பா.உ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!
பொலிசாரின் கடமைகளைத் தடுத்தார் எனக் குற்றச்சாட்டு
பொலிசார் தமது கடமைகளைச் செய்வதற்குத் தடையாகவிருந்தார் எனக் குற்றஞ்சாட்டி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (ஜூன் 07) கொள்ளுப்பிட்டி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மருதங்கேணி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் குழு கொழும்பிலுள்ள திரு பொன்னம்பலத்தின் வீட்டில் வைத்து அவரைக் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளரென அறியப்படுகிறது.
சமீபத்தில் வடமராட்சியில் நடைபெற்ற பொதுமக்கள் கலந்துரையாடல் சம்பவமொன்றின்போது பொலிசார் ஒருவர் தனது கைத்துப்பாக்கியைத் திரு பொன்னம்பலத்தின்மீது குறிவைத்தமைய்ம் அதைத் தொடர்ந்து பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே நடைபெற்ற வாக்குவாதத்தைத் தொடர்ந்து இக் கைது இடம்பெற்றிருக்கிறது. அருகேயுள்ள தாளையடி ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் க.பொ.த. சாதர்ரண பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் காரணம் காட்டி அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் திரு பொன்னம்பலம் பொதுமக்களுடன் மேற்கொண்ட சந்திப்பை நிறுத்துமாறு பொலிசார் இட்ட கட்டளையை திரு பொன்னம்பலம் மறுத்திருந்தார். இச்சம்பவத்தின்போது பொலிசார் மீது வசைமொழியைப் பாவித்ததாகவும் அவர்களது கடமையைச் செய்ய திரு பொன்னம்பலம் இடையூறாக இருந்தார் எனவும் பொலிசார் குற்றப்பதிவுகளைச் செய்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜூன் 05 அன்று திரு பொன்னம்பலம் வாக்குமூலமொன்றைத் தரவேண்டுமென்று மருதங்கேணி பொலிசார் விடுத்திருந்த கட்டளையை திரு பொன்னம்பலம் மீறியிருந்தார் எனவும் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதானால் தான் அக்குறிப்பிட்ட திகதியில் வாக்குமூலத்தைத் தரமுடியாது என அவர் அறிவித்திருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து ஜூன் 08 அன்று காலை 10:00 மணிக்கு திரு பொன்னம்பலம் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் சமூகம் தரவேண்டுமென்று கொள்ளுப்பிட்டி பொலிஸ் மூலம் அவருக்கு கட்டளை வழங்கப்பட்டிருந்தது. இக் கட்டளை சிங்கள மொழியில் இருந்ததால் அதைத் தனால் புரிந்துகொள்ள முடியாது எனக்கூறி அக்கட்டளையைப் பெற திரு பொன்னம்பலம் மறுத்திருந்தார். இதைத் தொடர்ந்து இக்கட்டளையின் ஆங்கில மொழிபெயர்ப்பை கடந்த இரவு பொலிசார் வழங்கியிருந்தனர்.
இச்சம்பவங்கள் குறித்து திரு பொன்னம்பலம் சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் தனது பாராளுமன்ற சலுகைகள் மீறப்பட்டமை குறித்தும் ஜூன் 12 அன்று பாராளுமன்றம் கூடுகையில் இதுகுறித்து சபையில் பேசவுள்ளதாகவும் அதற்குப் பின்னரே தான் பொலிசாருக்கு வாகுகுமூலமளிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இதே வேளை பொலிசார் மேற்கொண்ட விண்ணப்பத்தை அடுத்து கிளிநொச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் திரு பொன்னம்பலத்தின் மீது வெளிநாட்டுப் பயணத்தடையையும் விதித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக விபரமான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரைறான் அல்லிஸ் யாழ். உதவி பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிட்டுள்ளார்.
இதே வேளை வடமராட்சி சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் இன்று (ஜூன் 07) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரும் இன்னொருவரும் பொலிசாரின் கடமைகளைத் தடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.