Spread the love

லண்டன்: மார்ச் 11, 2020


பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றியிருப்பதாகப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் செல்வி. நடீன் டோறீஸ், நோய்த் தொற்றாளர் எடுக்கவேண்டிய சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்.

பிரித்தானியாவில் 382 பேர் நோய்த் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு அவர்களில் 6 பேர் மரணமடைந்துள்ளார்களென அரசாங்கம் அறிவித்திருக்கிறது. கடைசியாக இறந்தவர் 80 வயதுடையவர் எனவும், அவர் ஏற்கெனவே இதர நோய்களினால் பலவீனமடைந்து இருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.



இங்கிலாந்தின் சுகாதார சேவைகளை நிர்வகித்துவரும், தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம் மக்களில் நோய்த்தொற்று உள்ளதா எனப் பரிசோதிக்கும் வசதிகளை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 1500 பேர் வரையில் பரிசோதிக்கப்படுகிறார்கள். இதை நாளொன்றுக்கு 10,000 ஆக அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக அத் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பரிசோதனைகளின் பெறுபேறுகளை 24 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியுமென அது கூறுகின்றது.

அதே வேளை, பெட்ஃபோர்ட்ஷையர் மத்தி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வி டோறீஸ் மக்களுக்கு விடுத்த அறிக்கையில், தான் தொடர்பு கொண்டவர்கள் எனக் கருதிய அத்தனைபேரையும் தேடி அவர்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.



அவருடன் வசித்து வந்த அவரது 94 வயதுடைய தாயாரின் உடல்நிலை பற்றித் தான் அச்சம் கொண்டுள்ளதாகவும், அவருக்கு நேற்று (செவ்வாய்) இருமல் கண்டிருந்ததாகவும் டோறீஸ் மேலும் தெரிவித்தார்.

கடந்த வியாழனன்று அவர் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட பின்னர் அவருக்கு நோயறிகுறிகள் தென்பட்டன எனவும் வெள்ளியிலிருந்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றாளர்களில், இங்கிலாந்து 324, ஸ்கொட்லாந்து 27, வட-அயர்லாந்து 16 மற்றும் வேல்ஸ் 15 பேர்கள் அடங்குவார்கள். லண்டனில் நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 91 பேர்களில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான தென் கிழக்கு லண்டனில் 51 பேருக்கு நோய்த் தொற்று உள்ளதாக அறியப்படுகிறது. (மூலம் பி.பி.சி.)

Print Friendly, PDF & Email
Related:  அழற்சி (Inflammation) கோவிட் நோயைத் தீவிரமாக்குகிறதா?
பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு வைரஸ் தொற்று!

பிரித்தானிய சுகாதார அமைச்சருக்கு வைரஸ் தொற்று!