பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஷானி அபயசேகரா மீண்டும் தடுப்புக் காவலில்!

பிணை நிபந்தனைகள் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்ல என்பதற்காக கம்பஹா மாஜிஸ்திரேட் கட்டளை

நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரி ஷானி அபயசேகர மற்றும் உதவி பொலிஸ் அதிகாரி சுகத் மெண்டிஸ் ஆகியோரை இம் மாதம் 30ம் திகதிவரை, தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்குமாறு கம்பஹா முதன்மை மாஜிஸ்திரேட் மஞ்சுளா கருணாரத்தின கட்டளையிட்டுள்ளார்.

முன்நாள் பொலிஸ் பணிப்பாளர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட சிலர் மீது பொய் வழக்குகளைச் சோடித்திருந்தனர் எனக் குற்றஞ்சாட்டி ஷானி அபயசேகரா, சுகத் மெண்டிஸ் ஆகியோரைத் தடுப்புக் காவலில் வைக்கும்படி கம்பஹா மாஜிஸ்திரேட் முன்னர் தீர்ப்பளித்திருந்தார். இதற்கு எதிராக ஷானி அபயசேகரா ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரிக்காமல் கம்பஹா நீதிமன்றம் இழுத்தடித்து வந்தது. ஷானி அபயசேகராவுக்கு இருதயவியாதி வந்தபோதும், தடுப்பு முகாமில் கோவிட் பெருந்தொற்று அபாயம் இருந்த போதும் அவரது வழக்கை விசாரிக்க மறுத்து சில நீதிபதிகள் வழக்கைப் பின்போடச் செய்து வந்தனர். இறுதியாக, அபயசேகரவின் சட்டத்தரணிகள் செய்த மேன் முறையீட்டைத் தொடர்ந்து இருவரையும் விடுதலை செய்யும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுக் காலை கம்பஹா உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் பிணை நிபந்தனைகள் எழுத்து மூலம் பரிமாறப்படவில்லை எனக் காரணம் காட்டி கம்பஹா மஜிஸ்திரேட் இருவரையும் ஜூன் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.