பிந்திய செய்தி | ஜூலியன் அசாஞ் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது!
‘விக்கிலீக்ஸ்’ ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிற்கு நாடுகடத்த முடியாது என மாவட்ட நீதிபதி வனெஸ்ஸா பரெயிட்செர் தீர்ப்பளித்துள்ளார்.
மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அசாஞ் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சாத்தியமுண்டு என்ற காரணத்தால் அவரது நாடுகடத்தலைத் தடுத்து நிறுத்துவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
49 வயதுடைய ஜூலியன் அசாஞ், 2010-11 காலப்பகுதியில் அமெரிக்க இராணுவ இரகசியங்களைத் தனது விக்கிலீஸ் இணையத்தளத்தின் மூலம் பகிரங்கப்படுத்தியிருந்தார். இதன் மூலம் அவர் அமெரிக்கச் சட்டங்களை மீறினார் எனவும், பல அமெரிக்க உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறார் எனவும் குற்றஞ்சாட்டை அமெரிக்கா அவரை நாடுகடத்தும்படி கோரி வழக்குத் தொடுத்திருந்தது.
அமெரிக்கா விரும்பினால் 14 நாட்களுக்குள் இன்றய தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்ய முடியும்.
லண்டனிலுள்ள பெல்மார்ஷ் உயர்பாதுகப்புச் சிறையில் தற்போது சிறைவைக்கப்பட்டிருக்கும் ஜூலியன் அசாஞ்சைப் பிணையில் விடுவிப்பதற்கான விண்ணப்பம் புதனன்று சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலியன் அசாஞ்சின் தோழியும், அவரது இரண்டு பிள்ளைகளின் தாயருமாகிய ஸ்ரெல்லா மொறிஸ் மற்றும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் கிறிஸ்டின் றஃப்ன்ஸன் ஆகியோர் நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்தனர்.
பிரித்தானிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்படப் பல அரசியல்வாதிகளும், மனித உரிமை அமைப்புகளும் இத் தீர்ப்பை வரவேற்றுக் கருத்துத் தெரிவித்துள்ளன. தமிழ்ப் பாடகி மாதங்கி அருட்பிரகாசம் அசாஞ்சின் விடுதலைக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வந்தவர். அதேபோல், பிரபல ஊடகவியலாளரும், விவரணப்படத் தயாரிப்பாளருமான ஜோன் பில்ஜெர் இத் தீப்பை வரவேற்றதுடன் “அமெரிக்காவிற்காக இவ்வழக்கைத் தொடுத்தமைக்காக பிரித்தானியாவைக் கண்டித்ததுடன் இத் தீர்ப்பின் மூலம் அது தனது இழுக்கைக் கழுவிக்கொண்டது” என விமர்சித்துள்ளார்.