பா.உ.வியாழேந்திரன் மீது சட்ட நடவடிக்கை | மட்டக்களப்பு நீதிமன்றம் அறிக்கை -

பா.உ.வியாழேந்திரன் மீது சட்ட நடவடிக்கை | மட்டக்களப்பு நீதிமன்றம் அறிக்கை

Spread the love

29 August 2019

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட குண்டு தாரியான மொகாமெட் நசார் மொகாமெட் அசாரரின் உடற்பாகங்களைக் கல்லியங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்வதை எதிர்த்து மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஆர்ப்பட்டம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் ஐந்து பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அறிக்கைகளை அனுப்பியுள்ளது.

வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 30 அன்று அனைவரையும் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு அவ்வறிக்கைகள் கோருகின்றன என காவற்துறைப் பேச்சாளர் றுவான் குணசேகரா தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது காவற்துறை கூட்டத்தைக் கலைக்க முற்பட்டபோது நான்கு பேர் காயப்பட்டிருந்தார்கள். எவரும் கைதுசெய்யப்படவில்லை.

27 வயதுடைய மொகாமெட் நசார் மொகாமெட் அசார், மட்டக்களப்பு சயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறன்று தந்னைத் தானே வெடித்துக் கொண்டார். மட்டக்களப்பு நீதிபதியின் ஆணையின் பேரில் அவரது உடற்பாகங்கள் கல்லியங்காடு இடுகாட்டில் புதைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் இதற்கான அனுமதியை ஆகஸ்ட் 26 வழங்கியிருந்தார்.

தற்கொலைதாரியின் உடற்பாகங்களைப் புதைபதற்கெதிராக இடுகாட்டுக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் ஆகஸ்ட் 27 இரவு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்குசெய்திருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான பாதையில் றோசாரியோ சந்தியையும் கல்லடி பாலத்தையும் அவர்கள் முடக்கியிருந்தார்கள். காவற்துறை கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்யவேண்டியிருந்தது என பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் கூடுதலான பாதுகாப்புப் பணியாளர்களைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி காவற்துறை, நிலைமையக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  இலங்கை | சூடுபிடிக்கும் 'ரஞ்சன்கேட்'