World

பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை: உலக நீதிமன்றத்தில் விசாரணைகள் ஆரம்பம்

நெதெர்லாந்தின் தி ஹெய்க் நகரிலிருக்கும், உலக நீதிமன்றமென அழைக்கப்படும் ஐ.நா.சபையின் அதியுச்ச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்காவினால் இஸ்ரேல் மீது தொடரப்பட்ட பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ‘இனப்படுகொலை’ வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று ஆரம்பமாகின. முதல் நாளான இன்று (வியாழன் ஜனவரி 11) பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தொடரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு கட்டளையிடுமாறு நீதிபதிகளை தென்னாபிரிக்கா சார்பாக வாதிடும் வழக்கறிஞர் அடிலா ஹாசிம் கேட்டுள்ளார். இஸ்ரேல் தனது பக்க வாதங்களை நாளை முன்வைக்கவிருக்கிறது.

ஒரு மக்கள் குழுமம் அவர்கள் சார்ந்த தேசியம், இனம், மதம் என அடையாளப்படுத்தப்படக்கூடிய காரணங்களை முன்வைத்து (intent) படுகொலை மேற்கொள்ளப்படுமானால் அதை ‘இனப்படுகொலை’ என வரைவிலக்கணம் செய்துகொள்ளலாம் என்பது ஜெனிவா ஒப்பந்தத்தின் கட்டளைகளில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்குற்றங்களை இழைப்பதாகக் கருதும் ஒரு நாட்டின் மீது உலக நீதிமன்றம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது. அக்குற்றங்கள் தொடர்பாக ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளோ உலக நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்க வேண்டும். பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்பாக தென்னாபிரிக்கா முறையீடொன்றைச் செய்திருந்தது. வேறு பல நாடுகளும் முறையீடுகளைச் செய்வதற்குத் தயாராகி வருகின்றன.

ஆனாலும் பாலஸ்தீனியர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் ‘இனப்படுகொலையை’ நோக்கமாகக் கொண்டவை என்பதை நிரூபிப்பது இலகுவான காரியமில்லை. இங்கு இஸ்ரேலின் இலக்குகள் ஹமாஸ் போராளிகளை மையமாகக் கொண்டவை என்பதனால் ஒரு இனக்குழுமத்தை அவர்களின் அடையாளத்திற்காக இஸ்ரேல் படுகொலை செய்தது என்பதை நிரூபிப்பது மிகவும் கஷ்டம் என சர்வதேச சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

“இனப்படுகொலை என்பது முற்கூட்டியே திட்டமிடப்பட்டு பிரகடனப்படுத்தப்படும் ஒன்றல்ல. ஆனால் 13 வாரங்களாக நடைபெறும் ஒரு போரில் இழைக்கப்படும் கொடுமைகளுக்கான ஆதாரங்களையும் கொடுமைகள் இழைக்கப்படும் வடிவங்களையும் வைத்துக்கொண்டு இங்கு நடைபெற்று வருவது இனப்படுகொலை என்பதைத் தீர்மானிப்பதில் நீதிமன்றத்திற்கு சிரமங்கள் ஏதும் இருக்க முடியாது” என தென்னாபிரிக்க வழக்கறிஞர் அடில ஹாசிம் கூறுகிறார்.

வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இஸ்ரேலுக்கு ஆதரவானவர்களும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவானவர்களும் நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொதுவாக ஐ.நா. உடபட்ட சர்வதேச அரங்குகளில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பக்க சார்பானவை எனக்குற்றஞ்சாட்டி அவற்றை இஸ்ரேல் உதாசீனம் செய்து வருவது வழக்கம். இந்த தடவை இஸ்ரேல் கொஞ்சம் தடுமாற்றமடைந்திருக்கிறது எனவும் அதனால் தனது மிகச் சிறந்த சட்ட நிபுணர்களை இந்நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் பிரதமர் நெட்டன்யாஹு உட்பட அவரது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் ஆற்றிய உரைகளில் ‘இனப்படுகொலைக்கான’ நோக்கமும் ஊக்குவிப்பும் இருக்கிறது என்பதையும் அவர்களது உரைகளை இஸ்ரேலிய இராணுவத்தினர் மீள ஒப்புவிப்பதைக் காரணம் காட்டியும் இஸ்ரேல் இனப்படுகொலையை மேற்கொள்கிறது என்பது நிரூபிக்கப்படக்கூடியது என்பது சில சட்ட நிபுணர்களது அபிப்பிராயமாக இருக்கிறது.

பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளே தமது இலக்கு எனவும் அதன் விளைவாகவே பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் எனவும் இஸ்ரேலிய தரப்பு வாதிக்க முயல்கிறது. இவ்விடயத்தில் தாம் சர்வதேச சட்டங்களை மீறவில்லை என அது வாதிடுவதற்கு இதையே அது முதற்காரணமாகப் பாவிக்கிறது.

போர்நிறுத்தமொன்றைக் கொண்டுவர சர்வதேச தொண்டு நிறுவனங்கள், ஐ.நா. பொதுச்சபை போன்றவைகள் முயற்சி செய்தும் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் அதை நிராகரித்து வருவதனால் தென்னாபிரிக்கா இவ்வழக்கின் முதல் நிபந்தனையாக உடனடியான போர்நிறுத்தமொன்றையே வலியுறுத்துகிறது. ஆனாலும் இந்நீதிமன்றத்தின் தீர்ப்பை இஸ்ரேல் ஏற்று அதன்படி நடந்துகொள்ளுமென்பதை எதிர்பார்க்க முடியாது.

பெப்ரவரி 6, 1946 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வுலக நீதிமன்றத்தில் இதுவரை 191 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. 15 நீதிபதிகள் அங்கம் வகிக்கும் இந்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுயாதீனமாகத் தீர்ப்புகளை வழங்கவேண்டுமெனினும் பொதுவாக அவர்கள் தமது நியமனத்தைப் பரிந்துரைத்த நாடுகளிற்கு ஆதரவாகவே தீர்ப்புகளை வழங்குவதே வழக்கம். தற்போதுள்ள நீதிபதிகளில் சுமார் எண்மர் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளிலிருந்தே வருகிறார்கள். இதுவரை உலகில் எந்தவொரு நாட்டையும் ‘இனப்படுகொலைக்காக’ உலக நீதிமன்றம் தண்டித்ததில்லை.

மாறாக உலக நீதிமன்றத்திலிருந்து சில கி.மீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court (ICC)) சில போர்க்குற்றவாளிகளைத் தண்டித்திருக்கிறது. றோம் விதிகளுக்கமைய (1) இனப்படுகொலை (2) மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் (3) போர்குற்றங்கள் (4) போர்த்திணிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் மீது நீதி பரிபாலிக்க இந்நீதிமன்றத்திற்கு அனுமதியுண்டு. ஆனால் ஜெனிவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் மீது மட்டுமே தீர்ப்புகளை வழங்க இந்நீதிமன்றத்திற்கு அனுமதியுண்டு. இலங்கையைப் போல் இஸ்ரேலும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கவில்லை. எனவே இந்நீதிமன்றம் மூலம் பாலஸ்தீனியர் மீதான கொடுமைகளுக்கு தீர்வுகாண முடியாது. இருப்பினும் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் போர்க்குற்றங்கள் சார்பான ஆதாரங்களைத் தமக்கு அனுப்பி வைக்கும்படி குற்றவியல் நீதிமன்றம் இன்று திறந்த அறிவிப்பொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் மீதான உலக நீதிமன்றத்தின் வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்தின் ஒரு அபிப்பிராயம் மட்டுமே. அதை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் அதற்கில்லை.