World

பிரித்தானியா: கட்டாய இராணுவ சேவை கொண்டுவரப்படும்?

“எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சியமைத்தால் கட்டாய இராணுவ தேசிய சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்துவேன்” என பிரித்தானிய பிரதமர் ரிஷி சூனாக் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட பிரித்தானிய குடிமக்கள் அனைவரும் முழுநேர இராணுவ உழியராகவோ அல்லது மாதத்தில் ஒரு வார இறுதி நாட்களையாவது பொலிஸ் அல்லது தேசிய சுகாதார சேவைகளில் தொண்டராகவோ பணிபுரிய வேண்டி நிர்ப்பந்திக்கப்படலாம்.

இக் கட்டாய சேவை மூலம் இளைய தலைமுறையினரிடையே தேசிய உணர்வை மீண்டும் கட்டி எழுப்புவதுடன் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை அவர்கள் பெற்றுக்கொள்ள வழி செய்யுமெனவும் தான் நம்புவதாக சூனாக் தெரிவித்துள்ளார்.

“ஒரு தந்தையாக, எனது இரண்டு பெண் பிள்ளைகளும் தேசிய சேவையில் இணைந்து திருப்தி தரும் அனுபவத்தைப் பெறுவார்கள் என்பதைத் தான் எதிர்பார்த்திருக்கிறேன்” என சூனாக் கூறியுள்ளார்.

அடுத்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பட்சத்தில் “தேசிய சேவைத் திட்டம்” தொடர்பாக ஒரு ரோயல் கொமிசன் ஒன்றை ஆரம்பித்து அதற்கடுத்த வருடம் செப்டெம்பர் மாதமளவில் சேவைகள் ஆரம்பமாகுமென அறியப்படுகிறது.

சூனாக்கும் அவரது மிக நெருங்கிய ஆலோசகர்களும் கலந்துகொண்ட இரகசியக் கூட்டமொன்றில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதெனவும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் வளர்ச்சியால் உலகம் எதிர்நோக்கப்போகும் ஆபத்துகளை எதிர்கொள்ளவதற்கு பாதுகாப்பு படைகளைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என சூனாக் தெரிவித்ததாக ‘மெயில் ஒன் சண்டே’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் 364-வருட வரலாற்றில் அதன் இராணுவம் முழுவதுமே தொண்டர்களாலான ஒன்றாகவே இருந்துவந்ததென்றும் பின்னர் முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் போது ஆரம்பிக்கப்பட்ட கட்டாய ஆட்சேர்ப்பு 1960 இல் நிறுத்தப்பட்டது என்றும் அறியப்படுகிறது. 2010 முதல் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட செலவீனக் குறைபாட்டால் படைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 25% த்தால் குறைக்கப்படட்து எனவும் கூறப்படுகிறது. (Image Source: British Army Website)