பா.உ. செல்வராஜா கஜேந்திரன் மீது சிங்களவர் தாக்குதல்
திலீபன் ஞாபகார்த்த ஊர்வலத்தின்போது சம்பவம்
திருகோணமலை சாரதாபுரத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது பொலிசார் முன்னிலையில் சிங்களவர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறியப்படுகிறது. பொத்துவிலிலிருந்து நல்லூரை நோக்கி சென்றுகொண்டிருந்த கேணல் திலீபனின் ஞாபகார்த்த ஊர்வலத்தை இடைமறித்து சிங்களவர் இத் தாக்குதல்களைச் செய்துள்ளனர்.
இத் தாக்குதல்களின்போது கேணல் திலீபனின் உருவச்சிலையும் அதைக் காவிக்கொண்டு சென்ற வாகனமும் அடித்து நொருக்கப்பட்டன எனவும் அப்போது கடமையிலிருந்த மூன்று போக்குவரத்து பொலிசாரினால் தாக்குதல்களை நிறுத்தமுடியவில்லை எனவும் அறியப்படுகிறது. ஊர்வலத்தின் முன்னணியில் இதர பிரமுகர்களுடன் சென்றுகொண்டிருந்த பா.உ. கஜேந்திரனும் தாக்கப்பட்டதாகவும் அங்கு சமூகமளித்திருந்த ஊடகவியலாளர்கள் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வேறிடத்துக்குக் கொண்டுசென்றுவிட்டனரெனவும் அறியப்படுகிறது.
இந்திய அரசுக்கு முன்வைத்த 5 நிபந்தனைகளும் நிறைவேற்றப்படாமைக்காக உண்ணாவிரதமிருந்த கேணல் திலீபன் 27 செப். 1987 அன்று உயிர்நீர்த்தார். அவரது ஞாபகார்த்தமாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நினைவு விழாக்களைக் கொண்டாடுவது தமிழர்களின் மரபாக இருந்துவருகிறது.