World

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் ஒரு இந்திய பூர்விகத்தைக் கொண்டவர்?

அவமானத்தின் மத்தியில் பத்வியிறக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் இடத்தை நிரப்புவதற்கான போட்டிகள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டன. இப் பதவியைக் கைப்பற்றப் போட்டியிடுபவர்களில் ஒருவர் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சூனாக் எனக் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் பிறந்த 42 வயதான ரிஷி சூனாக் கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து 2015 முதல் யோர்க்‌ஷயர் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தி வருபவர். இவரது துணைவியார் உலகப் பனக்காரர்களில் ஒருவரான ‘இன்ஃபோசிஸ்’ மூர்த்தியின் மகளான அக்‌ஷதா மூர்த்தியாவார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உண்டு.

2020 -2022 வரை பொறிஸ் ஜோன்சனின் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த சூனாக், கோவிட் பேரிடர்க் காலத்தில் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை மிகவும் இலாவகமாக நகர்த்திச் சென்றவர் எனப் புகழப்படுபவர். முதலீட்டு வங்கித் துறையில் உலகப் பிரபலமான கோல்ட்மான் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் நிதிக்கொள்கை தொடர்பாக நிறைய அனுபவமுள்ளவர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது அவர் தனது பூர்வீகத்தை நினைவுகூர்ந்து நேர்மை, தீவிரம், தீர்க்கம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இப் பதவிக்குப் போட்டியிடுவதாகக் கூறியிருக்கிறார். இருப்பினும் தனது முதலீட்டு வங்கித்துறை அனுபவத்தையோ அல்லது தனது மனைவி பல பில்லியன்களுக்கு சொந்தக்காரி என்பதையோ கூறவில்லை. சமீபத்தில் அவரது மனைவி வருமானவரி செலுத்தவில்லை என வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து அவர் முழுப்பணத்தையும்ம் ஒரேயடியாக மீளச் செலுத்தியிருந்தார். பிரித்தானியாவின் பல பணக்காரர்கள் அந்நாட்டுக்கு வெளியே சொத்துக்களை வைத்திருக்கும்போது, வருமான வரிக் காரணங்களுக்காக, இரட்டைக் குடியுரிமையையும் எடுத்து வைத்திருப்பது வழக்கம். அந்த வகையில் அக்‌ஷதா மூர்த்தி இந்தியக் குடியுரிமையையும் வைத்திருக்கிறார் எனப்படுகிறது.

இருப்பினும் ஒரு இந்திய பூர்வீக பிரித்தானிய குடிமகனைப் பிரதமராக ஏற்றுக்கொள்வதற்கு பிரித்தானிய மக்கள் தயாராக இருக்கிறார்களா என்பது பெரியதொரு கேள்வி. ஜோன்ஸன் பதவி விலகுவதாக அறிவித்ததும் யூகவ் என்னும் நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பில், அடுத்த பிரதமராக வரக்கூடிய சாத்தியம் யாருக்கு உண்டு என்ற கேள்விக்கு கிடைத்த பதிலில் சூனாக் மூன்றாம் இடத்திலேயே வைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் முதலாமிடத்திலும் வர்த்தக அமைச்சர் பெனி மோர்டோண்ட் இரண்டாமிடத்திலும் இருந்தனர்.

பிரித்தானிய அரசியலில் மூன்று நிலை அரசுகளின்பிரதிநிதிகளாகப் பல வெளிநாட்டுப் பூர்வீகங்களைக் கொண்டவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். பிரித்தானிய பாராளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதிநிதிகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தோர் சுமார் 17 பேர் இருப்பதாக செய்தியொன்று கூறியிருந்தது. பிரித்தானியாவின் உள்ளக அமைச்சராக இருப்பவர் பிரீதி பட்டேல் எனப்படும் ஒரு இந்திய வம்சாவளியினர். லண்டன் நகரபிதாவாக இருப்பதும் ஒரு பாகிஸ்தானிய பூவீகத்தைச் சேர்ந்த ஒருவராவர். பல ஈழத் தமிழர்களும் கவுன்சில்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை காலமும் இருந்த பிரித்தானிய அரசாங்கங்களில் பொறிஸ் ஜோன்சனின் அரசாங்கத்திலேயே பெருமளவு வெளிநாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.