பிரிகேடியர் பெர்ணாண்டோ குற்றவாளி – பிரித்தானிய நீதிமன்றம்

Spread the love
இலங்கைக்கும் அதன் இராணுவத்துக்கும் அவமானத்தைத் தேடித் தந்துள்ளார் – நீதிபதி ஆர்புத்னொட்

டிசம்பர் 6, 2019 அன்று இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணாண்டோ பொது ஒழுங்குச் சட்டத்தின் பிரிவுகள் 4A(1), 5 கீழ் குற்றவாளி என பிரித்தானிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கீத் குலசேகரம்

பிரிவு 1(A) இன் கீழ், ஒருவரை அவமதிக்கும், அச்சுறுத்தும், புண்படுத்தும் வகையில் பொது வெளியில் நடத்தையாலோ, எழுத்தினாலோ, பேச்சினாலோ வெளிப்படுத்துதல் காரணங்களுக்காகவும், பிரிவு 5 இன் கீழ் அதற்கான தண்டனையாக குறைந்தது 6 மாதம் சிறை அல்லது அபராதம் கொடுக்கப்படலாமென்பதும் இத் தீர்ப்பின் அம்சங்களாகும்.

பெப்ரவரி 4, 2018 அன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் தமிழர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பிரியங்கா பெர்ணாண்டோ ‘கழுத்தை வெட்டுவேன்’ எனச் சைகை மூலம் ஆர்ப்பட்டக்காரர்களை நோக்கிக் காட்டியமை மீதான வழக்கை விசாரித்த பிரித்தானிய நீதிமன்ற நீதிபதி ஜெம்மா ஆர்பித்னொட் இத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அன்றய திகதியில் இலங்கைத் தூதரகம் இலங்கையின் 70 வது வருடச் சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. 70 வருட காலமாகத் தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள் எனப் பதாகைகளுடன் தமிழர் சிலர் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பட்டத்தை நிகழ்த்தினர். பிரியங்கா பெர்ணாண்டோ இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை வீடியோவில் பதிவுசெய்ததுமல்லாமல் சைகை மூலம் அவர்களைக் கொலை செய்வேன் என மிரட்டியுமிருந்தார்.


இச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரியங்கா பெர்ணாண்டோ மீது விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கோரி, ‘இனப்படுகொலையாளிகளின் மீது வழக்குத் தொடர்வதற்கும் இனப்படுகொலையைத் தடுப்பதற்குமான சர்வதேச மையம் (The International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG)) பிரித்தானிய அரசிடமும் பொதுநலவாய அலுவலகத்தினிடமும் அழுத்தம் கொடுத்து வந்தது.

இச் சம்பவத்திற்காக, பெர்ணாண்டோவின் ராஜபிரதானிகள் பாதுகாப்பு அந்தஸ்தைக் காரணம் காட்டி அவரைக் கைதுசெய்ய முடியாதென பிரித்தானிய காவற்துறை மறுத்திருந்ததைத் தொடர்ந்து தமிழர் தரப்பு இவ் வழக்கை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல மேற்கூறிய அமைப்பு உதவியையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தது. தமிழர் தரப்பின் ஆலோசகராக சட்ட நிபுணர் கீத் குலசேகரம் அவர்கள் பணியாற்றியிருந்தார்கள்.

வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அழைப்பாணையை உதாசீனம் செய்த பெர்ணாண்டோ நீதிமன்றத்தில் நேரடியாகச் சமூகமளிக்காததால் அவர் இல்லாமலேயே அவரைக் குற்றவாளியாகக்கண்டு நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்தோடு அவர் மீதான பிடியாணை ஒன்றையும் நீதிபதி வழங்கியிருந்தார்.

இதே வேளை, இலங்கை அர்சாங்கத்தின் அழுத்தத்தின் பேரில், பொதுநலவாய அலுவலகம் தலையிட்டு, பிரிகேடியரின் ராஜகாரிய அந்தஸ்தைப் பாவித்து அவர் மீது வழக்குப்பதிய முடியாது என வாதிட்ட காரணத்தால் இவ் வழக்கு மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. ‘கழுத்தை வெட்டுவேன் எனச் சைகை காட்டுவது இரு இராணுவ அதிகாரியின் கடமையல்ல, எனவே அவர் ராஜகாரிய அந்தஸ்துக்குரியவரல்ல’ என நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

டிசம்பர் 06, 2019 அன்று நீதிபதி ஆர்புத்னொட் தீர்ப்பை வழங்கியதோடு, மொத்தச் செலவுகளுக்குமான அபராதமாக 4,344.00 பிரித்தானிய பவுண்டுகளைக் கட்டவேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கிறார்.

Related:  பிரி. பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் நிலைமை மோசமடைகிறது!

“மூத்த ராஜதந்திரியாகக் கடமையாற்றும்பொழுது நடந்துகொண்ட முறையினால், பெர்ணாண்டோ இலங்கை இராணுவத்திற்கும், இலங்கை நாட்டிற்கும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளார்” என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

“பல தடவைகள் இவ் வழக்குப் பின்போடப்பட்டிருந்தும், இவ்வழக்கைக் கைவிடும்படி மிகப்பலமாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தும் ICPPG இவ்வழக்கில் அயராது பாடுபட்டு நல்லதொரு முடிவைத் தேடித் தந்துள்ளதன் மூலம் பிரித்தானிய நீதித்துறை மீதான நம்பிக்கையை மேலும் வஅர்த்துள்ளது” என இவ் வழக்கிந் காரணகர்த்தாக்களில் ஒருவரான கீத் குலசேகரம் கூறினார்.

வழக்குத் தொடுநர்களான மயூரன் சதானந்தன், பள்ளிய குருகே வினோத் பிரியந்த பெரேரா, கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி மற்றும் துணிச்சலுடன் சாட்சியமளிக்க முன்வந்த சபேஷ்ராஜ் சத்தியமூர்த்தி, நாடுகடந்த தமிழீழத்தின் பா.உ. சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோருக்கு ICPPG தனது ஆழ்ந்த நன்றியத் தெரிவித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.

ICPPG சார்பில் சட்ட நிபுணர்கள் பீற்றர் கார்ட்டர் கியூ.சி., சாந்தி சிவகுமாரன், போல் ஹெரன், ஹெலென் மோவாட் ஆகியோரது அர்ப்பணிப்பான சேவைகளுக்கும் தமது நன்றியைத் தெரிவிப்பதாக அவ்வமைப்பு அறிவித்திருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>