பித்தப்பையில் புற்றுநோய் -

பித்தப்பையில் புற்றுநோய்

டாக்டர். எஸ்.ரகுராஜ் M.D.
Dr.S.Raguraj MD

எல்லா நோய்களுக்கும் சிகிச்சைகள் பலனளிப்பதில்லை. எல்லா நோய்களையும் மருத்துவர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்கவும் முடியாது. அனேகமான நோய்கள் தமது ஆரம்பத்தையும், இருப்பையும் ஏதோ ஒரு வகையில் தான் பீடித்திருக்கும் நோயாளிக்கு அறிவிக்கிறது. இதையே பல மருத்துவர்களும் ‘listen to your body’ என்று கூறுவார்கள். இருப்பினும் எல்லோராலும் எல்லா அறிகுறிகளையும் உய்த்துணர்ந்துகொள்ள முடியுமென்பதையும் நான் கூற வரவில்லை. ஆனால் பலவிதமான நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் முறையான சிகிச்சைகளை அளித்து ஆயுளை நீடிக்க முடியும்.

50 வயதைத் தாண்டியவுடன் ஒவ்வொருவரும் தமது உடலில் கவனம் செலுத்தவாரம்பிக்க வேண்டும். வருடா வருடம் செய்யவேண்டிய சில பரிசோதனைகளை உங்கள் மருத்துவர் உங்களுக்குக் கட்டாயம் நினைவுபடுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. குறிப்பாக உங்கள் குடும்பத்தில் எவருக்காவது சில வியாதிகள் வந்திருந்து சிகிச்சை பெற்றிருந்தால் அவ்வியாதிகள் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளைக் காலம் தவறாது செய்துகொள்வது நல்லது. குறிப்பாகச் சிலவகைப் புற்றுநோய்கள், இருதயவியாதி, பாரிசவாதம் போன்றவற்றுக்காக உங்கள் குடும்பத்தில் யாராவது சிகிச்சை பெற்றிருந்தால் உங்கள் மருத்துவருக்கு அதைத் தெரியப்படுத்துவது அவசியம். அவர் அதற்கான பரிசோதனைகளை முன்னேற்பாடாகச் செய்துகொள்ள வசதிகளை ஏற்படுத்துவார்.

நோய்களைத் தீர்ப்பதில் பெரும்பங்கு நோயாளி – மருத்துவர் உரையாடலில் தங்கியிருக்கிறது. நோயாளி தன்னுடம்பில் அவதானிக்கும் மாற்றங்களை உதாசீனம் செய்யாது உடனடியாக மருத்துவருக்குத் தெரிவிப்பது எப்போதும் நல்லது. பெரும்பாலான நோய்கள் உடலில் அறிகுறிகளைக் காட்டுகின்றன. அவற்றைத் தெரிந்துவைத்திருப்பதன் மூலம் ஒருவர் மருத்துவரோடு உரையாடும்போது அறிகுறிகளைத் தெளிவாகத் தெரிவிக்கலாம்.

இக் கட்டுரையில் பித்தப்பைப் புற்றுநோய் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம். இப் புற்றுநோயினால் எங்கள் சமூகத்தில் பலர் மரணித்திருக்கிறார்கள். இந்நோய் 50 வயதைத் தாண்டியவர்களைப், பெரும்பாலும் ஆண்களைப் பீடிப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இருப்பினும் சகலரும் இந் நோய் பற்றிய அறிகுறிகளை அறிந்துவைத்திருத்தல் நல்லது.

பித்தப்பைப் புற்றுநோய் (Cholangio Carcinoma) எனப்படும் இந்நோய் பித்தக் கால்வாய்களில் உருவாகிறது. உணவு சமிபாடடைவதற்குத் தேவையான பித்தம் பித்தப்பையிலியிருந்து கால்வாய்கள் மூலம் ஈரலுக்கும், சிறுகுடலுக்கும் செல்கிறது. இப் பாதையில் ஏற்படும் புற்றுநோய் பித்தம் மற்ற உறுப்புகளுக்குக் போவதைத் தடுப்பது மட்டுமல்லாது ஏனைய உடலுறுப்புக்களுக்கும் பரவிவிடுகிறது.

அறிகுறிகள்

பித்தப்பைப் புற்றுநோயின் அறிகுறிகள் சில:

 • சருமமும் கண்களின் வெண்விழியும் மஞ்சள் நிறமாகுதல் (காமாளை)
 • சருமத்தில் இடைவிடாத எரிச்சல் (தொடர்ந்து சொறிய வேண்டி ஏற்படுதல்)
 • மலம் வெளிறிய நிறத்தில் போதல்
 • களைப்பு
 • வயிற்று வலி
 • எதிர்பாராது எடை குறைதல்
நோயைக் கண்டுபிடித்தல்

1-ஈரல் தொழிற்பாட்டைப் பரிசோதித்தல். இரத்தப் பரிசோதனையின் மூலம் உங்கள் மருத்துவர் இரத்தத்திலுள்ள சில பதார்த்தங்களின் அளவுகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் நோயறிகுறிகளின் காரணங்களை அறிய முற்படுவார்.

2-சிறிய கமரா ஒன்றை உள்ளே அனுப்பி உங்கள் பித்தப்பையைப் பரிசோதிப்பார். ERCP எனப்படும் ‘endoscopic retrograde cholangiopancreatography’ என்ற இப் பரிசோதனையின்போது நுண்ணிய கமரா பொருத்தப்பட்ட ஒரு மெல்லிய குழாய் உங்கள் தொண்டையினூடு செலுத்தப்பட்டு சிறுகுடலுக்குள் செலுத்தி பித்தப்பை சிறுகுடலோடு இணையும் இடத்திற்கு அண்மையிலுள்ள இழையங்களைப் (tissues) பரிசோதிப்பர். சில வேளைகளில் இப் பரிசோதனையின்போது பித்தக் கால்வாயினுள் ஒருவகைச் சாயத்தைச் செலுத்தி அதன் பிம்பங்களைக் (images) கணனியில் அவதானிக்கவும் செய்யலாம்.

Related:  பக்க வாதம் (stroke) - பாகம்2

3-பிம்பங்களை அவதானித்தல். எக்ஸ் றே (சீ.ரீ. ஸ்கான்) அல்லது எம்.ஆர்.ஐ. போன்ற உறுப்புக்களைப் பரிசோதனை செய்யும் முறைகளினால் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சிகளை முப்பரிமாண (3D) பிம்பங்களைக் கொண்டு மருத்துவர்கள் அவதானித்து நோய்களின் நிலைகளை அறிந்துகொள்கிறார்கள்.

4-சில வேளைகளில் இழையத்தின் ஒரு நுண்ணிய பகுதியை வெட்டி எடுத்து (biopsy) பரிசோதனை கூடத்தில் பரிசோதிப்பார்கள்.

காரணிகள்

பித்தக் கால்வாயிலுள்ள கலங்களின் மரபணுக்கள் எதிர்பாராதவிதமாக மாற்றங்களை (விகாரங்கள் (mutations)) அடைவதனால் பித்தப்பைப் புற்றுநோய் ஏற்படுகிறது எனத் தெரியப்படுகிறது. கலங்களிலுள்ள மரபணுக்கள் ஏன் மாற்றங்களுக்குள்ளாகின்றன என்பது பற்றிய காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை.

ஆபத்துக் காரணிகள் (Risk Factors)

பித்தப்பைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கும் காரணிகள்:

 • பித்தக் கால்வாய்கள் காயப்படுதலும், தடிப்படைதலும்
 • நாள்பட்ட ஈரல் வியாதியால் காயமடைந்த ஈரல்.
 • பிறப்பிலே தொடங்கும் பித்தக் கால்வாய்ப் பிரச்சினைகள் (நீர்க்கட்டிகள், சீரற்ற அல்லது விரிவடைந்த கால்வாய்கள்)
 • தொற்று நோய்கள் (முறையாகச் சமைக்கப்படாத மீன்களை உண்ணும் தென்னாசியர்களில் இது காணப்படுகிறது)
 • முதிர் வயது (அனேகமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களை இன் நோய் பீடிக்கிறது)
 • புகை பிடித்தல்
பித்தப்பைப் புற்றுநோயை முற்றாகக் குணப்படுத்த முடியுமா?

ஆரம்ப நிலைகளில், பித்தக் குழாயின் ஒரு பகுதியையும் பித்தப்பையையும் அல்லது ஈரலின் மற்றும் சதயத்தின் பகுதிகளையும் வெட்டி அகற்றிவிடுவதன் மூலம் சில நோயாளிகள் குணமடைந்திருக்கிறார்கள். முற்றிய நிலைகளில் நோயிலிருந்து முற்றிலும் குணமடைவது சாத்தியமில்லை. கீமோதெராப்பி, றேடியொதெராப்பி, அறுவைச் சிகிச்சை, பித்தக் குழாய்களைச் செயற்கையாக விரிவடையச் செய்தல் (stenting) போன்ற சிகிச்சைகளினால் நோயின் உபாதையிலிருந்து சில காலம் நிவாரணத்தைப் பெறலாம்.

பித்தப்பைப் புற்றுநோயாளிகள் எவ்வளவுநாட்கள் உயிர்வாழலாம்?

புற்றுநோய்க்கட்டி (tumor) அயலிலுள்ள இழையங்களையோ அல்லது நிணநீர்க் கழலைகளையோ (lymph nodes) அல்லது உடலின் இதர உறுப்புகளையோ அண்டிப் பரவியிருக்கும் சந்தர்ப்பத்தில், 50 % நோயாளிகள் ஒரு வருடமும், 20% நோயாளிகள் 2 வருடங்களும் 10 % நோயாளிகள் 3 வருடங்களும் வாழ்கிறார்கள். எவரும் 5 வருடங்கள் வாழ்ந்திருக்கவில்லை.

எங்கள் சமூகத்தில் பிரபலமான விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் பித்தப்பைப் புற்றுநோய் காரணமாகவே மரணமானார்.

எங்கள் சமூகத்தில் உள்ள பாரிய பிரச்சினை உரிய காலத்தில் கிடைக்கும் நோய்த்தடுப்பு நடைமுறைகளைக் கையாளப் பழகுவதில்லை. உங்கள் குடும்ப வைத்தியரிடம் மனம் திறந்த உரையாடலை மேற்கொள்ளும்போதுதான் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

மனதில் வைத்திருக்கவேண்டியது:

 • நோயினால் பாதிக்கப்படுவது நீங்கள் மட்டுமல்ல உங்களை மனமார நேசிக்கும் உங்கள் குடும்பத்தினரும்தான்.
 • வாழ்வில் எல்லோருக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பாவிப்பது உங்களைப் பொறுத்தது.
 • தடுப்பு சிகிச்சையைவிட வலி குறைந்தது.
Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
error

Enjoy this blog? Please spread the word :)