பிரித்தானியாவின் ருவாண்டா அகதி ‘ஏற்றுமதி’ முயற்சியை ஐரோப்பிய நீதிமன்றம் நிறுத்தியது
பிரித்தானியாவில் அகதிநிலை கோரிய வெள்ளையரல்லாதோரை ருவாண்டாவுக்கு ஏற்றுமதி செய்ய எடுத்த முயற்சிய ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நேற்று (14) தடுத்து நிறுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் வேண்டப்படாதவர்களாகக் கருதப்படும் இந்த அகதிகளை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இரு ந்நாடுகளும் இணக்கம் கண்ட நிலையில் முதலாவது அகதி விமானம் நேற்றுப் புறப்படவிருந்தது. பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு மதத் தலைவர்களுட்படப் பல மனித உரிமை அமைப்புக்களும் பலத்த எதிர்ப்புகளை வெளிக்காட்டி வந்தன. இதற்கு எதிராகப் பிரித்தானியாவின் பல நீதிமன்றங்களில் வழக்குகள் போடப்பட்டிருந்தாலும் இறுதியில் நீதிமன்றங்களும் அரசாங்கத்தின் மனிதாபமானமற்ற செயலுடன் இணங்கிப்போக இவ்வகதிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு வழியனுப்பப்படவிருந்தனர். இந் நிலையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தலையிட்டு அதை நிறுத்தியுள்ளது.
“இது ஒரு செயற்படுத்துவதற்கு கடினமான ஒரு விடயமென்பது எனக்குத் தெரியும். ஐரோப்பிய நீதிமன்றம் இதில் தலையிட்டு நிறுத்தியதையிட்டு நான் ஆச்சரியப்படுகிறேன். விமானத்தைக் கிளம்ப முடியாமல் தடுத்து நிறுத்தியமை எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அதற்காக அரசாங்கம் சும்மா இருந்துவிடப் போவதில்லை. எப்படியாவது இவ்வகதிகள் ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்டேயாவார்கள்.” என பிரித்தானிய உள்ளக அமைச்சர் பிரிதி பட்டேல் சூளுரைத்திருக்கிறார்.
கடந்த சில நாட்களில் மட்டும் ருவாண்டாவுக்கு அனுப்பப்படவிருந்த 30 அகதிகள் சுகவீனம் மற்றும் மனித உரிமகளைக் காரணம் காட்டித் தமது நாடுகடத்தலைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார்கள். நேற்று (14) புறப்படவிருந்த விமானத்தில் ஏற்றப்பட்ட ஒரு ஈராக்கிய அகதி தனது விசாரணகள் பிரித்தானிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது தன்னை அனுப்பமுடியாது என வாதிட்டதை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இவ்வாட்கடத்தலுக்கு தற்காலிக முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.
இவ்வகதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக ருவாண்டா பிரித்தானியாவிடமிருந்து US$ 144 மில்லியன்களைப் பெறுவதற்குச் சம்மதித்திருக்கிறது. இவ்வகதிகள் அனைவரும், அல்பானியா, ஈராக்கிய, ஈரானிய, சிரிய அகதிகள் ஆவர். யூக்கிரெய்னிலிருந்து புதிதாகக் குடிபுகுந்திருக்கும் வெள்ளை அகதிகள் ஒருவரும் ருவாண்டாவுக்கு விறபனை செய்யப்படமாட்டார்கள். Care4Calais என்ற அமைப்பு இவர்களை நாடுகடத்தக்கூடாது என்று நீதிமன்ற வழக்குகள் முதல் பலவகையான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
ஆர்ச் பிஷப் ஒஃப் கன்ரெபெரி ஜஸ்டின் நெல்பி உட்படப் பல மதத் தலைவர்கள் அரசாங்கத்தின் இந் நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். “இது எமது நாட்டை வெட்கப்படவைக்கும் ஒரு காரியம்” என ஆர்ச் பிஷப் தெரிவித்துள்ளார்.
பிரான்சிலிருந்து கடல் வழியாக பிரித்தானியாவுக்கு அகதிகளாக வருபவர்களைத் தஹ்டுத்து நிறுத்துவதற்காகவே நாம் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம். உண்மையான அகதிகள் பிரான்ஸிலேயே அகதி அந்தஸ்துக் கோரிக்கொள்ள முடியும். பெரும்பாலானவர்கள் கட்டத்தல் காரரின் ஆசைவார்த்தைகளை நம்பிக்கொண்டு பெருந்தொகையான பணத்தைச் செலவழித்து ஆபத்தான இக் கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர். இதைத் தடுக்கவே நாம் இம்முயற்சியை மேற்கொள்கிறோம் என பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் கலே துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் முகாம்களை அமைத்து மிகவும் மோசமான வாழிடங்களில் பல மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க அகதிகள் பிரித்தானியாவுக்கு வருவதற்குத் தவம் கிடக்கிறார்கள். அவர்கள் பிரான்சில் அகதிநிலை கோருவதற்கு விரும்பாதவர்கள் என்ற வகையில் பிரான்சிய பொலிசாரும் அவர்களைக் கண்டும் காணாது விட்டுவிடுகிறார்கள். இந்நிலையில் பணம் உள்ளவர்கள் கடத்தல்காரர்களின் உதவியுடன் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்து விடுகிறார்கள். பலர் இப்பயணத்தை முடித்துக்கொள்ளாது கடலோடு சங்கமமாகி விடுகிறார்கள். இதனால் பிரித்தானிய-பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குள் பூசல் மூண்டிருந்தது. இந்நிலையில் ருவாண்டாவினுடனான அகதி ஏற்றுமதி உடன்படிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதே வேளை ருவாண்டா மனித உரிமைகளை மீறும் ஒரு நாடு என ஐ.நா. அகதிகள் ஏஜென்சி குற்றம் சுமத்தியிருந்தும்கூட அதையும் மீறி பிரித்தானிய அரசு இவ்வக்திகள் நாடுகடத்தலைத் துரிதப்படுத்தி வருகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகமும் ருவாண்டாவின் மனித உரிமைகள் விடயத்தில் எச்சரிப்பை விடுத்துள்ளது.