பிரதமர் விக்கிரமசிங்க இன்று பதவி விலகுகிறார்
15 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை ஜனாதிபதி அறிவிப்பார்
நவம்பர் 20, 2019
இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகலாம் எனவும் 15 பேர் கொண்ட புதிய மந்திரிசபையொன்றை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச அறிவிப்பார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று பிரதமர் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் அதைத் தொடர்ந்து இன்று பி.ப. 4:00 மணிக்கு நடைபெறவிருக்கும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைக் கலைப்பு, பிரதமர் பதவி விலகல் போன்றவை பற்றிப் பொது அறிவித்தல் விடுக்கப்படுமெனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, அடுத்த வருடம் மார்ச் 1ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை நாட்டை நிர்வகிப்பதற்கு சிறிய அளவிலான அமைச்சரவை ஒன்றை ஜானாதிபதி அறிவிப்பார் எனவும் அறியப்படுகிறது.
புதிய 15 பேரைக் கொண்ட அமைச்சரவையில், ஜனாதிபதிக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமெனவும் தெரிய வருகிறது.