பிரித்தானியா: பிரதமர் ட்றஸ் விரைவில் பதவி இழக்கலாம்? – தி ரெலிகிராஃப்

பொறிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமராகலாம்?

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்றஸ்ஸின் பதவிக் காலம் இன்னும் சில நாட்களல்ல மணித்தியாலங்களே நீடிக்கும் என மூத்த கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர் கூறியதாக லண்டனிலிருந்து வெளிவரும் ‘தி ரெலிகிராஃப்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் முதன்மை வழிநடத்துனரும் (chief whip) திறைசேரி செயலாளருமான வெண்டி மோர்ட்டனை வரவேற்புக் கூடத்தில் வைத்து ட்றஸ் பதவியிலிருந்து விலக்கியதாகவும் இதை ஆட்சேபித்து மோர்ட்டனின் உதவியாளாரும் பாராளுமன்ற உறுப்பினருமான கிறெய்க் விற்றேக்கர் பதவி விலகியதாகவும் தகவல்கள் கசிந்துள்ள நிலையில் கட்சிக்குள் மேலும் பல அதிருப்தியாளர்கள் ட்றஸ்ஸின் பதவி விலகலைக் கோரிவருகிறார்கள் என ‘தி ரெலிகிராஃப்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு கட்சியின் பாராளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறும்போது முதன்மை வழிநடத்துனரே பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து வாக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும். போரின் காரணமாக ஐரோப்பாவில் ஏற்பட்டுவரும் எரிவாயுத் தட்டுப்பாட்டைத் தளர்த்த அமெரிக்காவில் நடைபெற்றதைப் போல நிலக்கீழ் வாயுவைத் தோnடி எடுக்க (fracking) சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் விடயத்தில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது சுமார் 40 கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் வாக்களிக்காது ஒதுங்கிக்கொண்டனர். இதனால் ஆத்திரமுற்ற பிரதமர் ட்றஸ் வாக்களிப்பை ஒழுங்குசெய்த வெண்டி மோர்ட்டனைப் பதவியிலிருந்து விலக்கியிருந்தார். நிலக்கீழ் வாயுவைச் சேகரிக்கும் முறையானது (fracking) பாரிய சூழல் பாதிப்பைத் தரும் ஒன்றாகும் என்பதால் பல சூழற் செயற்பாட்டாளர்கள் பிரித்தானியாவில் அமைதிப் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

நடந்து முடிந்த வாக்கெடுப்பு (‘fracking vote’) ட்றஸ் மீதான உத்தியோகபூர்வமற்ற நம்பிக்கையீனத்துக்கான வாக்கெடுப்பு எனவும் இதில் கலந்துகொள்ளாத உறுப்பினர்களில் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ஒருவர் எனவும் கூறப்படுகிறது. ட்றஸ் பதவி விலக்கப்பட்டால் யார் பிரதமராக வரவேண்டுமென செவ்வாயன்று எடுக்கப்பட்ட ‘யூகவ்’ கருத்துக்கணிப்பில் பொறிஸ் ஜோன்சன் முதன்மையில் இருக்கிறார் என்பதும் குறிப்பட்ப்படவேண்டியது. இக் கருத்துக்கணிப்பில் ட்றஸ் பதவியிலிருந்து விலகவேண்டுமென 55% மாதமானோர் வாக்களித்திருந்தனர். இதில் 36% ட்றஸ் பிரதமராகுவதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களாவர். ட்றஸ் பதவியிலிருந்து அகற்றப்பட்டால் பிரித்தானிய பாராளுமன்ற வரலாற்றில் அதி குறைந்த நாட்கள் பிரதமர் பதவியை வகித்தவர் எனப் பெயர் பெறுவார்.

இதே வேளை உள்ளக அமைச்சர் (Home Secretary) சுவெல்லா பிரேவெர்மானும் நேற்று (புதன்) பதவியிலிருந்து விலகிக்கொண்டார். மிகவும் இரகசியமான விடயமொன்றைத் தனது சொந்த மின்னஞ்சலைப் பாவித்து தவறான ஒருவருக்கு அனுப்பியிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் அவர் பதவியிலிருந்து விலக்வேண்டி ஏற்பட்டது. இவர் ஒரு இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஆபிரிக்க பூர்வீகத்தைச் சேர்ந்தவரும் நிதி அமைச்சருமான குவாசி குவார்ட்டெங் 38 நாளில் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருந்தார். குவார்ட்டெங்கின் வருமானவரிக் குறைப்பு பாரிய எதிர்ப்பைச் சந்தித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலக்கப்பட்டார்.

இருப்பினும் தான் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என ட்றஸ் அடம்பிடித்து வருகிறார். பொறிஸ் ஜோன்சனும் இவரைப் போலவே அடம்பிடித்துவிட்டு இறுதியில் பதவி விலகினார். இந்திய பூவீகத்தைக் கொண்ட ரிஷி சூனாக்குக்கு எதிராக ட்றஸ்ஸைப் பிரதமராக்குவதில் முன்னின்று உழைத்தவர் பொறிஸ் ஜோன்சன் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும்.