World

பிரித்தானியாவில் ‘அரகலயா’ : வெளிநாட்டாரின் போர்?

பிரித்தானியா எரிகிறது. எதிர்பார்த்தது தான்.

‘நெருப்பை நெருப்பால் அணைக்கவேண்டும்’ என்றொரு சொல்வழக்கு தமிழில் இருக்கிறது. அதாவது சிறிய நெருப்பொன்றை நாமாகவே ஆரம்பித்து வரவிருக்கும் பெரிய நெருப்பைத் தடுப்பது என்பது இதன் பொருள். ஆங்கிலத்தில் control fire என்று இதை அழைப்பார்கள். காடுகளின் எல்லைகளில் வரண்டு போன புற்கள், பற்றைகள் இருந்தால் அவற்றை அழித்து பெரிய காடுகளைப் பாதுகாப்பார்கள். இந்நடைமுறையைத் தவறவிட்டதனால் ஏற்பட்டதுதான் தான் பிரித்தானியாவில் இப்போது எரியும் பெரிய நெருப்பு .


பிரித்தானியாவில் சவுத்போர்த் என்னுமிடத்தில் மூன்று குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொன்றவர் ஒரு இஸ்லாமிய குடிவரவாளர் என்ற வதந்தியுடன் ஆரம்பித்தது இந்த நெருப்பு. உண்மையில் இந்த நபர் ருவாண்டா பூர்வீக பெற்றோர்களுக்கு பிரித்தானியாவில் பிறந்த பிரித்தானியர். ஆனால் அவரை ஒரு இஸ்லாமியராகக் கூறியதால் வெள்ளையரல்லாத அனைவர் மீதும் பற்றியிருக்கிறது இந்தப் பெரு நெருப்பு.

பிரித்தானிய காலனித்துவ காலத்திலிருந்து குடிவரவாளர்கள் இந்திய துணைக்கண்டம், ஆபிரிக்கா, கரீபியன் தீவுகள், ஆசியா எனப் பலவிடங்களிலுமிருந்தும் வெள்ளையர் விரும்பாத வேலைகளுக்காகக் கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்தார்கள். இயந்திரமயப்படுத்தலினால் ஆலைகளும் உற்பத்திகளும் அதிகரிக்க அவற்றில் பணிபுரியவெனக் கொண்டுவரப்பட்ட புதியவகை அடிமைகள் லிவர்பூல் போன்ற வறுமைப்பட்ட பிரதேசங்களில் ஆடைத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் குடிவைக்கப்பட்டார்கள். இப்பிரதேசத்தில் வாழும் பிரித்தானிய வெள்ளை இனத்தவரும் பொருளாதார ரீதியில் அடிமட்டத்தில் இருந்தவர்கள் ஆகையால் இவ்விரு குடிமக்களும் பெரும்பாலும் தத்தம் பிரதேசங்களில் ஒதுக்கமாக வாழ்ந்துகொண்டிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில் பணப் பேய்களினால் எல்லைகள் தகர்க்கப்பட்ட பின்னர் தெற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த வறுமைப்பட்ட பல ‘வெள்ளையர்கள’ இதர ஐரோப்பிய நாடுகளை விட பிரித்தானியாவையே அதிகம் விரும்பியதால் அங்கு குடிபெயர்ந்தார்கள். இவர்களின் வரவினால் பிரித்தானியாவில் பாரிய கலாச்சார மாற்றம் ஏற்பட்டதுடன் குற்றச்செயல்களும் அதிகரித்தன. இதே வேளை ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, அல்பேனியா, லிபியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்த பலரது இறுதித் தங்குமடமாகவும் பிரித்தானியாவே இருந்தது. இதன் காரணமாகவே BREXIT இயக்கம் பிறந்ததும் பிரித்தானியா இக்கூட்டிலிருந்து வெளியேறியதும். ஆனாலும் இவ்வகதிகளின் வருகை குறையவே இல்லை. ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான், அல்பேனியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஏழ்மை நிலைக்கு பிரான்சும் பிரித்தானியாவும் முக்கிய பொறுப்பேற்கவேண்டுமென்ற தார்மீக உரிமையுடன் பிரான்ஸ் எல்லையில் குவியத் தொடங்கினர். பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் உள்ள கடற் பிரதேசம் மூலம், கடலில் மூழ்கி இறந்தது போக மீதிப்பேர் திருட்டு வழிகளில் பிரித்தானியாவிற்குள் நுழைந்தனர். பிரான்சியப் பொலிசாரும் இவ்வகதிகள் தம் நாட்டில் தங்கிவிடாதிருப்பதற்காக பிரித்தானியாவுக்கு அவர்களை ஏற்றுமதி செய்வதில் துணையாக இருந்தனர். இதர தெற்கு ஐரோப்பியரைப் போலல்லாது இவர்களால் பிரித்தானிய சமூகங்களோடு கலந்து வாழ முடியவில்லை. பிரித்தானியாவின் எல்லைகளில் கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்ட நிலையில் குவிக்கப்பட்ட இவ்வரண்ட மக்கள் மீது நெருப்பு இலகுவாகப் பற்றிக்கொண்டது. இது இரண்டாவது வெளிநாட்டார் வருகை. இவர்களுக்கும் காலனித்துவ காலத்து குடிவரவாளருக்கும் நிறைய வித்தியாசமிருந்தது.

மூன்று குழந்தைகளைக் கொன்றவர் சவுத்போர்ட்டில் வாழும் ஒரு ருவாண்டா அகதிகளுக்குப் பிறந்தவர். அவர் இஸ்லாமியர் அல்ல என்பதையோ அல்லது அவருக்கு மனநோய் இருந்தது என்றவிடயத்தையோ பெருமூடகங்கள் மறைத்துவிட்டன. அல்லது காவல்துறை உடனடியாக அறிவிக்கத் தவறிவிட்டது. பிரித்தானியாவின் அதி தீவிர வலதுசாரிகள் இக்குற்றவாளியை ஒரு ‘இஸ்லாமிய குடிவரவாளர்’ என்று அடையாளப்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் ஊதிப் பெருக்கவிட்டனர். அதற்கு தனவந்தர் இலான் மஸ்க் அமெரிக்காவிலிருந்து எண்ணியை ஊற்றி ப் பெருநெருப்பாக்கியிருக்கிறார்.

இதில் இன்னுமொரு கொசிறு. இலான் மஸ்க் போன்றவர்கள் களத்தில் இறங்குவதற்கு முன்னரே ரொம் றொபின்சன் என்ற பெயருடைய ஒரு தீவிர வலதுசாரி தான் இப்பிரச்சினையை ஒரு ‘இஸ்லாமிய’ பிரச்சினை ஆக்கியது எனவும் அவர் உண்மையில் பிரித்தானியரல்லர்; ஒரு மொஸாட் உளவாளி எனவும் கூறப்பட்டது. சமீப காலங்களில் பாலஸ்தீன விடயங்களில் உலகின் பெரு நகரங்களில் பாரிய இஸ்ரேல் எதிர்ப்புக் கூட்டங்களில் முஸ்லிம் மக்களுடன் சகல இன மக்களும் கைகோர்க்க ஆரம்பித்திருந்தார்கள் என்பதனால் அவற்றைக் குழப்புவதற்கு ‘றொபின்சன்’ இச்சந்தர்ப்பத்தைப் பாவித்திருந்தார் என்பதும் சமூகவலைத் தளங்களில் உலவியது. பெருமூடகங்கள் இவ்விடயத்தில் மெளனமாக இருந்தமைக்கான காரணமும் இப்போது புரிந்திருக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம், மத்திய கிழக்கு போர், சோவியத் யூனியன் உடைவு, சிரியப் போர் போன்றவை காரணமாக பிரித்தானியா மட்டுமல்ல லல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கலாச்சார சீரழிவு ஆரம்பித்திருந்தது. ஹிட்லரின் தோல்வியாலும் அவமானத்தாலும் உறங்கு நிலையில் வைக்கப்பட்டிருந்த தீவிர வலதுசாரியம் மீண்டெழுவதற்கு இது வளமான களத்தை அமைத்துக் கொடுத்துவிட்டது. இத்தாலி, பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளில் வலதுசாரிகள் கணிசமான ஆதரவைப் பெறுவதற்கு இதுவே காரணம். நடந்து முடிந்த தேர்தலில் பிரித்தானியாவில் வலதுசாரிகளின் எழுச்சி காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமல்ல ஏனைய கட்சிகளின் வாக்குகளையும் தீவிர வலதுசாரிக் கட்சி அபகரித்திருந்தது. இதுவே உலகின் நடைமுறையாகவும் மாறி வருகிறது. ட்றம்பின் ஆதரவுத் தளத்தைப் பெருக்குவதற்கு பிரித்தானிய கலவரம் நன்றாகவே பாவிக்கப்படுகிறது. இலான் மஸ்க் ஊற்றும் எண்ணையில் ‘குடிவரவாளருக்கு எதிரான’ உலகப் பொது இயக்கமொன்று ஒளிர ஆரம்பித்திருக்கிறது. “பிரித்தானியாவில் நடைபெற்றதே இங்கும் நடைபெறப்போகிறது” என்ற சுலோகத்தை ட்றம்ப் மட்டுமல்ல இனி வரப்போகும் வலதுசாரிகளும் உச்சாடனம் செய்யப்போகிறார்கள். அதற்காகவேனும் பிரித்தானியா எரியவேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்.

“பிரித்தானியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில் 37% மான இஸ்லாமியர்கள் பிரித்தானியாவில் ஷரியா சட்டம் கொண்டுவரப்படவேண்டுமெனக் கூறியிருக்கிறார்கள். அங்கிருக்கும் தீவிர இஸ்லாமிய மதவாதியான அஞ்செம் சவுத்திரி போன்றவர்கள் இந்த எல்லைப்புற கலாச்சார வரட்சிக்கு எண்ணையூற்றி வருகிறார்கள். இதனால் இலான் மஸ்க் போன்றவர்களும் எண்ணை ஊற்றுவதைப் பெரும் சமூகம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

பிரித்தானிய அரசும் காவல்துறையும் எதிர்பார்த்தது போல இந்நெருப்பு சில குப்பை கூழங்களைத் தின்றவுடன் நின்றுவிடப் போவதில்லை. எல்லைப்புறக் குப்பைகூழங்களை நீண்டகாலமாகக் குவியவிட்டதன் தவறை இப்போது பிரித்தானிய அரசு புரிந்துகொண்டுவிட்டது. இக்குப்பைகளுக்கு பிரித்தானியவர்கள் தீமூட்டவில்லை. அது வெளியாரின் வேலை. அவர்கள் தமது காரியங்கள் நிறைவேறுமட்டும் எண்ணையை ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். அதே வேளை தமது தேவைக்காக அஞ்செம் சவுத்திரி போன்றோருக்கும் இப்பெருநெருப்பு அவசியம்.

ஆரம்பத்தில் இக்கலவரங்கள் சிறு குழுச்சண்டைகளாக வலதுசாரி – முஸ்லிம் குழுக்களிடையே நடந்தாலும் இப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக இடதுசாரிகளும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதைத் தாண்டி வலதுசாரிகள், குடிவரவாளர்களுக்கு அபயம் கொடுத்துவரும் / தங்கும் இடங்களையும் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தெருக்களில் செல்லும் வெள்ளையரல்லாத பாதசாரிகள், வாகனதாரிகள் ஆகியோரும் தாக்கப்படுகிறார்கள். இதனால் இது ஒரு இனக்கலவரமாக மாறும் ஆபத்து இருக்கிறது. இது தொடர்பாக அரசு இன்று அவசர அமைச்சரவைச் சந்திப்பொன்றை (COBRA ) நிகழ்த்தியிருக்கிறது. 6,000 விசேட பொலிஸ் படையொன்று தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. எதுவும் நடக்கலாம்.

அதே வேளை அமெரிக்க அரசியலமைப்பின் முதலாம் திருத்தமான “பேச்சுச் சுதந்திரத்தை” பிரித்தானியா மதிக்கவேண்டுமென இலான் மஸ்க் தனது ஊடகப் பெருவெளியில் அலறிக்கொண்டிருக்கிறார். அவரது வாயை அடக்க எவராலும் முடியாது என்பதுவே அச்சம் தருவது.

பிரித்தானியா வாழ் தமிழர்கள் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என ஒரு நல்ல உள்ளம் அங்கிருந்து கேட்டிருக்கிறது. எல்லோருக்குமாக கையேந்துகிறோம்.