HumourNews & AnalysisSatire | கடி-காரம்Sri Lanka

பாலஸ்தீன நிலவரம் | இலங்கையின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கப்போகிறது? – ஒரு செய்தி அலசல்

பாலஸ்தீன நிலவரம் தொடர்பாக இலங்கை தொடர்ந்தும் கடும் கவலையில் மூழ்கியுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது. பாலஸ்தீனத்தில் – இங்கு பாலஸ்தீனம் என்பது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இரண்டையும் உள்ளடக்கிய 1947க்கு முன்னரான பிரதேசம் என்பதையே இலங்கை கருத்தில் கொண்டுள்ளது என அனுமானிக்கலாம்- பிரச்சினை தொடங்கிய நாள் முதலே இலங்கை கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருந்தது என்பது வெளிவிவகார அமைச்சின் அறிக்கைகளால் அறிந்துகொள்ளலாம். மார்ச் மாதம் ஐ.நா. திருவிழா முடிந்த பின்னர் வெளிவிவகார அமைச்சுக்கும் அமைச்சருக்கும் அறிக்கைகளை விடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே பாலஸ்தீனம் அமைச்சுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது.

“மூன்று நாட்களுக்கு முன்னர் பாலஸ்தீனத்தின் இலங்கைக்கான தூதுவரை அழைத்து அங்கு நடைபெற்றுவரும் நிகழ்வுகள் தொடர்பாக, இலங்கை ஆழமான கவலை கொண்டுள்ளது எனவும் பாலஸ்தீனத்தில் வாழும் மக்களின் உரிமைகள், உயிர்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் தனது கருத்துக்களைக் கூறியிருந்தார்” என அமைச்சின் அறிக்கை கூறுகிறது. (ஆதாரம்: இலங்கை டெய்லி மிரர் மே 19, 2021)

இருதரப்பினரும் மோதல்களை நிறுத்தி இப் பிரச்சினை எல்லைகளைக் கடந்து பரந்த பிராந்தியப் பிரச்சினையாக உருவெடுத்துவிடாது பார்த்துக்கொள்ளும்படி இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இரண்டு தரப்பினரையும் கேட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

இக் கோரிக்கைக்கு இரு தரப்பினரும் இணங்காத பட்சத்தில் இலங்கை அடுத்ததாக என்ன செய்யப் போகிறது என்பது பற்றி உலகம் மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது என நமது உள்ளூர் ஆய்வாளர் ஒருவர், ஊடக கலந்துரையாடலின் போது தெரிவித்திருந்தார்.

இலங்கையின் உள்நாட்டுப் பிர்ச்சினையின் போது பாலஸ்தீன அரசு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தது எனவும் அதன் நன்றிக்கடனாகவே இலங்கை தனது கண்ணீர் கலந்த கவலையைத் தொடர்ந்து தெரிவித்த வண்ணமுள்ளது என ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் இஸ்ரேலும் இலங்கைக்கு ஆயுதங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை பற்றியும் அதனால் தான் அரசைனால் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடிந்தது எனவும் ஊடக அறிவிப்பாளர் கேட்டதற்கு, ஆய்வாளரால் பதிலேதும் கூற முடியவில்லை.

தமிழர்களின் போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் இலங்கை இராணுவம் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சிகள் கொடுத்துவருவது தெரிந்ததே. இந்த நிலையில், பாலஸ்தீனர்கள் சார்பாக இலங்கை களத்தில் இறங்குமா என்ற அச்சம் உலகில் பல நாடுகளையும் உறைய வைத்திருக்கிறது எனப் பேசப்படுகிறது.

இதனால் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கைகளை உலகம் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது எனப் பேசப்படுகிறது

-மாயமான்