‘பிரபாகரனிடம் நோக்கமிருந்தது, ஒழுக்கமிருந்தது’ | மஹிந்த ராஜபக்ச

‘பிரபாகரனிடம் நோக்கமிருந்தது, ஒழுக்கமிருந்தது’ | மஹிந்த ராஜபக்ச

Spread the love

எதிர் வரும் பொதுத் தேர்தலில் தானே பிரதமந்திரிக்கான வேட்பாளாராக இருப்பேன் என நேற்று (ஞாயிறு) வீரகேசரி பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றின்போது மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கோதபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் போட்டியிடுவது பற்றி சிறுபான்மையினர் அதிருப்தியடைந்துள்ளனரே என்று பத்திரிகையாளர் கேட்டபோது, “அப்படி நான் நினைக்கவில்லை. உண்மையில் 19வது திருத்தத்தின் பிரகாரம் பிரதமந்திரிக்கே அதிக அதிகாரங்களுண்டு. நானே எதிர் வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்காகப் போட்டியிடப் போகிறவன். எனவே நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்” என மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.சிறீலங்காவின் சிறுபான்மைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்கும் வாய்ப்புகள் பற்றிக் கேட்டபோது, ‘எவற்றைக் கொடுக்கலாம் என்பதில் பல கருத்துக்கள் இருந்தாலும் தற்பொழுது ஜம்மு-காஷ்மீரில் நடைபெறுவது பற்றியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும் என அவர் கூறினார்.

“தற்பொழுது இரண்டு விதமான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் புதிய அரசியலமைப்பு வேண்டுமென்கிறார்கள். சிலர் சமஷ்டி ஒழுங்கு வேண்டுமென்கிறார்கள். சிலர் 13வது திருத்தத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வு போதுமானதென்று கருதுகின்றார்கள். ஆனால் நாடு பிரிவடைவதற்குக் காரணமாக அமையும் எதுவும் தீர்வாக அமைந்துவிட முடியாது. காஷ்மீரில் என்ன நடைபெற்றது என்பதைப் பாருங்கள். இவற்றியெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் அரசியல் தீர்வொன்றை முன்னெடுக்க வேண்டும். ” என அவர் மேலும் கூறினார்.
‘லடாக்’ தான் பெளத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முதல் இந்திய மாநிலமாகும் என ரணில் விக்கிரமசிங்க கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது என சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது. மாஹாநாயக்கர்களும் இவ் விடயத்தில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்ததுடன் லடாக் பிரதேசம் ஜம்மு-காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டவுடன் அதன் சனத் தொகையில் 70% பெளத்தர்கள் ஆகிவிடுவார்கள் எனவும் இனிமேல் சிறீலங்காவிலிருந்து பெளத்தர்கள் அங்குள்ள விஹாரைகளுக்கு யாத்திரை செல்வது இலகுவாக இருக்குமெனவும் அவர்கள் கூறியிருந்தார்கள்.
ஜனாதிபதி தேர்தலின் வேபாளர் தொடர்பில் கருத்துக் கூறிய மஹிந்த ராஜபக்ச, “எங்கள் கட்சியில் 5 வேட்பாளர்கள் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தக்கூடிய ஒருவரை நான் நாளை அறிவிப்பேன்” எனவும் கூறினார்.சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேபாளாராக அறிவிக்கப்பட இருப்பவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவே என்பது பொதுவாகப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டாலும் அவரது அமெரிக்க குடியுரிமை துறப்பு மற்றும் சிறீலங்கா குடியுரிமை பெற்ற விதம் தொடர்பாக இருக்கும் குழப்பநிலைகள் இன்னும் ஒரு உறுதியான முடிவுகளை எட்டமுடியாத நிலைக்குள் வைத்திருக்கின்றன.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்புலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிக் கருத்துக் கூறிய மஹிந்த ராஜபக்ச, “அவருக்கு ஒரு நோக்கம் இருந்தது, பாதை இருந்தது, ஒழுக்கம் இருந்தது. பிரபாகரன் எடுத்த பாதை தவறானது ஆனால் அவரது ஒழுக்கமும் செயற்பாடுகளில் இறுக்கமான கட்டுப்பாடும் இருந்தன. அவர் தேவையானபோது தாக்குதல்களை மேற்கொள்வார், தேவையற்ற போது தவிர்த்துக் கொள்வார். ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் அப்படியானவை அல்ல. அவர்கள் பயங்கரவாதிகள் எப்போதென்றில்லாது தாக்குதல்களை மேற்கொள்வார்கள். அதற்காக அவர்கள் மரணிப்பதையும் விரும்புவார்கள்” என்று கூறினார்.
Print Friendly, PDF & Email