பாலேந்திராவின் 50 ஆண்டு நவீன அரங்கப் பயணம் – நிகழ்வு

ஜூலை முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 4 30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் ஈழத்து நாடகர் பாலேந்திராவின் ஐம்பது ஆண்டு அரங்கப் பயணம் குறித்த ஒரு நிகழ்வு திரு உடுவை தில்லை நடராஜா தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் லண்டனில் இருந்து வருகை தந்துள்ள பாலேந்திரா ஆனந்தராணி ஆகியோர் தமது அரங்கப் பயணத்தின் நினைவுகளை மீட்டும் ஆற்றுகை நிகழ்வும் இடம் பெறும்.
பிரபல வானொலி தொலைக்காட்சி ஊடகர் இளையதம்பி தயானந்தா அவர்கள்,அண்மையில் ஜீவநதி பதிப்பகம் வெளியிட்ட ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணமான பாலேந்திராவின் நேர்காணல்கள் தொகுப்பு நூலை அறிமுகப் படுத்தி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
வாழ்த்துரைகளும் இடம் பெறும். நாடக கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
இத்துடன் அண்மையில் கொழும்புவில் வெளியீடு கண்டு பின்னர் கனடாவிலும் யாழ்ப்பாணத்திலும் அறிமுகப் படுத்தப்பட்ட”பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்” நூலும் மற்றும் கண்ணாடி வார்ப்புகள், யுகதர்மம் ஆகிய பாலேந்திராவின் நூல்களும் அங்கு காட்சிப் படுத்தப் படும்
“பாலேந்திரா நேர் காணல்கள்” இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் எழுத்து ஊடகங்களுக்காக எடுக்கப் பட்ட நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. 1979 இல் இருந்து 2015 வரையில் பாலேந்திரா மேற்கொண்ட அரங்கப் பயணத்தில் அவர் எதிர் கொண்ட சவால்களையும் சாதனைகளையும் அடக்கிய ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணத் தொகுப்பு இந்த நூல்.
ஈழத்தில் நாடகத் துறையில் பயணிக்கும் இளையவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த இரு நூல்கள் அமைந்துள்ளன.