Sri Lanka

பா.உ. செல்வராஜா கஜேந்திரனை வெளியேற்ற பிவித்துரு ஹெல உறுமய முயற்சி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரனைப் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு பிவித்துரு ஹெல உறுமய கட்சி தயாராகி வருவதாக அதன் உறுப்பினர் அஞ்சனா சந்திரசிறி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 26, 1987 அன்று நல்லூரில் உண்ணாவிரதமிருந்து இறந்துபோன விடுதலைப்புலிகள் உறுப்பினர் லெப்டினண்ட் கேணல் திலீபன் ஞாபகார்த்த நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதைக் காரணமாகக் காட்டி இவ்வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

முறையீடு ஒன்றின் பேரில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசேட பொலிஸ் அலகினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கலந்துகொண்டபின் நேற்று (21), சந்திரசிறி இவ்விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஜூலை 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை வந்த இந்திய அமைதிப்படையை வெளியேறுமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதமிருந்து இறந்தவர் திலீபன். அவரது மரணத்திற்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அவருக்கு லெப்டினண்ட் கேணல் பதவி வழங்கப்பட்டிருந்தது.

திலீபன் ஞாபகார்த்த நிகழ்வுகளை ஒழுங்குசெய்தமை அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டு பிரிவுகளை மீறுவதாகக் குற்றஞ்சாட்டி பா.உ. கஜேந்திரன் மீது செப்டம்பர் 19.2023 அன்று சந்திரசிறி பொலிசில் முறைப்பட்டு ஒன்றைச் செய்திருந்தார்.