World

பிரான்ஸ் | பொலிஸ் ஊழியர்களைப் படமெடுக்கக் கூடாது என்ற சட்டவரைவுக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்


கடமையிலிருக்கும் பொலிஸ் ஊழியர்களைப் படமாகவோ அல்லது காணொளியாகவோ எடுத்துப் பகிரங்கப்படுத்துவதற்கு எதிராகக் கொண்டுவரப்படவிருக்கும் சட்டத்துக்கு எதிராகப் பிரான்ஸ் நாட்டின் பல நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்துவருகிறார்கள்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்றோனின் கட்சியால் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட வரைவின்படி உள, உடல் ரீதியாகத் தீங்கு ஏற்படும் நோக்கத்திற்காக கடமையிலிருக்கும் பொலிஸ் ஊழியர் ஒருவரின் முகத்தை அடையாளும் காணும் வகையில் படத்தையோ அல்லது காணொளியையோ எடுத்து பகிரங்கப்படுத்தும் ஒருவருக்கு ஒரு வருட சிறையும் 45,000 யூரோ தண்டமும் விதிக்கப்படும்.

அத்தோடு கமரா பொருத்திய ட்றோன்களைப் பாவித்துப் படங்களை எடுக்கவும், சீ.சீ.டி.வி. கமராக்களின் பதிவுகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளவும் பொலிசாருக்கு அனுமதி வழங்கவும் இச் சட்டம் வழிசெய்கிறது.

இச் சட்டம் ஊடகவியலாளரின் செய்தி அறிவிக்கும் சுதந்திரத்தை மட்டுப்படுத்தும் என இச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறும் அதே வேளையில், பொலிசாரது குடும்பங்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்பது இச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.



இச் சட்டத்தை எதிர்த்து மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோரது ஆர்ப்பாட்டம் சனியன்று மேற்கு பாரிசிலுள்ள ட்றொகாடெறோ சதுக்கத்தில் இடம்பெற்றது. இவர்களுக்கு ஆதரவாக Yellow Vest, Extinction Rebellion ஆகிய அமைப்புக்களும், கம்யூனிஸ்ட், பசுமைக் கட்சி ஆதரவாளர்களும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

வெள்ளியன்று பாராளுமன்றத்தில் இச் சட்டவைரைவிற்கான முதலாவது வாசிப்பு நடைபெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாசிப்பு செவ்வாயன்று இடம்பெறவிருக்கிறது.

இச் சட்டம் நடைமுறைக்கு வருமானால், பாதுகாப்பு படைகளினால் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களை அம்பலப்படுத்துவதற்கு தம்மால முடியாமற் போகலாம் என ஊடகவியலாளர் தெரிவிக்கின்றனர். ட்றோண்கள் மூலம் எடுக்கும் படங்கள் பொதுமக்களின் முகங்களைப் பதிவு செய்துகொள்ளும் என்பதால் அது தனிமனித சுதந்திரத்தைச் சூறையாடும் நடவடிக்கை எனவும் ஊடகவியலாளர் கூறுகின்றனர்.

சமீப காலங்களில் ஆர்ப்பாட்டக்காரர் மீது, குறிப்பாக கறுப்பின, அரபு மற்றும் சிறுபான்மை இன ஆர்ப்பாட்டக்காரர் மீது, பிரென்ச் பொலிசார் மிகவும் மோசமான, மிருகத்தனமான தாக்குதல்களைச் செய்திருந்தனர்.

இச் சட்ட வரைவு எண்ணற்றவகையில் பிரச்சினைகளை உருவாக்கும் எனக்கூறி இச் சட்டத்தை ஆதரிக்கவேண்டாமெனப் பிரென்ச் பாராளுமன்ற உறுப்பினர்களை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள சபை கேட்டுள்ளது.