பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன!
கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத் தீவிரமாக்குகின்றன என்ற செய்தியை யாரோ பரவவிட்டதைத் தொடர்ந்து இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
“இது முற்று முழுதும் பொய்யான தகவல். அத்தோடு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, இக் காலகட்டத்தில், எமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு கருவி அது. இது மிகவும் கோழ்த்தனமான ஒரு நடவ்டிக்கை” எனத் தேசிய சுகாதார சேவைகள் வாரியத் தலைவர் ஸ்டீபன் போவிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
சீனாவின் வூஹான் நகரில் 5G கோபுரங்களை நிறுவிய பின்னரே SARS-CoV-2 வைரஸ் சீனாவிலும், இதர நாடுகளிலும் பரவத் தொடங்கியது என்ற பொய்யான தகவல் சமீப காலங்களில் வலைத்தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் யப்பான், ஈரான் போன்ற நாடுகளில் இன்னும் 5G கோபுரங்கள் எதுவும் நிறுவப்படவில்லையாயினும் அங்கும் வைரஸ் பரவி வருகிறது என்பதைச் இச் செய்தியைப் பரப்புபவர்கள் உணரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
பேமிங்க்ஹாம், மேர்சிசைட் ஆகிய நகரங்களில் 5G கோபுரங்கள் தீப்பற்றி எரியும் காணொளிகள் பரவலாகி வருகிறது. 5G அலைகளினால் உடல் நலத்திற்குக் கேடு விளையாது என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பிரித்தானிய பத்திரிகை ஒன்று 5G அலைக்கற்றைகளினால் உடலுக்குத் தீங்கு விளையலாம் எனச் செய்தி வெளியிட்டிருந்தது. சர்வதேச வரைமுறைகளுக்கு அமையவே இத் தொழில்நுட்பம் பாவிக்கப்படுகிரது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இப் பொய்த் தகவல், முகநூல், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் தளங்களினூடாகப் பல லட்சம் பாவனையாளரைச் சென்றடைந்திருக்கிறது. சில நம்பகத்தன்மையுள்ள கணக்காளர்களும் இச் செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள். ஜனவரி பிற்பகுதியிலிருந்து இப்படியான செய்திகள் வலம் வருகின்றன.
இச் செய்திகளில் ஒன்று, 5G அலைகள் மனிதரின் நிர்ப்பீடன ஆற்றலை (immune system) பாதிப்பதால் வைரஸ் தொற்றிக்கொள்ள ஏதுவாகிறது என்கிறது.
இன்னுமொரு செய்தி, 5G அலைகள் வைரஸ்களைக் காவிச் செல்கின்றன என்கிறது.
இந்த இரண்டுமே உண்மைகளற்ற குப்பைகள் எனச் சாடுகிறார் றெடிங்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கல உயிரியல் பேராசிரியர் டாக்டர் சைமன் கிளார்க்.
கோவிட்-19 தொற்றுக்கு, உலகம் முழுவதும் இதுவரை 1.2 மில்லியன் மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். அதில் 312,000 பேர் அமெரிக்காவிலும், 130,759 பேர் ஸ்பெயினிலும், 124,632 பேர் இத்தாலியிலும், 96,000 பேர் ஜேர்மனியிலும் உள்ளனர்.