World

பிரித்தானிய பிரதமர் ஜோன்சன் விரைவில் பதவி இழக்கலாம்?

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பதவி இந்த வாரமளவில் பறிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் ஊகம் தெரிவித்துள்ளன.

நாடு கோவிட் பெருமுடக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கையில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் களியாட்டம் ஒன்றை நடத்தியமை தொடர்பாக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பொதுமக்களிடத்தில் செல்வாக்கை இழந்து வருகிறது. ‘பார்ட்டிகேட்’ என வர்ணிக்கப்படும் இந்த ஊழலினால் அதிருப்தியடைந்த கட்சி அங்கத்தவர்கள் பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டுவரவுள்ளதாகவும் இதன்போது பிரதமர் ஜோன்சனுக்கு எதிராகவே வாக்குகள் குவிவதற்கான சாத்தியங்கள் உண்டென்றும் நம்பப்படுகிறது.

கட்சியின் அதிருப்தி அங்கத்தவர்கள் 54 பேர் இதுவரை ஜோன்சன் பதவி விலகவேண்டுமென எழுத்துமூலம் விண்ணப்பித்துள்ளனர்.

2020 கோவிட் முடக்கத்தின்போது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 Downing St. இல் மது உள்ளிட்ட களியாட்டங்கள் நடைபெற்றதென்ற விடயம் அம்பலமானதிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சி பொதுமக்கள் மத்தியில் தனது செல்வாக்கைத் தொடர்ச்சியாக இழந்து வருகிறது.

இதே வேளை, பிரதமர் ஜோன்சனின் கட்சியைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்தமை காரணமாக விரைவில் அத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. கட்டாயப்படுத்தியமை காரணமாகப் பதவிகளைத் துறந்த இரண்டு பேர்களில் ஒருவர் பாராளுமன்றத்தில் நிகழ்ச்சி நிரல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஆபாசக் காணொளி ஒன்றைத் தனது ஸ்மார்ட் ஃபோனில் பார்த்துக்கொண்டிருந்தார். மற்றவர் 15 வயதுப் பையனைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருந்தார். இவ்விரு தொகுதிகளிலும் ஏற்கெனவே எதிர்க்கட்சியான தொஇழிற் கட்சியின் அங்கத்தவர்கள் இரண்டு மடங்கு வாக்குகளில் வெல்வதற்கான சாத்தியங்கள் தோன்றியுள்ளன.

இதுவெல்லாம் கட்சித் தலைமையின் தவறுகளினாலேயே நிகழ்ந்தன எனக்கூறி தலைவர் ஜோன்சன் உடனடியாக்ப் பதவி விலகவேண்டுமெனச் சில அங்கத்தவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனாலும் அவற்றை உதாசீனம் செய்த ஜோன்சன் “ரஷ்யா – யூக்கிரெய்ன் போரினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள் இந்த நிலையில் நான் நாட்டைக் கைவிட்டுவிடக் கூடாது” எனக்கூறி அக்கோரிக்கைக்கு மறுத்துவிட்டார்.