பாலேந்திரா ஆனந்தராணி தம்பதியின் கலைப்பயணம்
மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம்
பாலேந்திரா

பாலேந்திரா, யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாக கொண்டவர். அங்கு வருடா வருடம் நிகழ்ந்து வரும் சுதேசிய விழா நாடகங்கள் இவரின் ஆரம்ப அனுபவங்கள் ஆக அமைந்தன 1972 இல் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான நுட்பம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சங்கத்தலைவராகவும் இருந்தபோது கலைஞர்கள், அறிஞர்களுடன் ஏற்பட்ட தொடர்புகள் அவரது சீரிய நாடக பயணத்திற்கு அடிகோலின. கல்வி சார்ந்து பொறியியல் துறையில் முழுநேரத் தொழில் செய்து கொண்டு நாடகமே முழுமூச்சாக இயங்கிய அவர் நாடகத்துறை சார்ந்த ஆனந்தராணி இராஜரட்ணம் அவர்களை மணம் புரிந்து நாடகப் பயணத்தைத் தொடர்ந்தார்.
சுகைர் ஹமீட் அவர்களின் ஏணிப்படிகள் என்ற குறியீட்டு நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்ததன் மூலம் இலங்கை நாடக ஆர்வலருக்குத் தெரியவந்த அவர் தாசீசியஸ் அவர்களின் நெறியாள்கையில் பிச்சை வேண்டாம், கந்தன் கருணை போன்ற நாடகங்களில் பங்குகொண்டார். இவர்களுக்கு வேடிக்கை, கிரகங்கள் மாறுகின்றன, தூரத்து இடிமுழக்கம் ஆகிய நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தார். 1976 இல் கொழும்பு லயன்வென்ற் அரங்கில் மேடையேறிய இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’ நாடகமே இவர் முதன்முதல் தயாரித்து நெறியாள்கை செய்த நாடகம். இதில் இவரும் ஆனந்தராணியும் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இலங்கையின் எல்லாபகுதிகளிலும் ஈழத்தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் மேடையேறியதோடு சென்னையிலும் 2010இல் மேடையேறியது குறிப்பிடத்தக்கது. மழை, அரையும் குறையும், கண்ணாடி வார்ப்புகள் ஆகிய நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியதுடன், 1982 இல் கண்ணாடி வார்ப்புகள் ரூபவாகினியிலும் ஒளிபரப்பாகியது.
தமிழ் அவைக்காற்றுக் கலை கழகத்தை உருவாக்கி இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் 70 க்கு மேற்பட்ட நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றிய இவர் எந்த கொள்கை கோட்பாடுகளுக்கும் ஆட்பட்டுவிடாமல் நாடகமே மூச்சாக கொண்டு நாடகத்தின் வளர்ச்சியில் தனது காத்திரமான விசாலமான பங்களிப்பை செலுத்தியிருக்கின்றார். இன்றும் தொடர்கிறார். இவர்களுக்கு வேடிக்கை (1974), கிரகங்கள் மாறுகின்றன (1974), தூரத்து இடி முழக்கம் (1976), மழை (1976), பலி (1978), நட்சத்திரவாசி (1978), ஒரு யுகத்தின் விம்மல் (1978), கண்ணாடி வார்ப்புகள் (1978), பசி (1978), புதிய உலகம் பழைய இருவர் (1978), ஒரு பாலை வீடு (1979), இடைவெளி (1979), யுகதர்மம் (1979), நாற்காலிக்காரர் (1979), முகமில்லாத மனிதர்கள் (1980), திக்கு தெரியாத காட்டில் (1980), இயக்க விதி -3 (1980), சுவரொட்டிகள் (1980), சம்பந்தம் (1980), அரையும் குறையும் (1981), மூன்று பண்டிதர்களும் காலம் சென்ற ஒரு சிங்கமும் (1981), துக்ளக் (1982), மரபு (1982), வார்த்தையில்லா நாடகம் (1983), பார்வையாளர்கள் (1985), எரிகின்ற எங்கள் தேசம் (1985), வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள் (1991), பாரத தர்மம் (1991), பிரத்தியேகக்காட்சி (1991), தரிசனம் (1991), தப்பி வந்த தாடி ஆடு (1992), துன்பக் கேணியிலே (1992), நம்மைப் பிடித்த பிசாசுகள் (1993), இரு துயரங்கள் (1993), ஐயா இலெக்சன் கேட்கிறார் (199), போகிற வழிக்கு ஒன்று (1994), மலைகளை அகற்றிய மூடக்கிழவன் (1996), ஆற்றைக் கடத்தல் (1996), எப்போ வருவாரோ (1997), அயலார் தீர்ப்பு (1997), அவசரக்காரர்கள் (1997), மெய்ச்சுடரே (1997), பெயர்வு (1998), ஒரு பயணத்தின் கதை (1998), பரமார்த்த குருவும் சீடர்களும் (1999), பார்வைக் கோளாறு (2000), காத்திருப்பு (2001), வேருக்குள் பெய்யும் மழை (2002), ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (2003), அவன் அவள் (2003), திக்கற்ற ஓலம் (2003), பெருங்கதையாடல் (2004), அரசனின் புத்தாடை (2004), சர்ச்சை (2006), மலைகள் வழிமறித்தால் (2006) பாவி (2007), எல்லாம் தெரிந்தவர்கள் (2008), மரணத்துள் வாழ்வு (2009), படிக்க ஒரு பாடம் (2009), ஒற்றுமை (2010), இது ஒரு நாடகம் (2010), தர்மம் (2010) என்பன பாலேந்திராவினால் நெறிப்படுத்தப்பட்ட நாடகங்கள்.
நாடகமே மூச்சாக இயங்கி, இத்தனை வருட காலம் இடைவிடாது நாடகங்களை நிகழ்த்துவது என்பது ஒரு சாதனை தானே?. 27.10.1976 ல் கொழும்பு லயனல்வென்ற் அரங்கில் மேடையேறிய இந்திரா பார்த்தசாரதியின் மழை நாடகமே இவர் முதன்முதல் தயாரித்து நெறியாள்கை செய்த நாடகமாகும். உலகில் ஈழத்தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் மேடையேறிய இந் நாடகம் 22.07.2010 அன்று கூத்துப்பட்டறை, மூன்றாம் அரங்கு ஆதரவில் சென்னையில் மேடை- யேறியது நினைவு கொள்ளத்தக்கது.
இவர் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தை 1978 இல் ஆரம்பித்தார். இதன் மூலமாக ஈழத்து, தமிழகத்து, மற்றும் இந்தியப் பிறமொழி நாடகாசிரியர்கள், மேலும் பல நல்ல மேற்குலக நாடகாசிரியர்களின் நாடகங்களையும் நேர்த்தியாக மேடையேற்றி வருகிறார். ஈழத்து நாடகாசிரியர்கள் குழந்தை ம.சண்முகலிங்கம், மாவை நித்தியானந்தன், சி.சிவசேகரம், சி.மௌனகுரு, தர்மு சிவராம், சேரன், செழியன், ச.வாசுதேவன் ஆகியோரின் நாடகங்களையும், தமிழக நாடகாசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதியின் மழை, பசி, ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், ஞான ராஜசேகரனின் மரபு அம்பையின் ஆற்றைக்கடத்தல், மற்றும் பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித், மோகன் ராகேஷின் அரையும் குறையும், கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், ரஞ்சித்ராய் சௌத்திரியின் பாரத தர்மம் போன்ற நாடகங்களை தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் மூலமாகத் தயாரித்து நெறிப்படுத்தியுள்ளர்.
இது தவிர, மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் நாடகங்களாக டென்னசி வில்லியம்சின் கண்ணாடி வார்ப்புகள், ரெக்டின் யுகதர்மம், கார்சியா லோர்காவின் ஒரு பாலை வீடு, செக்கோவின் சம்பந்தம், வஸ்லோ காவலின் பிரத்தியேகக் காட்சி தரிசனம், பெக்கற்றின் எப்போ வருவாரோ ஏரியல் டோப்மனின் மரணத்துள் வாழ்வு, இயூன் ஐயனஸ்கோவின் இடைவெளி, ஹரோல் பின்டரின் போகிறவழிக்கு ஒன்று என்பவற்றை பாலேந்திரா தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார்.
பாலேந்திராவின் நாடகங்களில், மனித குலத்தின் பொது அவலங்களைச் சொல்லும் பிரெக்டின் யுகதர்மம் என்ற நாடகம் யாழ். கண்ணனின் இசையில் மிளிர்ந்த புதுமையான பாடல்களுடனும் மற்றும் கூத்துவகை ஆட்டத்துடனும் கூடியது. இந்நாடகம் 79 – 80 இல் இலங்கையில் மட்டும் 30 தடவைகள் மேடையேறியது. இயக்கவிதி-03, துக்ளக் ஆகிய நாடகங்கள் இலங்கை அரசின் தணிக்கைக்கு உள்ளாகின. கண்ணாடி வார்ப்புகள் நாடகம் ஆறு நாடகங்கள் என்ற நூல் அச்சுச் செலவிற்காக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பகல், இரவுக் காட்சிகளாக சிறப்பான காட்சி அமைப்புடன் மேடையேறியது.
பாலேந்திராவின் ஈழத்தவரின் போர்ச் சூழல் குறித்த எரிகின்ற தேசம், பாரத தர்மம், துன்பக் கேணியிலே, பெயர்வு, போகிற வழிக்கு ஒன்று, மரணத்துள் வாழ்வு போன்றன பார்வையாளர்களை நெருடிய நாடகங்களாகும். தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் நாடக விழாக்களை இலங்கை, இலண்டன், நோர்வே, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலும் இடம்பெற வைத்துப் பெருமை கண்டார்.
பாலேந்திராவின் நாடகங்களில் பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்குமான உறவு பலமாக இருந்து கொண்டிருக்கும். மழை என்ற நாடகத்துடன் எங்களைக் கட்டிப்போட்டு வைப்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம். கண்ணாடி வார்புகள்– டொம், மழை – அண்ணன் பாத்திரங்கள் இவரது நடிப்புக்குப் புகழ் சேர்த்தவை. ஆயினும் பசி யில் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். இவரது நாடகங்களில் இசை, ஒளி என்பன முக்கிய பாத்திரங்களாக அமையும். முகமில்லாத மனிதர்கள், யுகதர்மம் மற்றும் அனைத்துச் சிறுவர் நாடகங்களிலும் இசையும், பாடல்களும் நிறைந்து காணப்படும். கண்ணாடி வார்ப்புகள் நாடகத்தின் பிற்பகுதியில் இவர் கையாண்ட ஒளி அமைப்பும், இளையோடிய இசையும் பார்வையாளர்களை அவ்விரு நாடகப்பாத்திரங்களின் உலகிற்கு அழைத்துச் சென்றதை மறக்கமுடியாது.
நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டுவது. ஒரு நிகழ்ச்சியை வர்ணிப்பதே நாடகம். ஒரு ‘நிகழ்தலின்’ படிப்படியான முன்னேற்றத்தை நாடகம் காட்ட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மனித வாழ்வோடு இணைந்த ஒரு நிகழ்வுக் கோவையை காட்டுவது நாடகம். இது மேடை என்ற தளத்தில் அதன் கள பரிமாணத்துக்குட்பட்டதாக நீள, அகல உயரங்களுக்குட்பட்டதாக அதாவது ஒரு எல்லைக்குட்பட்ட வெளியில் நிகழ்கின்றது. காலத்தையும் ‘வெளி’யையும் சார்ந்து நிற்பது நாடகம். இந்த எல்லைக்குள் தான் இது நிகழ முடியும்.நிகழ்த்திக் காட்டியவர் பாலேந்திரா அவர்கள்.
இவர் 1951.08.08ல் பிறந்தவர் இவருடைய நாடகப்பிரவேசமானது பதினேழு (17) வயதிலே ஆரம்பமாகிவிட்டது. பாலேந்திரா அவர்களின் நாடகப் பிரவேசமானது ஏனைய நாடக ஆளுமைகள் போன்று அமைந்துவிடவில்லை. தனது தாயாரைப் போன்றே சிறுபராயம் தொட்டு காண்பவற்றையெல்லாம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த இவருக்கு சிறு சஞ்சிகைகள், கட்டுரைகள் என்பவற்றின் ஊடாக ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என பல எழுத்தாளர்கள் அறிமுகமாகின்றார்கள். இவர்களின் எழுத்துக்களினால் கவரப்பட்ட பாலேந்திரா அவர்கள் கலையுலகின்பால் ஈர்க்கப்பட்டார். வீட்டுச் சூழல் இவருக்கு இடம் கொடுக்காத போதும் கூட, திருட்டுத்தனமாக தாயாருக்குத் தெரியாமல் ஊர் நாடகங்களைப் பார்த்தல், அவற்றில் நடித்தல் என்றிருந்த இவருக்கு அவரது ஊரிலே வருடா வருடம் நடைபெற்ற சுதேசிய விழா நாடகங்களே ஆரம்ப அனுபவங்களாக இருந்தன.
1970 களிலே கொழும்பில் நல்ல சிங்கள, ஆங்கில மொழி நாடகங்களையும், லயனல் வென்ற் அரங்கில் நாடக திரைப்படச் செயற்பாடுகளையும் கண்ட இவருக்கு நாடகத்துறையின் மீதான ஈடுபாடும், ஆர்வமும் மேலும் ஊற்றெடுக்கத் தொடங்கியது. 1972இல் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலே பொறியியல் துறையில் கல்வி பயில்வதற்காகப் பிரவேசித்த இவர் தன்னுடைய 1ம் வருடத்திலே சாவின்சதி என்ற நாடகத்தில் நடித்து பல பாராட்டுக்களையும் பெற்றார். அங்கிருந்த தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகையின் ஆசிரியராகவும், சங்கத் தலைவராகவும் இருந்த போது கலைஞர்கள், அறிஞர்களுடன் ஏற்பட்ட தொடர்புகள் ஒரு சீரிய நாடகக் கலைப் பயணத்திற்கு இவருக்கு அடிகோலின. ஆயினும் இவரை முதன் முதலில் சிறந்த நடிகனாக அறியச் செய்தது. இவர் 1973ல் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த சுகைர் ஹமீட் அவர்களின் ஏணிப்படிகள் என்ற நாடகமாகும். இந்நாடகம் அப்போதைய அரசியல் கூட்டணிகளின் எதிர்பார்ப்புக்களையும், ஏமாற்றங்களையும் குறியீட்டு முறையில் வெளிப்படுத்தியிருந்தது. 1973 இல் இராமகிருஷண மண்டபத்தில் மேடையேறிய இந்நாடகம் 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டிலும் மேடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாலேந்திரா அவர்கள் நிறுவிய அவைக்காற்றுக் கலைக்கழகமானது ஈழத்தில் இயங்குகின்ற பொழுது நடிகர்களை ஒன்று திரட்டவும், அவர்களை நாடகத்திற்காக தயார்படுத்தவும் பல சவால்களை எதிர்கொண்டதோடு, நாடகத்தில் பேசும் பொருளுக்கான எதிர்ப்புகளையும், பல்வேறு தடைக்கற்களையும் எதிர்கொள்ளவும் நேரிட்டது. அத்தோடு ஈழத்தில் அன்று காணப்பட்ட சூழலில் பெண்களை நாடகத்துறையில் ஈடுபடுத்துவதிலும் பெரும் சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இது போலவே லண்டனிலும் அவைக்காற்றுக் கலைக்கழகமானது பல்வேறு சவால்களை இன்றுவரையிலும் எதிர்நோக்கி வருகின்றது. அந்தவகையிலே லண்டனில் தமிழ் நடிகர்களை ஒன்றுதிரட்டுவது. தமிழ் இசைஞர்களை உருவாக்குவது, தமிழ்மொழி மூலம் செயற்பாடுகளை முன்னெடுப்பது எனப் பலவகையான சவால்களை எதிர்கொண்ட பொழுதும் கூட அவர் ஓய்ந்து விடவில்லை. தொடர்ந்தும் தன்னுடைய நாடகப் படைப்பாக்கங்களையும், நெறிப்படுத்தல்களையும் யதார்த்த நாடகங்கள், காவியபாணி நாடகங்கள், குறியீட்டு நாடகங்கள், பரீட்சார்த்த நாடங்கள், அபத்தபாணி நாடகங்கள், சரித்திர நாடங்ள், கவிதா நாடக நிகழ்வுகள் எனப் பல பாணிகளிலும் மேற்கொண்டே வருகின்றார்.
ஒரு கலைக்குடும்பம் சாராத பின்னணியில் இருந்து கலையுலகில் பிரவேசித்த பாலேந்திரா அவர்கள் தன்னுடைய வாழ்வையும் தன்னுடைய குடும்பத்தார் வாழ்வையும் கலையுலகிற்கே அற்பணிப்புச் செய்து வருகின்றார். இந்த ரீதியில் பாலேந்திரா அவர்களின் மனைவி, மற்றும் மகளின் நாடகத்துறைசார் அற்பணிப்புக்களை நோக்கவேண்டியது எமது கடமை . திருமதி. ஆனந்தராணி பாலேந்திரா அவர்கள் ஈழத்தின் தலை சிறந்த பெண் நடிகையாகக் காணப்பட்டவர். இவருடைய நாடகப்பிரவேசம் பற்றி நோக்குவோமானால், சிறுபராயத்திலே கதைகளை உரத்து வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த இவர் கொழும்பில் தனியார் பாடசாலையில் கல்வி கற்றபோது பாடசாலை நிதிக்காக மேடையேறிய நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
1974ல் இலங்கை வானொலி நாடகங்கள், உரைச்சித்திரங்களில் நடிக்க ஆரம்பித்த ஆரம்பித்த இவரின் தீவிர நாடகப் பிரவேசம் 1975ல் நிகழ்ந்தது. மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தில் பாலேந்திரா அவர்கள் தலைவராக இருந்தபோது தயாரித்த ‘பிச்சைவேண்டாம்’ என்ற முழுநீள நாடகத்தில் பிரதான பாத்திரம் ஏற்று பாலேந்திராவுடன் இணைந்து நடித்திருந்தார். பாலேந்திரா அவர்கள் நெறிப்படுத்திய ‘மழை’ நாடகத்திலே முக்கிய பாத்திரமான நிர்மலா என்ற பாத்திரத்தில் நடித்து இலங்கையில் பலரின் மத்தியிலும் சிறந்த நடிகையாக இன்று வரையும் நிலைத்து நிற்கின்றார். அதுமாத்திரமன்றி இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘வாடைக்காற்று’, ‘கோமாளிகள்’, ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் ஆனந்தராணி அவர்கள் ஈழத்திலும், புலம் பெயர்விலும் பாலேந்திரா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட அத்தனை நாடகச் செயற்பாடுகளிலும் முக்கிய பங்காற்றி வருகின்றார். சிறந்த நடிகையாக மாத்திரம் அன்றி, ஆனந்தராணி அவர்கள் நாடகங்களுக்கான நடனங்களை வடிவமைப்பது, பாடல்களைப் பாடுவது, நெறியாள்கையில் உதவி செய்வது, நடிகர்களுக்கான நடிப்பினை வழிப்படுத்துவது, நடிகர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்குவது என்று பல தரப்பட்ட பணிகளையும் நாடகத்துறையினுள் மேற்கொண்டு வருகின்ற பல்துறை பெண் ஆளுமையாகவும் காணப்படுகின்றார். அது மாத்திரம் அல்லாமல் லண்டன் தமிழ் நாடகப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்தவொரு தாயாகவும், சகோதரியாகவும், சக நடிகையாகவும், பயிற்றுவிப்பாளராகவும், தொழிற்பட்டு வருகின்றார்.
சிறுவயதிலே நாடகத்துறையினுள் நடிகையாக பிரவேசித்த ஆனந்தராணி அவர்கள் அறுபது வயதாகியும் இன்றுவரையிலும் நாடகத் துறைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற ஈழத்தின் தலை சிறந்த பெண் நாடக ஆளுமையாக காணப்படுகின்ற போதிலும் கூட ஈழத்தில் இவருடைய நாடகத்துறை சார்ந்த பங்கும், பணியும் பதிவேற்றங்கள் செய்யப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய இடமாகும். இதனால் இவர்கள் பற்றிய பதிவை நான் செய்ய முற்படுகிறேன் தன்னைப் போலவே தன்னுடைய மகள் மானசியையும் நாடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவளாக வளர்த்து, பாலேந்திரா அவர்களின் அவைக்காற்றுக் கலைக்கழகத்தில் நடிகையாகவும், பாடகியாகவும், நாடகப் பள்ளியை நடப்பிப்பவராகவும் தன்னுடைய மகளை தயார்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலேந்திரா அவர்கள் இன்று வரையிலும் 68 நாடகங்களை மேடையேற்றியிருக்கின்றார். அவற்றிலே ஈழத்தில் 24 நாடகங்களையும், புலம்பெயர்வில் 44 நாடகங்களையும் நெறிப்படுத்தியிருக்கின்றார். இவற்றில் பல நாடகங்கள் இன்று வரையிலும் மீண்டும் மீண்டும் மேடையேற்றப்பட்டும் வருகின்றன. இந்த 68 நாடகங்களிலும் 46 சுயமொழி நாடகங்களும், 22 மொழிபெயர்ப்பு நாடகங்களும் உள்ளடங்குகின்றன. இந்த வகையில் சுதேசிய மொழிசார் நாடகங்களையே அதிகம் உருவாக்கியமை கவனிக்கப்பட வேண்டியது. ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளையே பேசுகின்றவராகவும், தன்னுடைய தமிழ், மற்றும் தாய்மண் பற்றினால் இன்றுவரையிலும் சுயமாக நாடகத்துறையிலே ஈடுபட்டு வருபவராகவும் காணப்படுகின்ற பாலேந்திரா அவர்கள் ஈழத்தில் தன்னுடைய நாடகப் பயணத்தினுள் காலடி பதித்து அதனை இன்று வரையிலும் புலம்பெயர் நாட்டிலும் முன்னெடுத்தும் வருகின்றார். இந்த ரீதியில் நாடகக் கலைசார் ஈர்க்கப்பட்ட கலைஞன் ஒருவன் எத்துறை சார்ந்து வேலைபுரிந்தாலும் அவனுடைய எண்ணம், சிந்தனைகள் நாடகத்துறையிலேதான் ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், ஈழத்தமிழர் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற ஈழத்து நாடக ஆளுமைகளுள் பெரிதும் பேசப்படக்கூடியவராகவும், சமகால நெறியாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் காணப்படுகின்ற பாலேந்திரா அவர்கள் ஈழம் ஈன்றெடுத்த, நாடகப் படைப்பாளி, சிறந்தநெறியாளன், இளமையும் துடிப்பும் மிக்க செயல்பாட்டுவாதி என்பதை எல்லோரும் அறிதல் வேண்டும்.
1980 களை அடுத்த காலப்பகுதியில், விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஈழத்தமிழர் பெருமளவில் புலம் பெயர்ந்தனர். 1983 ஜுலையில் இருந்து மேற்கு நோக்கிய பெருமளவிலான புலப்பெயர்வானது யாழ்ப்பாணத்தின் சமூக அசைவாக்கத்தினை கணிசமாக துரிதமுறச் செய்திருந்தது. ஒரு சராசரி வயதான நபரின் அல்லது பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்ட ஒருவரின் ஆதர்ச இலக்காக வெளிநாடு நோக்கிப் புலம் பெயர்வதொன்றே அமைந்தது.
1983 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றவர்கள் 2 லட்சம் பேர் அல்லது யாழ்ப்பாணக் குடிசனத்தொகையின் 25 வீதம் என்று சில ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. ஈழத்தமிழர்களின் இப்புலம்பெயர் வாழ்வில் அவர்களது எதிர்காலம் குறித்த பிரச்சினைகளோடு கலாசார வாழ்வு, கூடிய அக்கறையையும், ஆய்வையும் வேண்டி நிற்கிறது. இந்தப் புலம்பெயர் கலாசார வாழ்வின் ஒரு முக்கிய வெளிப்பாடாக புலம்பெயர் இலக்கியம் ஸ்தாபிதம் கொண்டிருக்கிறது. நவீன தமிழ் இலக்கியத்தின் புதிய பரிமாணமாயும், சர்வதேச ரீதியில் இன்று முனைப்புற்றிருக்கும் புலப்பெயர்வு கலாசாரத்தின் இன்றியமையாத கூறாகவும் தமிழர் புகலிட இலக்கியம் திகழ்கிறது. ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் எல்லாம் தீவிர நாடகம் அறிந்த, பயின்ற ஆர்வலர்கள் இருந்தபோதும் அமைப்பு ரீதியாக தீவிர நாடக இயக்கம் வலுவாக வேரூன்ற முடியவில்லை. நாடகம் என்ற வடிவம் வேண்டி நிற்கும் குணாம்சங்களே நாடக இயக்கத்தினை நிர்ணயிப்பதாக அமைகிறது. அடிப்படையாக இங்கு வலியுறுத்தப்பட வேண்டியது. நாடகம் ஒரு கூட்டுக்கலை என்பதை உணர்ந்து இவர் செயற்படுவதால் இதுவும் ஒரு பரிணாம வளர்ச்சியே.
கண்ணாடி வார்ப்புகள்
இந்த நேரத்தில் பாலேந்திராவின் கண்ணாடி வார்ப்புக்களைப் பற்றி குறிப்பிடுவது எனது கடமை எனக் கருதுகிறேன். பிறமொழிகளில் இருந்து நல்லவற்றை எமக்கு எடுத்து வரல் வேண்டும் அந்த வகையிலே அமெரிக்க நாடகாசிரியர் ரென்னஸி வில்லியம்ஸ் 1940 களில் எழுதிய The Glass Menagerie என்ற நாடகத்தின் தமிழ் வடிவமே கண்ணாடி வார்ப்புகள். நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட உன்னத கலைவார்ப்பாக மிளிரும் இந்த நாடகத்தை, நிர்மலா நித்தியானந்தன், மல்லிகா ராஜரட்ணம் க.பாலேந்திரா ஆகியோர் தமிழில் ‘கண்ணாடி வார்ப்புக’ ளாக்கியி ருக்கிறார்கள்.1978ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஒன்பதாம் திகதி இந்த நாடகத்தின் முதல் மேடையேற்றத்தில் தமிழ் மொழியாக்கம் செய்தவர்களுடன் ஆனந்தராணி ராஜரட்ணம், ஜெரால்ட் ஜெயராஜா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். நாடகத்தை பாலேந்திரா நெறியாள்கை செய்திருந்தார். உலக பொதுமையான கதைக் கருவுடன் அழகான, மென்மையான நாடகமாக்கியிருந்தார் ரென்னஸி வில்லியம்ஸ். பிரபல சிங்கள நாடகாசிரியர் ஹென்றி ஜயசேன இந் நாடகத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்து பளிங்கு ரெனே என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருந்ததுடன் அஹாஸ் மாளிகா என்ற பெயரில் அதனை மேடையேற்றியிருந்தார். 2004 இல் அகலே என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக வெளியாகி பல தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. 2011இல் ஈரானிய திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது. ஹொலிவூட்டில் மூன்று முறை திரைப்படமாக்கப்பட்டது. பாலேந்திரா 1983 இற்குப் பின் இலண்டனுக்குக் குடிபெயர்ந்த பின்னர் ஆறேழு தடவைகள் வெவ்வேறு அரங்குகளில் மேடையேற்றப்பட்டிருக்கிறது. இலக்கிய நூல்கள் இப்போதெல்லாம் எண்ணிக்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற இன்றைய காலகட்டத்தில் ஓர் உயர்ந்த இலக்கிய படைப்பாக கண்ணாடி வார்ப்புகள் மிளிர்கின்றது.
மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் தமிழுக்காக எவ்வாறு பாலேந்திரா பாடுபட்டாரோ, அதனைவிடப் பன்மடங்கு அவரிடம் தமிழ் நேர்த்தியாய் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. நூலுக்கான முன்னுரையில் அவர் தமிழைக் கையாண்டிருக்கிற விதம் இன்றைய எழுத்தாளர்கள் கூர்ந்து கவனிக்கத்தக்கது. இந்த நாடகம் ஆங்கிலத்தில் அடைந்த வெற்றியைப் பார்க்கிலும் தமிழ் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டதால் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நாடகத்தின் கரு – தமிழ் வடிவத்தில் உன்னதமாய் அமைக்கப்பட்டிருப்பதே வெற்றிக்குக் காரணம். பாலேந்திராவின் நாடக சாதனைகளுக்காக 2019ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது அழிக்கப்பட்டது. அதைவிடப் பெருமை அண்ணாவி மேதை என்னும் பட்டம் அளிக்கப்பட்டது சிறப்பானது.
வாடைக்காற்று
வாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற புகழ் பெற்ற புதினம் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது. இத்திரைப்படத்தில் ஏ. இ. மனோகரன், கே. எஸ். பாலச்சந்திரன், கலாநிதி கே. இந்திரகுமார், எஸ். ஜேசுரட்னம், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் முதலானோர் நடித்திருந்தனர். பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள். இந்தப் படம் ஆனந்தராணி பாலேந்திரா இருவருக்குமே மறை முகமாக கெளரவத்தை தேடி கொடுத்தது .
கொஞ்சம் சுருக்கமாகக் கூறுவதாயின் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினூடாக பாலேந்திரா அவர்கள் ஈழத்தில் மேடையேற்றிய நாடகங்கள் தமிழர்களின் சிந்தனைகளைப் புரட்டிப்போடுவதற்கும் வழிகோலின. அந்த வகையில் மனித குலத்தின் பொது அவலங்களைப் பேசும் பிரக்டின் யுகதர்மம் என்ற நாடகம் யாழ் கண்ணனின் இசையில் மிளிர்ந்த புதுமையான பாடல்களுடனும், கூத்து வடிவத்தின் சில அம்சங்களுடனும் கூடியது. இந்நாடகம் 1979-1982 வரையிலும் இலங்கையில் 29 தடவைகள் மேடையேற்றம் கண்டது. இயக்க விதி – 03, துக்ளக் ஆகிய நாடகங்கள் அக்காலத்தில் இலங்கை அரசின் தணிக்கைக்கு உள்ளாகிய நாடகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கண்ணாடி வார்ப்புகள் நாடகம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பகல், இரவுக் காட்சிகளாக மேடையேறியது. அத்தோடு மழை, அரையும் குறையும், ‘கண்ணாடி வார்ப்புகள்’ போன்ற நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது மட்டுமல்லாமல் கண்ணாடி வார்ப்புகள் நாடகம் இலங்கை ரூபவாகினி தொலைக் காட்சியிலும் 1982ஆம் ஆண்டு முதலாவது தமிழ் நாடகமாக ஒளிபரப்பானது. இவ்வாறாக ஈழத்திலே அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் ஊடாக பல்வேறான நாடக முயற்சிகளை மேற்கொண்ட பாலேந்திரா அவர்கள், பெரும்பாலான பிறமொழி நாடகங்களைத் தானே தெரிவு செய்து ரா. நிர்மலா, ச.வாசுதேவன், ரா.மல்லிகா, சீ.ஞானச்செல்வதி, எம்.எல்.எம்.மன்சூர் போன்றோரின் உதவியுடன் மொழிபெயர்த்து ஈழத்தில் நெறிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலப்பெயர்வு
ஈழத்தில் பல்வேறான நாடக முயற்சிகளை முன்னெடுத்த பாலேந்திரா அவர்கள் 1982 காலப்பகுதியிலே வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ள நேர்ந்தது. வெளிநாட்டுப் பயணத்தினால் புதிய தேசம், புதிய வாழ்வியல் முறைகளை எதிர்கொண்டாலும்கூட ஈழத்தில் வாழ்ந்த அதே நாடக வாழ்வையே அங்கும் முன்னெடுத்தார். அந்த வகையில் 1982இல் நோர்வேயில் தான் தங்கியிருந்த 10 மாத காலமும் அங்கிருந்த தமிழர்களை இணைத்துக்கொண்டு நோர்வே நாட்டவருக்காக வார்த்தையில்லா நாடகத்தினை நிகழ்த்தியிருந்தார். பார்வையாளர்கள் முழுவதும் நோர்வேஜிய மக்களாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து லண்டனிலே 1983ஆம் ஆண்டு தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினை திருமதி.ஆனந்தராணி பாலேந்திரா, சட்டத்தரணி மு.நேமிநாதன், சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், சி.ராஜ்குமார், சபேஸ், சுகுணசபேசன் ஜனார்த்தனனன், விஜயன், பா.சந்தியேந்திரன், ஆதரவுடன் நிறுவி, லண்டன்வாழ் இலங்கைத் தமிழர்களை ஒன்று திரட்டி அதன்மூலம் பல்வேறான நாடகங்களையும் இன்றுவரையும் மேடையேற்றி வருகின்றார். அத்தோடு 1991ல் இருந்து வருடா வருடம் நாடக விழாக்களையும் நடாத்தி வருகின்றார். இதுவரை லண்டனில் 37 நாடக விழாக்களையும், மற்றும் கனடா, ஒஸ்ரேலியா, நோர்வே, இந்தியா, பிரான்ஸ், ஹொலன்ட், சுவிற்சலன்ட், ஜேர்மனி போன்ற நாடுகளில் 23 நாடக விழாக்களையும் நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு நாடக விழாவிலும் குறைந்தது மூன்று நாடகங்கள் மேடையேறியுள்ளன. இவை நாடக விழாக்கள் மட்டுமே. வேறு சங்கங்கள், நலன்புரி அமைப்புகள், பழைய மாணவர் சங்கங்கள் என இதுவரை சுமார் 400 நாடக மேடையேற்றங்களை நிகழ்த்தியுள்ளார்.
அது மாத்திரம் அல்லாமல் அந்நியச் சூழலில் வாழும் எமது சிறுவர்கள் தமது சுய அடையாளங்களை இனங்காணவும், தன்னம்பிக்கையுடன் ஒரு பலமான அத்திவாரத்தைக் கட்டியெழுப்பவும், தமிழ் மொழியைச் சரளமாகப் பேசிப் பயிலவும் சிறுவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி, தொடர்ச்சியாக இன்றுவரையும் பல்வேறான சிறுவர் நாடகங்களையும் மேடையேற்றி வருகின்றார். அந்தவகையில் பேராசிரியர் மௌனகுருவின் வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள், மாவை நித்தியானந்தனின் அரசனின் புத்தாடை, பேராசிரியர் சிவசேகரம் எழுதிய மலைகளை அகற்றிய மூடக் கிழவன் போன்ற நாடகங்களைக் குறிப்பிட முடியும்.
லண்டன் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் நாடகங்கள் ஊடாக, ஈழத்தவரின் போர்ச்சூழலையும், அதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் வேதனைகளையும் கூட லண்டன் வாழ் மக்களிடம் இன்றுவரையிலும் பேசிக்கொண்டிருக்கின்றார். அந்த வகையில் எரிகின்ற எங்கள் தேசம், பாரத தர்மம், துன்பக்கேணியிலே, பெயர்வு, போகிற வழிக்கு ஒன்று, மரணத்துள் வாழ்வு, நெட்டை மரங்கள் போன்றன ஈழத் தமிழரின் துயரங்களை வெளிக்காட்டி பார்வையாளர்களை நெருடிய நாடகங்களாகும். இவருடைய நாடகங்களில் பல, பெண்ணியம் குறித்த கருப்பொருளைக் கொண்டவையாகவும் உள்ளன. மோகன் ராகேஷின் அரையும் குறையும், அம்பையின் ஆற்றைக் கடத்தல், சேரனின் அவன் அவள், துன்பக்கேணியிலே கவிதா நாடக நிகழ்வு போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பாலேந்திரா அவர்களுடைய நாடகத் தயாரிப்பு முறைமை என்பது பெரும்பாலும் இயற்பண்புவாத நடிப்பு மோடியையே அதிகம் அழுத்துகின்றதான ஒரு போக்கினைக் கொண்டிருப்பதை அவருடைய பல நாடகத் தயாரிப்புகளில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம். குறியீட்டு நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், புத்தாக்க நாடகங்கள், சுயமொழியில் தயாரிக்கப்படுகின்ற புதிய நாடகங்கள் என எந்த வகையினதாக அவை இருந்தாலும் அளிக்கை என்ற வகையில் அவை யதார்த்தப் பாங்கான ஒரு ஊடாட்டத்தையே பார்வையாளருக்கும் தமக்கும் இடையே ஏற்படுத்தியிருக்கின்றன எனக் கூறலாம்.
ஆனந்தராணி பாலேந்திரா
ஆனந்தராணி பற்றி குறிப்பிடவேண்டும். எழுத்துலகில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருப்பினும் நாடகம், நடிப்பு என்று வரும் போது பெண்களின் வருகை அதிகளவில் இல்லை. சமூகம் கலைகளை நேசிக்கின்ற அளவிற்கு கலைத்துறைசார் அரங்குகளுக்கு அனுமதிக்க தயக்கம் காட்டவே செய்தனர். அதனால் அனேகமான அரங்குகளில் ஆண்களே பெண் பாத்திரங்களை ஏற்றுவந்தனர். பெண்களின் கல்வி,சமூகம் சார்ந்த உணர்வு உத்வேகம் பெற நாட்களாயிற்று. எனினும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே அரங்கிற்கு வந்தார்கள். சிலர் ஓரிரு செயற்பாட்டுடன் தங்களைக் குடும்பம், சமூகம் என்று குறுக்கிக் கொண்டார்கள்.
பிறமொழி அரங்குகளில் பெண்களின் பங்களிப்பு அபரிமிதமாக இருப்பினும் இன்றும் அதிகளவில் பேசப்படவேயில்லை. குறிப்பாக சிங்கள அரங்கியலில் அரச உதவிகள் கிடைத்த அளவிற்கு தமிழில் குறைவாகவே இருந்ததும் காரணம். பெண்ணின் மனவியல்பிற்கு ஏற்றவிதத்தில் குடும்பம் அமையாதுபோனாலும் பெண்களின் அரங்கச் செயற்பாட்டு வலு குறைந்துபோய்விட்டமைக்கான காரணமாகியது. மாறாக, நடனம், நாடகம், ஒலி/ஒளிபரப்பு, பாடல், பேச்சு, திரைப்படம் என பல்துறைசார் அரங்குகளில் இன்று வரை மிளிரும் ஒருவராக நம்முன் தெரிபவர் திருமதி.ஆனநதராணி பாலேந்திரா என்றால் மிகையாகாது.
அவரின் கல்வி, நடனப் பயிற்சி அவரின் கலைஉலக வாழவைத் தீர்மானித்திருக்கவேண்டும். நடன ஆசிரியைகளான கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசர், சிறிகாந்தன் சகோதரிகள் ஆகியோரிடம் பெற்ற பயிற்சிகள் அவரை பலருக்கு அடையாளம் காட்டின. பின்னாளில் நடிப்பிலும் முத்திரை பதிக்க உதவின எனலாம். யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் இளமைக் காலத்தை கொழும்பிலேயே கழித்திருக்கிறார். கொழும்பு இந்துக்கல்லூரியில் பயின்ற பொழுதே பக்தநந்தனார் நாடகத்தில் நடித்து நாடக வாழ்வைத் தொடங்கிவைக்கிறார். உரத்து சிறுகதைகளை வாசிக்கையில் பாத்திரங்களின் உணர்வு ஏற்ற இறக்கங்களை அவதானத்துடன் வாசிக்கையில் ஏற்பட்ட அனுபவமும் அவரின் நாடக நடிப்புக்கும் பின் ஒலிபரப்பாளராக மிளிரவும் உதவியது போலும்.
குழந்தை சண்முகலிங்கம், தாசிசியஸ், பிரான்ஸிஸ் ஜெனம், வி.எம்.குகராஜா, கவிஞர் கந்தவனம், ஏ.ரி.பொன்னுத்துரை போன்ற பலரின் ஒரு பயிற்சிக்களமாகாவும் கொள்ளப்பட்ட யாழ். முத்துத்தம்பி வித்தியாசலை அரங்கக் கல்லூரியில் பயிற்சியும் பெற்றுக்கொண்டவர் ஆனந்தராணி. கொழும்பில் இருந்தபோது நவரங்கலா மண்டபத்தில் பேராசிரியர் மௌனகுரு அவர்களின் கூத்துமரபும், நாட்டியக் கலைஞர் கார்த்திகா கணேசன் அவர்களின் நடன அமைப்புடனும் கூடிய இராமாயணம் இன்றும் பேசப்படுகின்றது. நாடகத்திற்குரிய பாடல்களை பாத்திரங்களுக்கேற்ப தானே பாடும் திறமை, குரல்வளமும் இருப்பது சிறப்பானது.
ஆரமபத்தில் இராமாயணம், பக்தநந்தனார், நாயன்மார் போன்ற இதிகாச, பக்தி நாடகங்களில் நடித்து வந்தவர் இலங்கையில் வானொலிக் கலைஞராக பவனி வந்தார். இளங்கீரனின் வாழப்பிறந்தவர்கள் தொடரில் நடித்து வானொலி நேயர்களையும் கவர்ந்தார். அந் நாட்களில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் வர்த்தக, வங்கி அனுசரணையுடன் பல தொடர் நாடகங்களை ஒலிபரப்பி வந்தன. கோமாளிகள் கும்மாளம் (மரிக்கார் எஸ்.ராமதாஸ்), அசட்டு மாபிள்ளை (வரணியூரான்), ஒரு வீடு கோவிலாகிறது, தணியாத தாகம் ஆகியவை குறிப்பிடத் தக்கன. இவரும் பல வானொலி நாடகங்களில் பங்கு பற்றினார். மேடை நாடகங்களை கமலாலயம் சிவதாசன் வரணியூரானின் இயக்கத்தில் வேலணை வீரசிங்கம் அவர்களின் பிறவுன்சன் கோப்பி நிறுவனத்தின் ஆதரவில் மேடையேற்றிய நாடங்கள் இவருக்குப் புகழைக் கொடுத்தன. சம்பந்தம், அசட்டுமாப்பிள்ளை குறிப்பிடத்தக்கனவாகும். கூடவே கட்டுப்பெத்தை தமிழச் சங்க நாடகமான பிச்சை வேண்டாம் நாடகம் அவரை நவீன நாடகத்திற்கு அழைத்து வந்தது. இதனால் கோமாளிகள் படமாக்கப்பட்டபபோதும், கமலாலயம் நிறுவனம் வாடைக்காற்று (1978) நாவலை திரைப்படமாக்கிய போதும் ஆனந்தராணி சிறப்பாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். வாடைக்காற்று நாவலாகவும் பலரால் வாசிக்கப்பட்டதும், திரைப்படமாகியதும் ஓரளவிற்கு வசூலையும் தந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கணிக்கப்பட்டது. கண்னாடி வார்ப்புக்கள் மேடையில் ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றிருந்த வேளை அதனை தொலைக்காட்சிகேற்பவும் வடிவமைத்து இலங்கை ரூபவாகினியில் ஒளிபரப்பிய போது பலரையும் வியந்து பார்க்கவைத்தது. வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேறிய மழை நாடகத்தின் பாத்திரவார்ப்புக்கள் இந்திராபார்த்தசாரதியுடையது எனினும் அதற்கு உயிரூட்டியவர்கள் ஆனந்தராணியும் அவர்களது குழுவினருமே. பல தரப்பட்ட கதைகளை நாடக வடிவத்திற்குள் உள்வாங்கி ரசிகர்கள், குறிப்பாக அவைக்காற்றுக்கென உருவான ரசிகர்கள், விரும்பும் வண்ணம் கொண்டுவருவதில் வெற்றிபெற்றவர்களாவார்கள். அதனால் தான் குந்தவையின் சிறுகதை ஒன்றை மேடைக்கென வடிவமைத்து நாற்சார் வீடு எனும் பெயரில் மெடையேற்றினர்.
மிகுந்த சிரமங்களுக்கிடையே ஒவ்வொரு நாடகங்களையும் தன் கணவருடன் தயார் செய்து பாத்திரங்களுக்கேற்ப கலைஞர்களையும் தேர்வு செய்து , பயிற்சி அளித்து மேடையேற்றி ரசிகர்களிடம் போய்ச் சேரும் வரை அவர்களின் கஷ்டங்கள் அனேகம். விளம்பர விழாக்கள் எனில் அனுசரனையாளர்களின் உதவியை நாடலாம். ஆனால் கலைஞர்களை, ரசிகர்களை நம்பித்தான் உழைக்கின்றனர். இவர்களுக்கான மேடைகளும் கை கொடுக்கின்றன. மேடை வடிவமைப்பு, அரங்க நிர்மாணம், ஒலி, ஒளி அமைப்புகளையும் அவர்களே பயிற்றப்பட்டவர்களுடன் ஒருங்கிணைவதால் நாடகத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.
லண்டனுக்கு வந்த பின் தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகக் கடமையாற்றினார். அதே வேளை யோகா தினேஸ் தொகுத்து வழங்கிய சொற்சிலம்பம் நிகச்சியிலும் (சிறப்பு விருந்தினராக) நடுவராகக் கடமையாற்றி அனேகரின் பாராட்டுதல்களையும் பெற்றார். ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் தங்கள் நாடகங்களை மேடையேற்றியுள்ளனர். மேலும், இந்தியா,கனடா போன்ற நாடுகளிலும் தங்கள் குழுவினருடன் சென்று நிகழ்சிகளை நடத்தியுள்ளனர். அண்மையில் இலங்கை சென்று பல இடங்களிலும் நாடகங்களை மேடையேற்றியதுடன் கலைஞர்களுக்கான பயிற்சி கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளனர். தொடங்கிய காலம் முதல் இன்று வரை அதே உற்சாகத்துடன் தொய்வின்றி நாடகங்களை புதிது புதிதாக அரங்கம் நிறைந்த ரசிகளுடன் நடத்தி வருகின்றனர். இதற்கு மேலும் முத்தாய்ப்பாக புலம் பெயர் நாட்டில் வாழும் சிறுவர்களை அரங்க செயற்பாட்டிக்குள் இணைக்கும் வகையில் நாடகப் பள்ளியையும் நடத்து வருவதும் சிறப்பென கூறலாம். இன்னும் உயிர்ப்புடன் வாழும் இலங்கை ரசிகர்கள் மத்தியில் அரங்கம் சார்ந்த பயிற்சிக்களை ஆர்வத்துடன் மக்கள் கலந்து சிறப்பித்ததும், திரைப்படங்கள் போன்று ஹவுஸ்புல் அரங்காக மக்கள் நிறைந்ததும் ஆனந்தராணி, க.பாலேந்திரா தம்பதிகள் உருவாக்கிய நாடகப் பதிவுகளே சான்றாகும்.
இலங்கையிலும் லண்டனிலும் கண்ணாடி வார்ப்புக்கள் நாடக நூலை வெளியிட்டு மேலும் ஒரு படி மேல் சென்று அடுத்த தலைமுறைக்காக தங்கள் செயல்பாட்டை முன்வைக்கின்றமை வரவேற்கத் தக்கதாகும். யாழ்ப்பாணத்தில் முளைவிட்ட நாடக அரங்கக் கல்லூரி நிறையக் கலைஞர்கலை உருவாக்கியதுடன் அதன் தொடர்ச்சியாக பல்கலைக் கழக பாடநெறியாகவும் கற்பிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதே போல் அவைக்காற்றுக் கலைக் கழகமும் இலங்கையில் முகிழ்த்து லண்டனில் விழுதுகளைப் பரப்பி வருகிறது. கூடவே, பல்கலைக் கழக மாணவர்களும் தங்கள் கற்கைநெறிப் பாடத்திட்டத்திற்கமைய அவைக்காற்றுக் கலைக்கழக நாடகங்கள்/அதன் ஸ்தாபகர் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு கட்டுரைகளைச் சம்ர்பித்தமையும் ஈழத்து அரங்கம் வாழ்கிறது என்பதன் சாட்சியங்களாகும். ஈழத்துக் கலை உலகம் அவைக் காற்றுக் கலைக் கழகத்தினரை மறந்துவிடாது. அதே போல் ஈழத்து பெண் கலைஞர் ஆனந்தராணி பாலேந்திராவை ஒவ்வொரு மேடையும் பெயர் சொல்லும் ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் என்றும் இருப்பாள் இன்று பாலேந்திராவின் கலை சார்ந்த வெற்றிக்கும் இதர வெற்றிகளுக்கும் ஆனந்தராணியும் மகள் மானசியுமே அச்சாணியாக அமைகிறார்கள்.
ஆனந்தராணி யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் 1955.12.01 இல் பிறந்தவர். வானொலி – திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர். இவரது தந்தை அய்யாமுத்து ராஜரட்ணம், தாய் மாணிக்கரத்தினம். இவர் தனது ஐந்து வயது வரை மன்னாரிலுள்ள முருங்கனின் என்னும் ஊரில் வசித்து பின்னர் தனது தந்தையின் பணி மாற்றம் காரணமாக கொழும்புக்குச் சென்று அங்கு வசிக்க தொடங்கினார். கொழும்பில் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தில் தனது சாதாரண தரம் வரையான கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலைக் காலத்தில் வாசிப்பு பழக்கம் அதிகமாக இருந்தது. இவர் வாசிக்கும் பொழுது வானொலி நாடகங்கள் ஒளிபரப்புவது போல வாசிப்பார். இவ்வாறு வாசித்தது இவருக்குள் இருந்த நாடகம் நடிக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வந்தது எனலாம். இந்த காலப்பகுதியில் இவரது பாடசாலையில் ஆண்டு இறுதியில் மாணவர்கள் நாடகம் தயாரித்து நடித்து காட்ட வேண்டும். தரம் 6 க்கு பின்னர் இவ்வாண்டு இறுதியில் நாடகங்களை இவரே தயாரிப்பதில் ஆர்வம் காட்டினர். இவற்றைவிட மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடசாலை நிதி திரட்டுவதற்காக பெரிய அளவிலான நாடகங்களை அரங்கேற்றி வரும். இவ்வாறு அரங்கேற்றப்பட்ட பக்த நந்தனார் நாடகத்தில் இவர் நந்தனாரின் மனைவியாக நடித்திருந்தார். நாடகம் கொழும்பிலும் யாழ்ப்பாணம் நகர மண்டபத்திலும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1971இல் நாயன்மார்கள் என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்யவிருந்த அன்று ஜேவிபியின் கிளர்ச்சி இடம்பெற்றதால் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டு மாலை காட்சி நாடகம் நடைபெற முடியாமல் போய்விட்டது.
நடனக் கலையில் இவருக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்து கொண்ட தந்தையார் இவரை கமலா ஜோன்பிள்ளை என்பவரிடம் நடனம் கற்க இணைத்துவிட்டார். பின் இவர் தனது கவனத்தை நடனக் கலையில் செலுத்தத் தொடங்கினார். கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசன், ஸ்ரீகாந்தம் சகோதரிகளான சரோஜினி, விசாகா, தர்மா ஆகியோரை தமது குருவாகக் கொண்டு இவரும் இவரது அக்காவான பாலராணியும் நடனத்தை முறைப்படி பயின்று 1973ஆம் ஆண்டு கொழும்பு ரோயல் கல்லூரியின் நவரங்ககலா மண்டபத்தில் தமது அரங்கேற்றத்தை செய்தனர்.
1974இல் கார்த்திகா கணேசர் நடனவடிவமைப்புச் செய்து தயாரித்த இராமாயணம் நாட்டிய நாடகத்தில் இராமராக வேடம் ஏற்று நடனமாடினார். இதில் வரும் இராம-இராவண யுத்தம், குதிரையேற்றம் போன்ற காட்சிகள் கூத்து வடிவத்தில் அமைக்கப்பட்டன. இதற்காக பேராசிரியர் மௌனகுரு அவர்களிடம் வடமோடி கூத்து ஆட்டத்தினைப் பயின்றார். இதனைத் தொடர்ந்து கார்த்திகா கணேசன் தயாரித்த எல்லாளன் துட்டகாமினி, கிருஷ்ண லீலா போன்ற நாட்டிய நாடகங்களிலும் நடித்தார். 1974இல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வானொலி நாடக தேர்வில் உரைச்சித்திர கலைஞர் தேர்வில் தெரிவு செய்யப்பட்டு 1974ம் ஆண்டு தொடக்கம் 1981வரை நூற்றுக்கணக்கான இலங்கை வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறார். இவற்றுள் வாழப் பிறந்தவர்கள், அசட்டு மாப்பிள்ளை போன்ற தொடர் நாடகங்களில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இதன்போது மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்க சார்பில் 1975ல் பாலேந்திரா தயாரித்த பிச்சை வேண்டாம் நாடகத்தின் பிரதான பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். பெண்கள் நாடகம் நடிப்பது இழிவாகக் கருதப்படும் காலத்தில் மிகவும் துணிச்சலாக இவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் சவாலான விடயமாக காணப்பட்டது. இதனால் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பெரும் சர்ச்சைக்குள்ளானார்.
1976இல் பாலேந்திரா தயாரித்த மழை நாடகத்தில் நடித்திருந்தார். இந்த நாடகம் 2013 வரை 40 தடவை மேடையேறியிருந்தது. 1978இல் நட்சத்திரவாசி, கண்ணாடி வார்ப்புகள் போன்ற நாடகங்களில் நடித்திருந்தார். கண்ணாடி வார்ப்புகள் நாடகம் 1982இல் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் முதலாவது தமிழ் நாடகமாக ஒலிபரப்பு செய்யப்பட்டது. அத்தோடு இலங்கையில் தயாரித்த தமிழ் படமான கோமாளிகள் திரைப்படத்தில் ஐயரம்மா வேடமிட்டு நடித்தார். இத் திரைப்படம் 1976.10.22ல் ஆறு இடங்களில் திரையிடப்பட்டது. செங்கை ஆழியான் எழுதிய நாவலான வாடைக்காற்று அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இத் திரைப்படத்திலும் பிரதான பாத்திரமேற்று நடித்தார். 30.03.1978ல் இத்திரைப்படம் இலங்கையின் பல பாகங்களிலும் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஜனாதிபதி விருதை பெற்றது.1979இல் கோடை இது நாடக அரங்கக் கல்லூரியால் தயாரிக்கப்பட்டது., பாலேந்திராவின் ஒரு பாலை வீடு, முகமில்லாத மனிதர்கள், அரையும் குறையும், துக்ளக், பசி போன்ற நாடகங்களில் 1982 வரை இலங்கையில் நடித்திருந்தார்.
1982 இல் இலங்கையின் பெயர் பெற்ற நாடக தயாரிப்பாளரும் பொறியியலாளருமான பாலேந்திராவைத் திருமணம் செய்து நோர்வே சென்றார். 1985 இல் லண்டனில் குடியேறிய பின்பு பார்வையாளர்கள், எரிகின்ற எங்கள் தேசம், இடைவெளி, சம்பந்தம், யுகதர்மம், பாரததர்மம், பிரத்தியேகக்காட்சி, துன்பக் கேணியிலே, ஆற்றை கடத்தல், அவசரக்காரர்கள், பெயர்வு, போகிற வழிக்கு ஒன்று, காத்திருப்பு, வேருக்குள் பெய்யும் மழை, திக்கற்ற ஓலம், பெருங்கதையாடல், மரணத்துள் வாழ்வு , தர்மம், என் தாத்தாவிற்கு ஒரு குதிரை இருந்தது, பாடம், சமூக விரோதி, போன்ற நாடகங்களை நடித்திருந்தார். இவர் நடிப்பதை தனது பொழுதுபோக்காக அல்லது பகுதி நேரமாக மட்டுமே வைத்திருந்தார்.
1975 – 1977 வரை பரதநாட்டிய ஆசிரியராக பணிபுரிந்து கொழும்பில் நடன வகுப்புக்களை நடாத்தி கொண்டு வந்த வேளை 1977இல் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக நிரந்தரமாக யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு வசிக்கத் தொடங்கினார். 1978 – 1982 பகுதிகளில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரியில் நடன ஆசிரியராக கடமையாற்றினார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் முதலாவது நடன ஆசிரியரும் இவரே. அத்தோடு கனிஷ்ட பாடசாலையில் வகுப்பாசிரியர் கணித பாட ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், தமிழ் பாட ஆசிரியராகவும் கற்பித்தார். லண்டன் பிறென்ட் தமிழ் பாடசாலையின் பரதநாட்டிய ஆசிரியராக 13 வருடங்கள் கடமையாற்றினார். இதே வேளை லண்டனில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியின் கணக்காளராக பணியாற்றினர். 1988ம் ஆண்டு தொடக்கம் அரச உத்தியோகத்தர் தேர்வில் தெரிவாகி பல அலுவலகங்களில் பணியாற்றி 2020 மே மாதம் இளைப்பாறினார். லண்டன் தீபம் தொலைக்காட்சியில் 14 வருடங்கள் பகுதி நேர செய்தி வாசிப்பாளராக கடமையாற்றினார். அப்பொழுது லண்டனில் வேறு தமிழ் தொலைக்காட்சிகள் இருக்கவில்லை. பரதநாட்டிய அரங்கேற்றங்களில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றினார். மேடை அறிவிப்பாளராக சுமார் 200 அரங்கங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஸ்ரீ லங்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் பதிவு செய்யப்பட்ட அறிவிப்புகள் பல காலமாக இவருடைய குரலிலேயே காணப்பட்டது. இலங்கையில் 1975இல் இருந்து 1982 வரை 11 மேடை நாடகங்களில் நடித்திருக்கின்றார். 70க்கும் மேற்பட்ட மேடையேற்றங்களில் பங்குகொண்டுள்ளார். இது தவிர யுகதர்மம் நாடகத்தின் பாடகர் குழுவில் ஒருவராக 23 மேடையேற்றங்களில் பாடியுள்ளார்.
லண்டனில் முதல் முதலாக லண்டன் தமிழ் நாடகப் பள்ளி என்ற பெயரில் சிறுவர் நாடகப் பள்ளியை 2003ஆம் ஆண்டு இவரது கணவர் பாலேந்திராவுடன் ஆரம்பித்து நடத்தி வருகின்றார். இப்பள்ளியூடாக பாலேந்திரா 20க்கும் மேற்பட்ட சிறுவர் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியுள்ளார். இதில் பலவற்றில் ஆனந்தராணி உதவி நெறியாளராக இருந்துள்ளார். எல்லாமாக 34 மேடை நாடகங்களில் நடித்திருக்கின்றார். சுமார் 350 மேடைகளில் நடித்துள்ளார். விளக்கமாக சொல்வதானால் தமிழ் மேடை நாடகத் துறையில் 45 வருடங்களாக இடைவிடாது தொடர்ந்து இயங்கி வரும் ஈழத்துப் பெண் கலைஞர் இவர். ஒரு மேடை நாடக நடிகையாக மட்டுமல்லாது சினிமா, வானொலி நடிகையாக, பரதநாட்டிய ஆசிரியையாக, தொலைக்காட்சி, வானொலி, மேடை அறிவிப்பாளராக பல்வேறு துறைகளில்; தடம் பதித்தவர்.1975ல் மொறட்டுவ (கட்டுபெத்த) பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத் தயாரிப்பான பிச்சை வேண்டாம் நாடக மூலம் பாலேந்திராவுடன் இணைந்து மேடை நாடகத்துறைக்கு அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 19. 1976ஆம் ஆண்டு பாலேந்திரா நெறிப்படுத்திய மழை நாடகத்தில் இருந்து இன்றுவரை அவரின் நெறியாள்கையில் சுமார் 40 க்கும் மேற்பட்ட நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார். இவற்றுள் பல நாடகங்கள் பெண்களை மையமாகக் கொண்ட நாடகங்களாகும். நடிப்பதற்கு மிகவும் சிக்கலான சவாலான நாடகங்கள் இவை. தனது நடிப்பாற்றலால் இப்பாத்திரங்களுக்கு உயிர் ஊட்டி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 1975ஆம் ஆண்டு க.பாலேந்திராவுடன் ஒன்றாக நாடகம் நடிக்க ஆரம்பித்து 1982இல் அவரது வாழ்க்கைத் துணைவியாக இணைந்து இன்று வரை நாடகப் பணியைத் தொடர்கிறார். ஆனந்தராணியின் கலைச்சேவைக்காக ஈழவர் திரைக்கலை மன்றத்தினரால் “கலாவிநோதர்” என்ற பட்டமும் சிவயோகம் அறக்கட்டளையினரால் “கலையரசி” என்ற பட்டமும் மற்றும் பிரென்ற் தமிழ்ச் சங்க விருதும், தமிழினியின் 2004க்கான விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். (நன்றி: மாணிக்கவாசகர் வைத்தியலிங்கத்தின் முகநூல் பதிவுகள்)