India

“பிரபாகரனுக்கு புகழஞ்சலி செலுத்த வேண்டாம்” – கார்த்தி சிதம்பரம்

“பிரபாகரனுக்கு புகழஞ்சலி செலுத்துவது இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களால் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. ரஜீவ் காந்தியையும் கூடவே 17 தமிழர்களையும் கொன்றவர்களைக் கொண்டாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த பிரபாகரன், வீரப்பன், தமிழ்த் தேசியம் எல்லாம் இந்துத்வா தேசியம் போன்ற ஒரு ஓரநிலை விடயங்கள் தாம்” என தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனது பேட்டி குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியின்போது “வரலாற்றிலிருந்து நான் எவரையாவது சந்திக்க முடிந்தால் அது “தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனாகவேயிருக்கும். அதுமட்டுமல்லாது, அவரைச் சந்திக்கும்போது முள்ளிவாய்க்கால் சோகத்திற்காக அவரிடம் நான் மன்னிப்பும் கேட்பேன்” எனக் கூறியிருந்தார்.

2009 இல் நடைபெற்று முடிந்த இறுதிப்போரின்போது பாதுகாப்பு வலயம் என அடையாளமிடப்பட்ட பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் மீது இலங்கைப் படைகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல்களின் போது 40,000 முதல் 70,000 மக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா. கூறியிருந்தது. ‘முள்ளிவாய்க்கால் படுகொலை’ எனப் பரவலாக இச் சம்பவம் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களால் நவம்பர் 27 அன்று நினைவுகூரப்படும் ‘மாவீரர் நாள்’ குறித்து கருத்துத் தெரிவித்த தமிழச்சி தங்கபாண்டியன் மேற்கண்டவாறு கூறியிருந்தார். விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான லெப்டினண்ட் சங்கர் கொல்லப்பட்ட நவம்பர் 27 (1982) தினத்தை ‘மாவீரர் நாள்’ என்னும் பெயரில் போரில் மரணித்த விடுதலைப் புலி வீரர்களைக் நினைவுகூரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. முதலாவது ‘மாவீரர் நாள்’ 1989 இல் அநுட்டிக்கப்பட்டது.

இறுதிப் போர் உக்கிரமாக இருந்தவேளை போர் நிறுத்தமொன்றைக் கோரி அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி உண்ணாவிரதமொன்றை மேற்கொண்டிருந்தார். எனினும் அப்போதைய மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியைய் தொடர்ந்து அன்றைய தினமே கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு விட்டார். ஆனால் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதை மனதில் வைத்தே “நான் மன்னிப்புக் கேட்பேன்” எனத் தமிழச்சி கருத்துத் தெரிவித்திருந்தார்.

தமிழச்சி தங்கபாண்டியனது கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் கொடுத்திருந்த பதிலறிக்கை தி.மு.க. ஆதரவாளர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரபாகரனை சந்தனக் கடத்தல் வீரப்பனுடனோ அல்லது ஓரநிலை ‘இந்துத்வா அமைப்புடனோ’ ஒப்பிட்டுப் பேசியிருப்பது ஆதரவாளர் மத்தியில் கடும் விசனத்தைக் கிளப்பியிருக்கிறது. (Image Credit: TNM)