“பிரபாகரனை நாய் மாதிரிக் கொன்றேன். அதே மனிதனாக நான் மீண்டும் மாறலாம்” – கோதாபய எச்சரிக்கை!


பித்தள சந்தியில் வைத்து பிரபாகரன் என்னுடன் தனது சேட்டைகளை விட்டது ஞாபகம் இருக்கிறதா? நந்திக்கடலுக்குள்ளால் அவரை இழுத்துவந்து அவரை முடித்துவிட்டேன். விரும்பினால் நான் அப்படியான ஆளாகவும் மாற முடியும்

அம்பாறையில் கோதாபய ராஜபக்ச

எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் ஃபெர்ணாண்டோ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது கடுமையாகத் தாக்கியதால் ஆத்திரமுற்ற ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச நேற்று அம்பாறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“‘ஜனாதிபதி கோதாபயவை’ விட்டு விட்டு , ”பாதுகாப்புச் செயலாளர் கோதாபயவாகிக்’ கடுமையான பாத்திரத்தை எடுங்கள் எனப் புத்த பிக்குகள் கூறிவருகிறார்கள். பித்தள சந்தியில் வைத்து பிரபாகரன் என்னுடன் தனது சேட்டைகளை விட்டது ஞாபகம் இருக்கிறதா? நந்திக்கடலுக்குள்ளால் அவரை இழுத்துவந்து அவரை முடித்துவிட்டேன். விரும்பினால் நான் அப்படியான ஆளாகவும் மாற முடியும்” என மகிழ்ச்சியில் ஆரவாரித்த பெருந்திரளான மக்கள் முன் பேசும்போது கோதாபய தெரிவித்தார்.

நேர்மையானதாக இருக்கும் வரை எதிர்க்கட்சிகள் தமது அரசியலை நடத்தலாம் எனவும், முந்திய அரசாங்கத்தைப்போல் தான் பழிவாங்கும் அரசியலை முன்னெடுக்கவில்லை எனவும், சட்டம் தனது போக்கைத் தீர்மானிக்கத் தான் அனுமதித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனாலும் கோதாபயவை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் பலர் விசாரணைகள் ஏதுமின்றிச் சிறையில் தள்ளப்பட்டும், பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க போன்றோர் சிறைக்குள் தள்ளப்படும் அச்சத்தில் வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.

மிகவும் அச்சம் தரும் அவரது இப் பேச்சு சமூக வலைத் தளங்களின் மூலமும், அவருக்கு நெருக்கமான ஹிரு ரீ.வி., டெறானா போன்ற ஊடகங்கள் மூலமும் பரவலாகத் தெரியப்படுத்தப்பட்டு வருகின்றது.



பிரதேச சபை அரசியலில் கூட ஈடுபடாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் இதுதான் நடக்கும்

பா.உ. ஹரின் ஃபெர்ணாண்டோ

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களில் ‘நந்தசேன’ கோதாபய ராஜபக்சவுக்கு சம்பந்தமுண்டு என்றும், “சேர் உங்கள் நடவடிக்கைகளால் இந்த நாடு சபிக்கப்பட்டுவிட்டது” என ஜனாதிபதியை ‘நந்தசேன கோதாபய ராஜபக்ச’ என விழித்து, எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரிண் ஃபெர்ணாண்டோ பாராளுமன்றத்தில் சமீபத்தில் உரையாற்றியிருந்தார்.

தனது பாராளுமன்ற உரையின்போது “அரசியல் நிர்வாகிகள் ஜனாதிபதியால் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள். அவர்களுக்குப் பதிலாக, ஊடக முதலாளி டிலித் ஜயவீர உட்பட, ஐந்து பேர் கொண்ட குழுவே இந்த நாட்டை ஆள்கிறது. ஆயுத வியாபாரி நிசாங்க சேனாதிபதியும் இக் குழுவில் ஒருவர். கோதாபய ராஜபக்சவின் ஆதரவுடன் அவர் மீண்டும் தனது ஆயுதக் கடத்தலை ஆரம்பித்துள்ளார். பிரதேச சபை அரசியலில் கூட ஈடுபடாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் இதுதான் நடக்கும்” என அவர் தெரிவித்திருந்தார்.

“உதயங்கா வீரதுங்க, ஊக்கிரெய்னிலிருந்து பாலியல் தொழிலாளிகளை இறக்குமதி செய்கிறார். முதலாவது விமானத்தில் வந்த 18 பேர் இத் தொழிலுக்காகக் கொண்டுவரப்பட்டவர்கள்.

” சேரின் ‘உயிர்த்த ஞாயிறு’ சதி விவகாரம், ஆற்றில் மண்பானைகள் காணப்பட்டமை, கெளனிய கோவிலில் பாம்பு வந்தது போன்ற ‘அற்புதங்கள்’ மூலம் மக்கள் கண்களில் மன் தூவியமை, காடுகள் அழிப்பு, சிறைவாசிகளைக் கொல்வது, மதங்களுக்கிடையே வெறுப்பினை ஊக்குவிப்பது போன்ற செயல்களால் நாடு சபிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இச் சாபத்தை நாங்கள் ‘Sir Curse’ என அழைக்கிறோம்” என ஃபெர்ணாண்டோ மேலும் தெரிவித்தார்.



“அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இவர்கள் மெளனிக்க முயற்ச்க்கிறார்கள் என்பதும் எமக்குத் தெரியும். பயத்தினால் நாம் மெளனமாக இருக்க முடியாது. நான் ஒருநாள் சுடப்படுவேன் என்பதும் எனக்குத் தெரியும். அதுபற்றிப் பிரச்சினையில்லை” என அவர் தனது பாராளுமன்ற உரையின்போது தெரிவித்தார்.

சிங்களத்திலான அவரது உரை இங்கு தரப்படுகிறது.

ஜனாதிபதியின் இப் பேச்சு தனக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவும் தனது உயிருக்கு ஆபத்து விளையலாமெனவும் ஹரின் ஃபெர்ணாண்டோ பொலிஸ் மா அதிபருக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.