World

பாலஸ்தீனியர்களைக் கனடாவில் குடியமர்த்த இஸ்ரேல் அரசு இரகசிய திட்டம்?

காசாவில் வாழும் 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்களை முதலில் எகிப்திலுள்ள சினாய் பாலைவனத்திற்கு மாற்றி அங்கிருந்து கனடாவுக்கு ‘நாடு கடத்த’ இஸ்ரேலிய அரசாங்க அமைச்சரவை திட்டம் தீட்டியுள்ளதாக கனடிய தொலைக்காட்சி சீ.ரி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் உளவுத்துறையினால் இயலாத் தருணக் கருத்தியல் கோட்பாடாக வரையப்பட்டுள்ள இத்திட்டம் கசிந்ததைத் தொடர்ந்து பிரதமர் நெட்டன்யாஹு இச்செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காது மறைக்கப் பார்க்கிறார் எனக் கூறப்படுகிறது.

அக்டோபர் 7 ஹமாஸ் போராளிகளின் அதிரடித் தாக்குதலால் கதி கலங்கிப்போன இஸ்ரேல் தனது முதல் திட்டமாக 1.3 மில்லியன் பாலஸ்தீனியர்களை இடம்பெயரச் சொன்னதன் காரணம் அவர்களை அயலிலுள்ள அரபு நாடுகள், குறிப்பாக எல்லை நாடான எகிப்து, அகதிகளாக உள்வாங்கும் என்ற எண்ணத்தில் தான். 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது இதே போன்று வெளியேற்றப்பட்ட பல மில்லியன் பாலஸ்தீனியர்கள் இன்றும் ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளில் முகாம்களில் வாடுகின்றனர். இதே போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்தால் அரபு நாடுகள் பாலஸ்தீனியர்களை அகதிகளாக உள்வாங்குவதை வேண்டுமென்றே நிறுத்திவைத்துள்ளன. இந்த ஏகோபித்த நிலைப்பாட்டை இஸ்ரேல் சார்பான மேற்கு நாடுகள் மனிதாபிமான காரணங்களைக் காட்டி விமர்சித்திருந்த போதும் அரபு நாடுகள் அதை மாற்றிக்கொள்ளவில்லை.

அக்டோபர் 13 திகதியிடப்பட்ட இத் திட்ட வரைவு பற்றித் தெரிந்ததும் எகிப்துக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளதென்றும் ‘1948 இல் நடைபெற்றது இனிமேலும் நடைபெற நாம் ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை என பாலஸ்தீனியர்களின் தலைவர் மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்துள்ளாரெனவும் தெரிய வருகிறது.

இஸ்ரேலின் நீண்டகாலப் பாதுகாப்பிற்கு உகந்தது எனக் கருதப்படும் இத்திட்ட வரைவின்படி காசாவில் வாழும் பாலஸ்தீனியர்களை மூன்று கட்டங்களில் நிரந்தரமாக நாடகற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலவதாக வட சினாய் பாலைவனத்தில் கூடாரங்களை அமைத்து அங்கு காசா வாசிகளைக் குடியமர்த்துவது. பின்னர் பெயர் குறிக்கப்படாத இடமொன்றில் நிரந்த குடியிருப்புக்களை நிறுவுவது. இதைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்குள் திரும்பி வரமுடியாத வகையில் இஸ்ரேலுக்குள் பாதுகாப்பு எல்லைகளை நிர்மாணிப்பது.

இது குறித்து எகிப்து இதுவரை கருத்தெதையும் வெளியிடாவிட்டாலும் அக்டோபர் 7 போர் ஆரம்பித்ததிலிருந்து பாலஸ்தீனிய அகதிகளை உள்வாங்கத் தொடர்ச்சியான மறுப்பைத் தெரிவித்து வருகிறது. 1948 முதல் 1967 வரை எகிப்தின் ஆட்சிக்குள் இருந்த காசா, மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை தொடர்ச்சியான நடைபெற்ற போர்களின் பின்னர் இஸ்ரேல் பறித்துக்கொண்டது. இதன்போது அகதிகளாக்கப்பட்ட பாலஸ்தீனியர்களே தற்போது காசாவில் வாழ்கிறார்கள்.

“பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக சினாய் பிரதேசத்தில் குடியமர்த்துவதன் மூலம் பாலஸ்தீனியரின் தேசத்துக்கான போராட்டம் மழுங்கடிக்கப்படும். அது மட்டுமல்லாது பாலஸ்தீனியர்கள் எகிப்திலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொள்வார்களேயானால் அது இரு நாடுகளுக்கிடையே மீண்டும் போரை உருவாக்கிவிடும். இதனால் 1979 இல் கையெழுத்திடப்பட்ட அரபு – இஸ்ரேலிய சமாதான ஒப்பந்தம் முறியடைந்துவிடும். தற்போதைய போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்வரை வேண்டுமானால் காசா வாசிகளை இஸ்ரேலுக்குள்ளே காசாவின் எல்லையில் இருக்கும் நெகெவ் பாலவனத்தில் குடியமர்த்தட்டும் ” என எகிப்திய அதிபர் எல் சிசி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வருவதுடன் பாதுகாப்பு சம்பந்தமான பல தகவல்களை இஸ்ரேலுடன் பரிமாறும் ஒரே அரபுநாடு எகிப்து மட்டுமே. இத்திட்டம் இரு நாடுகளுக்குமிடையேயான உறவுக்குப் பங்கமாக அமையலாம் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேணுவதற்காக எகிப்திற்கு அமெரிக்கா வருடா வருடம் 1.3 பில்லியன், பெரும்பாலும் இராணுவ தளபாடங்கள், உதவியைச் செய்துவருகிறது.

கசியவிடப்பட்டுள்ள இத் திட்டத்தின்படி பாலஸ்தீனியர்களை எகிப்து, கட்டார், சவூதி அரேபியா, அரபு எமிரேட் ஒன்றியம் ஆகிய நாடுகளில் குடியேற்றுவதோடு அவர்களுக்கு நிதியுதவியை வழங்குவதெனவும் அதே வேளை கனடாவின் மென் குடியேற்றப் போக்கை அனுசரித்து அங்கும் பாலஸ்தீனியர்களைக் குடியேற்றலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

காசாவில் நடந்துகொண்டிருக்கும் போரில் மக்களின் இறப்பைக் குறைப்பதற்காகவே இக்குடிபெயர்வுத் திட்டம் தீட்டப்பட்டதென்று இத் திட்ட வரைவாளர் தெரிவித்துள்ளனர்.

2007 போருக்கு முன்னர் காசாவும் தற்போது மேற்குக்கரையிலுள்ள பாலஸ்தீனிய நிர்வாகத்தின் கீழே தான் இருந்தது. தற்போதுள்ள இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாஹு பகிரங்கமாக ஹமாஸ் போராளிகளை ஆதரித்து காசாவில் ஹமாஸின் ஆட்சி நிலைபெற உதவி செய்திருந்தார். இதன் மூலம் ஹமாஸ் – மழ்மூட் அப்பாஸ் நிர்வாகங்களிடையே பிளவை உண்டாக்குவதே நெட்டன்யாஹுவின் திட்டமாக இருந்தது.

காசாவை வெற்றி கொண்டதன் பின்னர் என்ன செய்யவேண்டுமென்ற முற்கூட்டிய திட்டமிடுதலின் பிரகாரமே மேற்குறிப்பிட்ட திட்டம் வரையப்பட்டிருக்கிறது எனவும் இந்த ‘இரகசியத் திட்டத்தை’ வேண்டுமென்றே கசியவிடுவதன் மூலம் உலக நாடுகளின் அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு இஸ்ரேல் முயல்கிறது எனவும் இப்படியான ‘கசிவுகள்’ இஸ்ரேலுக்குப் புதியனவல்ல எனவும் நிபுணர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

காசா படைபெடுப்பின் விளைவாக இதுவரை 8,000 த்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் இதில் அரைவாசிக்கு மேலானவர்கள் பெண்களும் குழந்தைகளுமாவர் எனவும் கூறப்படுகிறது. (Image Credit: AP Photo/Abed Khaled)