Sri Lanka

பிசுபிசுத்துப்போன அரகாலயா 2.0 – பிரேமதாச & Co. தப்பியோட்டம்; ஹிருணிகா வீர சாதனை!

பெரும் எதிர்பபார்ப்புகளுடனும் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டணியினால் நேற்று கொழும்பில் ஒழுங்குசெய்யப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பிசுபிசுத்துப் போய்விட்டதாக அறியப்படுகிறது. குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளைக் கண்டதும் முன்னணியில் சென்றுகொண்டிருந்த பிரேமதாச தலைமையிலான பல்கட்சிக் கூட்டணியினர் திடீரென மாயமாக மறைந்துவிட்டனர் எனவும் இதனால் ஏற்பட்ட ரகளையில் அரகாலய செயற்பாட்டாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமிடையில் முறுகல்கள் ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டம் பிறிதொரு நாளுக்கு ஒத்திப்போடப்பட்டதென அறிவிக்கப்பட்டது எனவும் தெரியவருகிறது.

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்க் கைதுசெய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் மாணவ தலைவர்களை விடுதலை செய்வதற்காகவும் ஒழுங்குசெய்யப்பட்ட இப்பேரணியில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் தவிர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள், முன்னணி சோசலிஸ்ட் கட்சி, இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பல சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர். பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகய சார்பில் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மட்டும பண்டார, சரத் பொன்சேகா, ஹர்ஷா டி சில்வா, முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திரா ஆகியோரும், சுதந்திரக்கட்சி சார்பில் தயாசிறி ஜயசேகரா, சுதந்திரமான பா.உ.க்களான சம்பிக்க ரணவக்க, சண்டிமா வீரக்கொடி, முன்னணி சோசலிஸ்ட் கட்சி சார்பில் புபுது ஜயகொட மற்றும் துமிந்த நாகமுவ ஆகியோரும் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஜோசெஃப் ஸ்டாலினும் முன்னணியில் சென்றுகொண்டிருந்தார்கள் எனக் கூறப்படுகிறது.

எல்ஃபின்ஸ்டன் தியேட்டரருகில் ஆரம்பித்த ஊர்வலம் கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தை அடைவதற்கு முன்னர் அங்கு குவிக்கப்பட்டிருந்த சுமார் 500 அரச படைகளினால் வழிமறிக்கப்பட்டனர். ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரும், குண்டாந்தடிகளுடன் பொலிஸ் படையினரும், நீர்பாய்ச்சிகளும் எதிர்கொண்ட நிலையில் ஊர்வலம் தொடர்ந்து முன்னேற முடியாது எனக்கூறி பிரேமதாச பின்னரங்கிற்குத் தப்பிச்சென்றுவிட்டதாகவும் அவரைத் தொடர்ந்து அனைத்து அரசியல்வாதிகளும் பின்வாங்கியதுடன் மாயமாக மறைந்துவிட்டார்கள் எனவும் அரகாலய செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து முன்னேற முயற்சிக்கையில் ஒழுங்கமைப்பாளர்களுக்கிடையில் ஏற்பட்ட குரண்பாடுகள் காரணமாக பேரணி கலைந்துபோய் விட்டதாகவும் தெரிய வருகிறது.

இதற்கிடையில் சமாகி ஜன பலவேகய கட்சியின் பெண்கள் அணித் தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திரா பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் தனது ஆதரவாளர்களுடன் வேறு பாதையொன்றின் மூலம் கோட்டை ரயில்வே நிலையத்தை அடைந்து அங்கு தனது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாகவும் அறியப்படுகிறது. ஏனைய பங்காளிகளைப்போலவே அவரும் சஜித் பிரேமதாச மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளாரெனவும் கூறப்படுகிறது.

இறுதியில் அரகாலய செயற்பாட்டாளர்கள் தாம் மீண்டும் இன்னுமொரு நாளில் கூடிய பலத்துடன் திரும்பி வருவதாகக்கூறிக் கலைந்து சென்றுவிட்டனர் எனத் தெரிகிறது. இப்பேரணியின் தோல்விக்கு சஜித் போன்ற முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளே காரணம் என செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

20 அரசியல் கட்சிகள், 100 தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் ஆகியன ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றைக் கொழும்பில் நடத்தவிருப்பதாக அக்டோபர் 25 அன்று அறிவித்திருந்தார்கள் எனினும் காலிமுகத் திடலில் மேற்கொள்ளப்பட்ட அரகாலய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களையும்விட மிகக்குறைவான எண்ணிக்கையினரே இதில் கலந்துகொண்டிருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது. (தி மோர்ணிங்)