பிரித்தானிய மகாராணியின் கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் காலமானார்
பிரித்தானிய மகாராணியின் கணவர் எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் நேற்று (வெள்ளி 09) காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
பிரித்தானிய முடியின் வரலாற்றில் மிக நீண்டகால ஆட்சியில் இருப்பவர் எனக் கருதப்படும் (69 வருடங்கள்) மகாராணி எலிசபெத்தின் கணவராக இருந்து தனது 99 வது வயதில் மரணமடைந்திருக்கிறார்.
மகாராணியின் இரண்டாவது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான விண்ட்சர் கோட்டையில் குடும்பத்தினர் மத்தியில் அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.
கிரேக்க அரச குடும்பத்துத் தந்தைக்கும், டென்மார்க் அரச குடும்பத்து தாய்க்கும் ______ இல் பிறந்த இளவரசர் பிலிப், 1947 இல் எலிசபெத் மகாராணியைத் திருமணம் செய்தார். மகாராணியாரின் ஆட்சிக்குத் துணையாக இருந்துவந்தாலும் அவருக்கு உத்தியோக பூர்வமான பதவி எதையும் கொடுக்காமல் பிரித்தானிய ராஜ குடும்பம் அவரை ஒரு இரண்டாம்தரப் பிரஜையாகவே நடத்தி வந்தது என அறியப்படுகிறது. மகாராணியார் இதற்கு காரணகாக இருக்காவிடினும் அவரது குடும்பம் குறிப்பாக அவரது மாமனார் மவுண்ட்பாட்டன் பிரபு போன்றோர் பிரித்தானிய மேலோங்கித் தனத்தை எப்போதும் கடைப்பிடித்து வந்ந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரது வாழும் காலத்தில் அவருக்கு உரிய பதவி எதுவும் வழங்கப்படவில்லை. பிரித்தானிய தேச வழமையின் படி கணவனது குடும்பப்பெயரை மனைவி எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் மகாராணியார் அதைச் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
1997 இல் அரச தம்பதிகள் தமது 50வது திருமண வருட பூர்த்தியைக் கொண்டாடும்போது “எனது இத்தனைநாள் இருப்புக்கும் வலுவாகவும் ஆதாரமாகவும் இருந்து வருபவர் இளவரசர் பிலிப்” என மாகாராணியார் புகழ்ந்திருந்தார்.
நோய்த் தொற்று மற்றும் இருதய சிகிச்சைக்காக ஏழாம் எட்வார்ட் மகாராஜா மருத்துவமனையில் மருத்துவமனையில் பெப்ரவரி 16 இல் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நான்கு வாரங்களின் பின்னர், மார்ச் 16 இல் குடும்பத்தின் இரண்டாவது வாசஸ்தலமான விண்ட்சர் மாளிகைக்குத் திரும்பியிருந்தார். அவரது நோய் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லையாயினும், அது கோவிட் சம்பந்தப்பட்டதல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
குணாதிசயம்
தனது மனதில் படுவதை வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசும் பண்புடையவர் எனபதால் அவர் பல தடவைகளில் பிரித்தானிய வளைவு, சுளிவு கலாச்சாரத்தோடு இணைந்துபோக முடியாமலிருந்தார். அவர் பல இடங்களில் கூறிய கருத்துக்கள் பிரித்தானிய ராஜ குடும்பத்தை இக்கட்டான நிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. பிணம் தின்னிக் கழுகுகள் போல எப்போதும் ராஜ குடும்பத்துக் கதைகளுக்காகக் காத்துக்கிடக்கும் பிரித்தானிய ஊடகங்கள் எப்படி மேர்கன் மாக்கிளைப் போட்டுத் துவட்டி எடுக்கின்றனவோ அதே போன்றுதான் இளவரசர் பிலிப்பின் வாழ்வின் பெரும்பாகமும் கழிந்தது. அவரது மனத்தாங்கல்களை அவர் ஒருபோதும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அவரது 90 வது பிறந்தநாள் தொடர்பாக பி.பி.சி யின் நேர்காணலின்போது, அவர் தனது உள்ளக்கிடக்கையைக் கொஞ்சம் வெளிப்படுத்தியிருந்தார். ” மாளிகையில் தனக்கென்றொரு பதவி வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும், “நான் என்ன செய்யவேண்டுமென்று” யாரிடமாவது கேட்டால் எல்லோர் முகங்களும் வெளுத்துப் போகின்றன. அவர்களுக்கு எந்தவிதமான எண்ணமும் இல்லை” எனப் பூடகமாச் சொல்லியிருந்தார்.
அவருக்கென உத்தியோக பதவி எதுவும் கொடுக்கப்படாவிடினும், பிரித்தானிய அரச குடும்பம், அதன் ஆட்சிமுறை ஆகியவற்றை நவீனப்படுத்தியதில் பெரும்பங்கு இளவரசருக்குண்டு. மகாராணியாரின் பட்டம் சூட்டு விழாவின்போது பின்னணியில் பின்பற்றப்பட்டு வந்த தொன்மையான பல சடங்குகளை அகற்றிவிட்டு, சகல நிகழ்வுகளையும் மக்கள் பார்ப்பதற்காக தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தார். தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த முதல் ராஜ குடும்பத்தவர் அவரே.
ஆனால் பிற்காலத்தில் அவரது பிள்ளைகள் மகிழ்ச்சியான குடும்பங்களை அமைத்துக்கொள்ளத் தவறியமையால் அவர் நவீனத்துவத்தை நோக்கிய மாற்றங்களை அரச குடும்பத்தில் கொண்டுவருவதற்குத் தடையாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.
குடும்பம்
இளவரசர் பிலிப், எலிசபெத் மகாராணி ஆகியோருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள், வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் (1948), இளவரசி ஆன் (1950), இளவரசர் ஆண்ட்ரூ (1960), இளவரசர் எட்வார்ட் (1964) ஆவர். இவர்களில் மூவரது திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தன.
சம்பிரதாயங்கள் என்று வரும்போது பிரித்தானிய அரண்மனை எப்போதும் மிகவும் இறுக்கமானது. பிலிப் இளவரசர் ஒருவர்தான் மகாராணியாரை ஒரு மனித இடத்தில் வைத்திருப்பவர் என அரண்மனை சேவகர்கள் கூறுவதுண்டு. அவரது இதர பெண் மோகங்களையும் தாண்டி மகாராணியாரோடு 73 வருடங்களை ஓட்டி முடித்திருக்கிறார்.
குடும்ப விவகாரங்களில் முடிவுகளை எடுப்பது எப்போதும் பிலிப் இளவரசர் தான். மிகவும் இறுக்கமான, கட்டுப்பாடான தந்தையாராக இருந்து பிள்ளைகளை வளர்த்தபடியால்தான் அவரது மூன்று மூத்த பிள்ளைகளும் விவாகரத்துக்குத் தள்ளப்பட்டதாக மக்கள் அவர்மீது குற்றஞ்சாட்டுகிறார்கள். 1997 இல் நடைபெற்ற, இளவரசி டயானாவின் வாகன விபத்திற்கான கட்டளை இளவரசர் பிலிப்பிடமிருந்து வந்தது என டயானாவின் காதலர் மொஹாமெட் அல்-ஃபாயிட்டின் தந்தையார் குற்றஞ்சாட்டியிருந்தார். இதன் பின்னர் பிரித்தானியர் மத்தியில் அவரது செல்வாக்கு மிகவும் சரிந்து போனது.
மிகவும் சர்ச்சைக்குள்ள மனிதர்
அவரது பிள்ளைகளும், அவர்களது குடும்பங்களும் கவனத்தைத் திருப்பும்வரை, பிரித்தானிய ஊடகங்களின் நையாண்டித் தனம் பிலிப் இளவரசரைச் சுற்றியே இருந்தது.
நவீன உலகம் தொடர்பாக பிலிப் இளவரசர் மிகவும் பழமைவாதப் போக்குகளைக் கடைப்பிடித்துவந்தார். அணுசக்தி முதற்கொண்டு இயற்கைப் பாதுகாப்பு வரையில் அவரது பார்வைகளும் கருத்துக்களும் வித்ஹியாசமானவை. ‘இயற்கைக்கான உலக நிதி’ என்ற அமைப்பின் தலைவராக இருந்துகொண்டு புறாக்களை வேட்டையாடுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டரென அவரது இரட்டை வேடம் பற்றி மக்கள் மத்தியில் பரவாலான எதிர்ப்பு இருந்தது. இதுபற்றி பி.பி.சி. கேட்டபோது அவரது பதில் முரட்டுப்பிடிவாதத்துடனாக இருந்தது. 1980 இல் சீனாவுக்கு விஜயம் செய்தபோது சீனர்களை ‘வெட்டிய கண்களுடையவர்கள்’ எனக் கூறி சர்ச்சைக்குள்ளாகியிருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவர் முரண்பாடான கருத்துக்களை முரண்படும் விதத்தில் தெரிவிப்பதால் மக்கள் மத்தியில் அவர் செல்வாக்கை இழந்துபோய் கவனிக்கப்படாத ஒருவராகவே இருந்துவந்தார். இவ் விடயத்தில் மகாராணியார் மிகவும் சாமர்த்தியசாலி.
பிறப்பு
பிலிப் இளவரசர் ஒரு கிரேக்கராக இருந்தாலும் அவரது பூர்வீகம் எலிசபெத் மாகாராணியாரோடு தொடர்புபட்டது. மகாராணியின் ஒப்பாட்டியான விக்டோரியா மகாராணியாரின் பரம்பரையில் பிறந்தவர் தான் பிலிப் இளவரசரின் தந்தையாரான கிரேக்கத்தின் இளவரசர் அண்ட்ரூ. அப்படியிருந்தும் பிரித்தானியர்கள் அவரை விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை.
கிரேக்க நாட்டின் இளவரசர் அன்ட்ரூவிற்கு பிறந்த ஐந்து பிள்ளைகளில் கடைசியும், ஒரே ஆண் பிள்ளையும் பிலிப் இளவரசர் தான். கிரேக்க தீவுகளில் ஒன்றான சோர்ஃபுவில், பெற்றோர்கள் விடுமுறையில் இருக்கும்போது, ஜூன் 10, 1921 இல், அங்குள்ள சாப்பாட்டு மேசையில் அவர் பிறந்ததாகக் கூறுவார்கள். பிறக்கும்போது அவருக்கு இடப்பட்ட பெயர் பிலிப்போஸ் ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன் சொண்டெபேர்க்-கிளுக்ஸ்பேர்க் என்பது.
அவர் 18 மாதக் குழந்தையாக இருக்கும்போது தந்தையாரின் முடி பறிக்கப்பட்டு குடும்பம் நாடுகடத்தப்பட்டது. அவசரமாகத் தயார் செய்த தோடம்பழப் பெட்டியில் அவரை வைத்து கப்பல் மூலம் அவர் வெளியே கொண்டுவரப்பட்டார்.
இளவரசர் பிலிப்பின் தாயாரின் பூர்வீகம் ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவோடு தொடர்புடையது. பிறக்கும்போது அவருடைய பெயர் ‘பட்டன்பேர்க்கின் இளவரசி’. அவருக்குப் பிறவிலிருந்து காது கேட்கமாட்டாது. கணவனினால் புறந்தள்ளப்பட்டு மனப்பிறழ்வு கொண்ட நிலையில், ஒரு கன்னியாஸ்திரியாக ஊர் ஊராகத் திரிந்து சேவையாற்றினார். இறுதிக் காலன்களில் அவரை இளவரசர் பிலிப் பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்துப் பராமரித்ததாகவும் கூறப்படுகிறது. 1944 இல் அவர் இறக்கும்போது அவரிடம் ஒரு சல்லிக் காசும் இருக்கவில்லை எனப்படுகிறது.
இளம் பருவம்
பிலிப் இளவரசரின் பெரும்பான்மையான இளமைப் பருவம் தனிமையும் குழப்பமும் நிறைந்தது.இங்கிலாந்திலுள்ள கோர்டன்ஸ்ரவுண் பாடசாலையில் கல்வியைக் கற்று பின்னர் பிரித்தானிய குடியுரிமையையும் பெற்றார். பழக்க வழக்கங்களில் எவ்வளவுதான் ‘பிரித்தானியராக’ இருந்தாலும் மக்கள் அவரை ‘கிரேக்க பில்(லிப்)’ (Phil the Greek) எனவே அழைத்தனர்.
இளம் பராயக் கல்வியை முடித்துக்கொண்டு அவர் டார்ட்மத்திலுள்ள ரோயல் நேவல் கல்லூரியில் படித்து 1939 இல் வெளியேறி கடற்படையில் சேர்ந்து கொண்டார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் இத்தாலி, யப்பான் போன்ற பல களங்களில் தரையிறக்கப்பணிகளில் பங்குபற்றியிருந்தார்.
எதிர்கால மகாராணியாரைச் சந்தித்தமை
1934 இல் நடைபெற்ற இளவரஶ்ரீ பிலிப்பின் மைத்துனர் ஒருவரின் திருமணத்தில் அவர் எலிசபெத் இளவரசியைச் சந்தித்தார். தன் பெற்றோருடன் இவ் வைபவத்துக்குச் சென்றிருந்த போது இளவரசிக்கு 13 வயது. அவரைக் கண்டதும் இளவரசி தன் இதயத்தைப் பறிகொடுத்துவிட்டார். நவம்பர் 20, 1947 இல் அவர்களது திருமணம் வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெற்றது.
1951 வரை அவர் தொடர்ந்தும் கடற்படையில் பணியாற்றிவிட்டு பின்னர் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். 1952 இல் இளவரசி எலிசபெத்துக்கு முடிசூட்டுவிழா நடைபெற்றது.
அவரது கடற்படைக் காலங்களில் பசுபிக் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ரன்னாவில் மக்கள் அவரைக் கடவுள் போலத் தொழுதார்கள் எனவும், அவரிடம் மந்திர சக்தி இருக்கிறது என அவர்கள் முழுமையாக நம்பினார்கள் எனவும் கூறப்படுகிறது.
இறுதிக் காலங்கள்
மகாராணியார் பொதுவாகச் சகல விடயங்களிலும் கணவரது ஆலோசனையைக் கேட்டு நடப்பவர் என அவரது பேரன் இளவரசர் ஹரி சமீபத்தில் கூறியிருந்தார். ‘சகல விடயங்களுக்கும் மகாராணி தன் கணவரையே நம்பியிருந்தார். அவரில்லாது மகாராணியால் வாழ்க்கையைச் சமாளிக்க இயலாமல் போகலாம்” என இளவரசர் ஹரி கூறியதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
2011 இல் இளவரசர் பிலிப் இருதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நிலை காரணமாகப் படிபடியாக அரச கடமைகளைக் குறைத்துக்கொண்ட அவர் ஆகஸ்ட் 2017 இல் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெற்றார். (ராய்ட்டர், விக்கிபீடியா தகவல்களிலிருந்து)
Related posts:
- அம்பிகை உண்ணா விரதம் | தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது லண்டன் பொலிசார் தாக்குதல்
- அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களை ஜேர்மனி திருப்பியனுப்பவுள்ளது!
- கொரோணாவைரஸின் மூலம் தொடர்பாக சீனா முழுத் தகவல்களையும் பரிமாறவில்லை – அமெரிக்கா, பிரித்தானியா
- அமெரிக்காவில் மேலுமொரு கறுப்பினத்தவர் பொலிசாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.