பிரித்தானியா: பொறிஸ் ஜோன்சன் போட்டியிலிருந்து விலகினார் – ரிஷி சூனாக் அடுத்த பிரதமர்?

லிஸ் ட்றஸ்ஸின் திடீர் பதவி விலகலினால் ஏற்பட்ட பிரதமர் பதவி வெற்றிடத்துக்குப் போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கைவிட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அவருடன் போட்டியிட்டு வருபவர்களில் மிகவும் பிரசித்தமான ஒருவரான ரிஷி சூனாக் பிரித்தானிய பிரதமராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

நேற்று (ஞாயிறு), பொறிஸ் ஜோன்சன் வெளியிட்ட அறிக்கையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதற்கான 102 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தான் பெற்றுவிட்டதாகவும் எதிர்வரும் வெள்ளியன்று தான் பிரதமர் பதவியைக் கைப்பற்றி 2024 இல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவரது எண்ணத்தை மாற்றி போட்டியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்திருக்கிறார். “ஒற்றுமையான உறுப்பினர்களின் ஆதரவின்றி நாட்டைத் திறமையாக ஆளமுடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நன்மை கருதி விட்டுக்கொடுப்புகளுடன ஒற்றுமையாக ஒரு முடிவை எட்டுவதற்கென கடந்த சில நாட்காளாக சக போட்டியாளர்களான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சூனாக் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பெனி மோர்டோண்ட் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்காமையால் தான் இம்முடிவை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

போட்டியில் நிற்பதாக அறிவிப்பதற்கான இறுதி நாள் / நேரம் இன்று பிற்பகல் 2:00 மணியாகும். இதுவரை கிடைத்த தகவல்களின்படி 140 உறுப்பினர்கள் தமது ஆதரவை சூனாக்கிற்கு அளிப்பதாகப் பிரகடனம் செய்துள்ளனர். இவர்களில் ஜோன்சனின் ஆதரலாளரும் அவரது அரசாங்கத்தில் சட்டமா அதிபராக இருந்தவருமான சுவேல்லா பிறேவெர்மானும் ஒருவர். இவரும் சூனாக்கைப் போல இந்திய பூர்வீகத்தைக் கொண்டவர். அதே வேளை மோர்டோண்டுக்கு 20 பேரது ஆதரவு கிடைத்துள்ளது. இதர போட்டியாளர்கள் எவராயினும் 100 வாக்குகள் ஆதரவைப் பெறுவார்களேயாயின் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் எலெக்ட்றோணிக் முறையிலான வாக்குப்பதிவின் மூலம் தலைவர் தெரிந்தெடுக்கப்படுவார். மாறாக சூனாக் ஒருவரே 100 வாக்குகளைப் பெற்றவராயின் திங்களன்று அவர் பிரதமராக அறிவிக்கப்படுவார்.

530 கட்சி ஆதரவாளர்களிடையே இறுதியாக மேற்கொள்ளப்பட்ட ‘யூகவ்’ கருத்துக் கணிப்பில் ஜோன்சனுக்கு ஆதரவாக 32% மானோரும், சூனாக்கிற்கு ஆதரவாக 23% மானோரும் வாக்களித்திருந்தனர். அப்படியிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஜோன்சனுக்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.