World

பிரித்தானிய மகாராணி விரைவில் முடி துறக்கலாம்?

70 வருடங்களாக ஆட்சி பீடத்திலிருந்துவரும் பிரித்தானிய முடிக்குரிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நிலை காரணமாகத் தனது முடியை மூத்த இளவரசர் சார்ள்சிடம் கையளிக்கவிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதி நீண்ட காலமாக முடியாட்சியைத் தக்கவைத்துக்கொண்டவர் என்ற சாதனையைக் கொண்டுள்ள மகாராணிக்கு இப்போது 96 வயது. சமீபத்தில் அவர் கோவிட் தொற்றுக்கு ஆளாகியதிலிருந்து அவரது ஆரோக்கியத்தில் தளர்ச்சி ஏற்பட்டு வருவதாகவும் இதன் காரணமாகச் சில அரச காரியங்களில் அவர் பங்குபற்றாது விட்டிருந்தார் எனவும் கூறப்பட்டது.

இதன் காரணமாக அவர் தனது முடியை இளவரசர் சார்ள்ஸுக்குத் தந்துவிட்டு ஓய்வு பெறவிருப்பதாகவும் இளவரசருக்கு முடி சூட்டுவதற்கு அதிகாரிகள் ஆயத்தங்களைச் செய்துவருவதாகவும் பேசப்படுகிறது.

இளவரசர் சார்ள்ஸுக்கு முடி சூட்டப்பட்டால் அவர் ‘மூன்றாவது சார்ள்ஸ் மாகாராஜா’ என அழைக்கப்படுவார்.

“மகாராணியாரின் மறைவுக்குப் பின்னர் துக்ககரமான சூழ்நிலையில் முடிசூட்டப்படுவதை விட அவர் உயிரோடு இருக்கும்போதே இளவரசருக்கு முடிசூட்டப்பட்டால் அது உலகையே மகிழ்வூட்டக்கூடிய காட்சியாகவிருக்கும்” என ராஜகாரியங்களில் விற்பன்னராகவிருக்கும் டானியெல்லா எல்ஸெர் தெரிவித்துள்ளார்.

அவரது ஆட்சியில் 70 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின்போது “இளவரசர் சார்ள்ஸ் மகாராஜாவாகும்போது அவரது மனைவி கமிலா ராணி துணைவி (Queen Consort) என அழைக்கப்படவேண்டும்” என மகாராணியார் எனக் கூறியிருந்தது அவர் விரைவில் முடி துறக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராணியின் கணவர், காலம் சென்ற இளவரசர் பிலிப்பிற்கு அரச பட்டத்தைத் தருவதற்கு பிரித்தானிய நிர்வாகம் விருப்பப்படவில்லை என்பதும், ராஜ குடும்பத்துக்குள் வெளியார் திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனவும் நீண்டகால வழக்கம். ‘டச்சஸ் ஒஃப் கோர்ன்வால்’ என்ற பட்டத்துடன் இப்போது இளவரசர் சார்ள்ஸின் மனைவியாக இருக்கும் கமிலா ராஜ குடும்பத்தில் பிறந்தவரல்ல என்பது குறிப்பிடத் தக்கது.