Sri Lanka

பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியைக் கைது செய்க – தமிழ் அமைப்புகள்


போர்க்குற்றங்கள் காரணமாக, பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரிகேடியர் சுவர்ண பொதொடவினது ராஜதந்திர விசாவை மீளப்பெறும்படி வெளிநாடு மற்றும் பொதுநலவாய ராஜாங்கச் செயலாளர் கெளரவ டொமினிக் ராப்பிடம், உலகம் முழுவதிலுமிருந்து பல தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இராஜதந்திர அந்தஸ்தை மீளப்பெறுவதன் மூலம போர்க்குற்றங்கள் புரிந்தமைக்காக பிரித்தானிய பொலிசார் அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் இவ்வமைப்புகள் கேட்டுள்ளன.

முதலில் மேஜர் ஜெனெரல் பிரசன்னா சில்வா பாதுகாப்பு இணைப்பதிகாரியாக இருந்தபோது மூன்று ஐ.நா.வின் அறிக்கைகளில் அவர் போர்குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார். அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்ற அச்சத்தில் அவர் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டிருந்தார். இரண்டாவதாக, இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணாண்டோ ‘தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன்’ எனப் பயமுறுத்தியமைக்காக, அவர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற காரணத்துக்காக அவரும் மீள அழைக்கப்பட்டார். தற்போது பிரிகேடியர் பொதொட நியமிக்கப்பட்டிருக்கிறார் எனத் தமிழமைப்புகள் தமது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

இக் கோரிக்கையைத் தாங்கிய கடிதத்தில் பின்வரும் அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன:

  • இனப்படுகொலையைத் தடுக்கவும், இனப்படுகொலை செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்குமான சர்வதேச மையம் (International Centre for Prevention a:& Prosecution of Genocide)
  • பேர்ள் (PEARL)
  • தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா (Tamil Coordinating Committee UK)
  • தொழிற்கட்சிக்கான தமிழர்கள் (Tamils for Labour)
  • தமிழர் தகவல் மையம் (Tamil Information Centre)
  • தமிழ் இளையோர் அமைப்பு (Tamil Youth Organisation)
  • இனப்படுகொலைக்கு எதிராக இணைந்தவர்கள் (Together Against Genocide)
  • நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Tamil Eelam)
  • உலகத் தமிழ் வரலாற்று கழகம் (World Tamil Historical Society)


மே 2009 இல் நடைபெற்ற இறுதிப் போரின்போது பிரிகேடியர் சுவர்ண பொதொட இலங்கை இராணுவத்தில் மிக முக்கிய பொறுப்பிலிருந்தார். பெப்ரவரி 2008 இல் பிரிகேடியர் பொதொட லெப்டினண்ட் கேணலாகப் பதவி உயர்த்தப்பட்டு இலங்கை இராணுவத்தின் அதி முக்கிய முதலாம் ஊடுருவும் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டு பெப்ரவரி 2009 வரை அப்பதவியிலிருந்தார்.

இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்களைச் செய்தவர்களையும், போர்க்குற்றம் புரிந்தவர்களையும் பற்றி ITJP அமைப்பு விரிவான அறிக்கையைத் தயாரித்து வைத்திருக்கிறது. பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய அலுவலகம் இப்படியானவர்களை முக்கிய பதவிகளில் நியமிப்பதற்கு முன்னர் அவ்ரகளைப் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரிகேடியர் பொதொட விடயத்தில் இது செய்யப்படவில்லை எனத் தமிழ் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

இக் காரணங்களுக்காக பிரிகேடியர் பொதொடவின் ராஜதந்திர கவசத்தைக் கழைவதன் மூலம் அவரைப் போர்க் குற்றங்கள் புரிந்தமைக்காகவும், சர்வதேச சட்டங்களை மீறியமைக்காகவும், லண்டன் பொலிசார் அவரைக் கைதுசெய்ய வழிவகுக்கும்படி தமிழ் அமைப்புகள் கேட்டுள்ளன.

தமிழ் அமைப்புக்களின் கோரிக்கை பற்றிய கடிதத்தின் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தின் பனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக உலக மனித உரிமை அமைப்புகள, ஊடகங்கள், நாணயமிக்க மனிதர்கள் வெளியிட்ட அறிக்கைகள், கட்டுரைகள், தரவுகள் போன்ற பல ஆவணங்களை இந்த அமைப்புகள் ஆதாரங்களாக இணைத்துள்ளன.