Uncategorized

பிரித்தானியா: 39 உடல்கள் இழுவைக்கலமொன்றில் (trailer) கண்டுபிடிப்பு!

இறந்தவர்கள் சீன தேசத்தவராக இருக்கலாம்

மத்திய லண்டனிலிருந்து சுமார் 32 கி.மீ. கிழக்கேயுள்ள கிறேய்ஸ் என்னுமிடத்தில் கடந்த புதனன்று (23) பொதி வண்டியொன்றினுள் (trailer) பிணமாகக் காணப்பட்ட 39 பேர்களின் மரணம் தொடர்பாக பிரித்தானிய காவற்துறை கொலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவர்களில் 8 பெண்களும் 31 ஆண்களும் அடங்குவர். இறந்தவர்கள் அனைவரும் சீன தேசத்தவர் என நம்பப்படுகிறது.

உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்டியின் சாரதி மோ றொபின்சன்

இறந்தவர்களின் அடையாளங்கள் தொடர்பாக காவற்துறை தகவல்கள் எதையும் அறிவிக்க மறுத்துவிட்டார்கள் எனினும், இந்த வண்டி பெல்ஜியம் நாட்டின் ஜீப்றக் துறைமுகத்திலிருந்து புறப்பட்டிருக்கிறதென்றும் எஸ்ஸெக்ஸ் மாவட்டத்திலுள்ள பேர்ஃப்ளீட் என்னுமிடத்தில் அதைகாலை செவ்வாய் அதைகாலை 12:30 மணிக்கு வந்து சேர்ந்ததென்றும் அறியப்படுகிறது. வண்டியின் இழுவைக் கலததை (trailer), பாதையின் மீது ஏற்றிவிடப்பட்டால் பேர்ஃபிளீட் துறையின் மறுபக்கம் (UK) துறைமுகத் தொழிலாளர்களால் பதையில் கொண்டு வந்து சேர்க்கப்படுவது வழக்கம். சாரதி கூட வருவதில்லை. துறைக்கு அடுத்த பக்கத்தில் வேறொரு சாரதி இழுவைக் கலத்தைப் பொறுப்பேற்பார். ஐரோப்பாவின் பல துறைமுகங்களிலில் இதுவே வழக்கம்.

பேர்ஃபிளீட் ஒன் த தேம்ஸ் துறை – எசெக்ஸ்

இச் சம்பவம் தொடர்பாக வட அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயதுள்ள மோ றொபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்செயல்களைத் தொழிலாகக் கைக்கொள்ளும் கும்பலே இதற்குக் காரணமெனவும், இப்படியான ஆட்கடத்தல் கும்பல்கள் உலகம் பூராவும் செயற்படுகிறார்கள் எனவும் காவற்துறை தெரிவிக்கிறது.

இழுவைக் கலம் தற்போது எசெக்ஸிலுள்ள ரில்பெரி துறையில் தரித்து நிற்பதாகவும், விசாரணைகள் முடிவுற்று உடல்கள் அடையாளம் காணப்பட்டதும் அவை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுமெனவும் காவற்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

இழுவைக் கலம் புல்கேரியாவில் பதிவுசெய்யப்பட்டதெனினும் பெல்ஜியத்திலிருந்தே அது இழுக்கப்பட்டு வந்திருக்கிறது எனவும் அதை இழுத்த வந்த வண்டி (tractor / lorry) அயர்லாந்திலுள்ள டப்லின் நகரிலிருந்து புறப்பட்டிருக்கிறது எனவும் அறியப்படுகிறது. குளிரூட்டப்பட்ட இக் கலத்தின் உள் வெப்பநிலை -25 பாகை செல்சியஸாக இருப்பது வழக்கம். இக் கலத்தினுள் பயணம் செய்யும்போது பயணிகள் இறந்தார்களா அல்லது வேறெங்கோ மரணித்தவர்களின் உடல்கள் இக் கலத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்களா என்பது பற்றியும் விசாரணகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு முன்னர் பலர் அந்நாட்டிற்குள் புகுந்துவிட அவசரப்படுகிறார்கள் எனவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகளில் பாதுகாப்பு சம்பந்தமான தேடுதல்களைத் தவிர குடிவரவு சம்பந்தமான தேடுதல்கள் பெரிதளவில் நடைபெறுவதில்லை எனவும் அறியப்படுகிறது.

பெருந்தொகையில் இழுவைக் கலங்களில் பயணிகள் மரணிப்பது இது தான் முதல் தடவையல்ல. ஆகஸ்ட் 27, 2015 இல் அவுஸ்திரியாவின் A4 நெடுஞ்சாலையில் ஒரு இழுவைக் கலத்தில் எட்டுக் குழந்தைகள் உட்பட 71 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு 58 சீன தேசத்தவர்களின் உடல்கள் கெண்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பல மரணங்கள் அறியப்படாமலே மறைக்கப்படுவதுமுண்டு. பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு மாதம் ஒன்றிற்கு 200 பேர் மட்டில், பெரும்பாலும் படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வருகிறார்கள்.

பதியப்பட்ட அகதிகளாகவிருந்தாலே தவிர, ஒருவர் பிரித்தானிய எல்லைக்குள் வந்தால் மட்டுமே அகதிநிலை கோர முடியும்.