World

பிரித்தானியா: நிதியமைச்சர் சூனாக், சுகாதார அமைச்சர் ஜாவிட் பதவி விலகினர்

ஆட்டம் காணும் ஜோன்சனின் அரசாங்கம்

பிரித்தானிய அரசின் நிதி அமைச்சர் ரிஷி சூனாக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜிட் ஜாவிட் ஆகிஒரின் திடீர் பதவி விலகலையடுத்து ஏற்கெனவே தளம்பல் நிலையிலிருக்கும் பிரதமர் ஜோன்சனின் அரசாங்கத்திற்குப் புதிய தலையிடி ஏற்பட்டிருக்கிரது.

பிரதமர் ஜோன்சன் எதிர்பார்த்த தரத்தில் ஆட்சியை நிர்வகிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி இவ்விரு மூத்த அமைச்சர்களும் தமது பதவிகளைத் துறந்திருக்கிறார்கள்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உத்தியோகபூர்வ இல்லமான 10 டவுணிங் ஸ்ட்றீட்டில் களியாட்ட விருந்தொன்றை நடத்தியது முதல் பலவிதமான குற்றச்சாட்டுகளால் கட்சி உறுப்பினர்கள் பதவிகளை விலகியதுவரை பிரதமர் ஜோன்சன் தொடர்ச்சியாகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். அவருக்கு நெருக்கமான ஒருவருக்கு கட்சியில் முக்கிய பதவியொன்றை வழங்கியிருந்ததாகவும் அக் குறிப்பிட்ட உறுப்பினர் ஏற்கெனவே பெண்கள் மீது பாலியல் சேட்டைகளைப் புரிந்தவர் எனத் தெரிந்திருந்தும் அவருக்கு அப்பதவியை வழங்கியிருந்தார் என்பதும் பிந்திய குற்றச்சாட்டு. இவ் விடயம் தெரியவந்ததும் ஜோன்சன் வழக்கம் போலத் தனது மறதியைக் காரணம் காட்டியிருந்தார் எந்றாலும் அது அவரது பொய் சொல்லும் பழக்கத்தின் தொடர்ச்சியே அது எனக் கட்சிக்குள் அவருக்கு எதிராகக் குரலெழுப்புபவர்கள் கூறுகிறார்கள். இச் சம்பவத்தைத் தொடர்ந்து நிதியமைச்சர் சூனாக் ஜோன்சனுடன் பகிரங்கமாக வாக்குவாதப்பட்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.

அதே வேளை பிரதமர் ஜோன்சனின் பல நிதிக் கொள்கைகள் விடயத்தில் அமைச்சர் சூனாக் முரண்பட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது. பொருளாதார ரீதியில் நாடு மந்த நிலையை அண்மிக்கிறது எனவும் ஆனால் ஜோன்சன் தொடர்ந்தும் பல செலவுத் திட்டங்களை அறிவிக்கிறார் எனவும் உலகம் போரினாலும், நோய்த்தொற்றினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது ஜோன்சன் பொறுப்பற்ற நிலையில் செயற்படுகிறார் எனபதும் சூனாக்கின் குற்றச்சாட்டு.

“அரசாங்கம் சீரிய முறையிலும், திறனுடனும், அதிகவனத்துடனும் ஆட்சி செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுவே எனது கடை அமைச்சர் பதவி. இக் காரணங்களுக்காகப் பதவி விலகுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்” என ரிஷி சூனாக் தெரிவித்துள்ளார்.

நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உபதலைவர், ஒரு ராஜதந்திரி எனப் பலர் கடந்த சில மாதங்களுக்குள் ஜோன்சன் அரசாங்கத்திலிருந்து பதவி விலகியுள்ளார்கள். அப்படியிருந்தும் தனது பதவியை பிரதமர் ஜோன்சன் இறுகப் பிடித்தபடி உள்ளார். இரண்டு மூத்த அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் கிடைத்ததும் உடனடியாக அவர்களுக்கான மாற்றீடுகளை அவர் அறிவித்துவிட்டார். இருப்பினும் அவரைப் பதவியிலிருந்து இறக்குவதற்கு இன்னுமொரு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் அவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்திருந்தது.

அவரைப் பதவியில் தொடர்ந்தும் தக்க வைத்திருக்க உதவும் உறுப்பினர்களும் அவரைப் போல் குற்றவாளிகளே என எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளிப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர் ரிஷி சூனாக். முதலீட்டுத் துறையில் பிரபலமான அவர், தமிழ்நாட்டுக்காரரான இன்ஃபோசிஸ் ஸ்தாபகர் மூர்த்தியின் மகளைத் திருமணம் செய்தவர். சூனாக்கின் மனைவி பிரித்தானிய வருமானவரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டில் சூனாக்கின் பெயர் கொஞ்சம் பாதிப்புற்றிருந்தாலும் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பிரித்தானிய பொருளாதாரத்தைத் திறம்பட நிர்வகித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.