்பதற்காகவே இந்த முயற்சி. அதில் கொல்லப்பட்ட, அவமானப்படுத்தப்பட்ட, அவர்கள் சார்ந்த இனத்தின் காரணமாக விலக்கி வைக்கப்பட்ட அனைவருக்குமான பழிவாங்கல் இது. நான் ஒரு இந்திய சீக்கியன், ஒரு சித். எனது முந்தைய பெயர் ஜஸ்வந்த் சிங்க். இப்போது எனது பெயர் டார்த் ஜோன்ஸ்” என முகமூடியணிந்தபடி அந்த இளைஞர் கூறுவதாக ஸ்நாப்ட்சட் காணொளியில் காட்டப்படுகிறது. ‘ஸ்டார் வார்ஸ்” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வில்லனாக வருபவர் சித் என அழைக்கப்படுகிறார்.



“நான் யாருக்கும் தவறு செய்திருந்தாலோ அல்லது பொய் சொல்லியிருந்தாலோ அதற்கு மன்னிப்புக் கோருகிறேன்” என்ற குறுஞ் செய்தியொன்றும் இக் காணொளியுடன் இணைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். பாடசாலையில் மிகவும் கெட்டித்தனமான மாணவராக இருந்தார் எனவும் ஒருபோதும் இனத்துவேஷ உணர்வுகளை வெளிப்படுத்தியவரல்ல எனவும் ஜஸ்வந்த் சிங்கின் பாடசாலை நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

விசாரணை தொடர்கிறது.