பிரித்தானியா: லிஸ் ட்றஸ் அரசின் உள்ளக அமைச்சராக (Home Secretary) இன்னுமொரு இந்திய வம்சாவளி சுவெல்லா பிறேவெர்மான்?
பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பதவியிலிருந்து அகற்றப்படட்தைத் தொடர்ந்து நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருக்கான தேர்தலில் லிஸ் ட்றஸ் என்பவர் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து அமைச்சரவையில் பல மாற்றங்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித் தலைவருக்கான தேர்தலில் இந்நுமொரு இந்திய பூர்வீகத்தைக் கொண்ட ரிஷி சூனாக் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டதானாலும் கட்சியின் பெரும்பாலான அங்கத்தவர்கள் ட்றஸ்ஸையே தேர்ந்தெடுத்தனர். பொறிஸ் ஜோன்சனுடன் நெருக்கமாகவிருந்த சூனாக் திடீரென்று தடம்புரண்டு அவருக்கு எதிராக வாக்களித்ததுடன் ஜோன்சனின் பதவி விலகலுக்குக்குக் காரணமாக அமைந்திருந்தார் எனக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கருதியிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரைக் கட்சி உறுப்பினர்கள் ‘புரூட்டஸ்’ என அழைத்தனர் எனவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைவருக்கான தேர்தலில் ஜோன்சன் லிஸ் ட்றஸ்ஸை ஆதரித்ததுடன் அவர் வெல்வதற்காகவும் உழைத்திருந்தார்.
தற்போது பொறிஸ் ஜோன்சனுக்கு நெருக்கமானவரும் இந்நுமொரு இந்திய பூர்வீகத்தைக் கொண்டவரும் உள்ளக அமைச்சருமான பிரிதி பட்டேல் தனது பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து அவ்விடத்துக்குஇந்தியாவின் கோவா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுவெல்லா பிறேவெர்மான் (Suella Braverman) நியமிக்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது. இவரும் கன்சர்வேட்டிவ் தலைமைப்பதவிக்குப் போட்டியிட்டு இரண்டாவது சுற்றில் போட்டியிலிருந்து விலகித் தனது ஆதரவை ட்றஸ்ஸுக்கு வழங்கியிருந்தார்.
இந்தத் தடவை ட்றஸ்ஸின் அமைச்சரவையில் இடம்பெறும் ஒரே ஒரு இந்திய வம்சாவளியினராக பிறேவெர்மான் மட்டுமே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை பிரித்தானிய பாராளுமன்றத்தில் சுமார் 15 உறுப்பினர்கள் இந்திய வம்சாவளியினராவர். 42 வயதுடைய பிறேவெர்மான் தற்போது பிரித்தானியாவின் சட்டமா அதிபராக உள்ளார்.