HealthWorld

பிரித்தானியா சுகாதார சேவைகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு கோவிட் தடுப்பு மருந்து வழங்கப்படமாட்டாது?


பிரித்தானியாவின் சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள வரைமுறைகளின்படி, வெளிநாடுகளிலிருந்து வந்து இங்கிலாந்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பு மருந்துகள் வழங்கப்படமாட்டாது எனத் தெரிய வருகிறது.

இங்கிலாந்திலுள்ள பிரபல மருத்துவமனையொன்று அதன் பணியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையிந்படி, தேசிய சுகாதார சேவைகள் இலக்கத்தைக் கொண்டிராத எவருக்கும் தடுப்பூசிகளை வழங்கவேண்டாமென்று பணிக்கப்பட்டுள்ளதாக,லண்டனிலிருந்து வெளிவரும் ‘தி கார்டியன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கறுப்பின, ஆசிய அல்லது சிறுபான்மை பின்னணிகளைக் கொண்ட (Black, Asian or Minority Ethnic (BAME)) என அழைக்கப்படும் பலர் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாற்றுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் குடும்ப வைத்தியர் ஒருவரிடம் பதியப்படாமலிருந்தால் அவர்களுக்கு கோவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட மாட்டாது. அதே வேளை, இவர்களது சேவைகள் கிடைக்காவிட்டால், இங்கிலாந்து அனுபவித்துவரும் மிக மோசமான தொற்றுக் காலத்தைச் சமாளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதே வேளை, தேசிய சுகாதார சேவைகள் (NHS) இலக்கம் இருந்தால் தான் கோவிட் தடுப்பு மருந்துகளைப் பெற முடியுமெனத் தாம் வரையறுக்கவில்லை என, பிரித்தானியாவின் சுகாதார, சமூகப் பராமரிப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.