World

பாலஸ்தீனம்: தப்பியோடும் மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

“போர் நிறுத்தம் பற்றிப் பேசக்கூடாது” – அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு ராஜாங்கத் திணைக்களம் கட்டளை

சுற்றிவளைக்கப்பட்ட காசா பிரதேசத்திலிருந்து தப்பியோடும் பாலஸ்தீன மக்களின் வாகனங்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை நடத்திவருகின்ற காரணத்தால் இதுவரை 40 பேர் கொல்லப்பட்டும் 150 க்கு மேலானோர் காயமடைந்தும் உள்ளதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு OCHA தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பலர் பெண்களும் குழந்தைகளுமாவர். மருத்துவமனைகளின் தகவல்களைக் கொண்டு ஐ.நா. அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து இஸ்ரேலிய அரசாங்க தரப்பிலிருந்து இதுவரை எதுவித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவங்களினால் தப்பியோடும் பல பாலஸ்தீன அகதிகளின் வாகனங்கள் திரும்பித் தத்தம் இடங்களுக்குச் சென்றுகொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை இஸ்ரேலிய தாக்குதல்கள் இடைவிடாது தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இதே வேளை இறந்தவர்களின் எண்ணிக்கை 70 எனவும் காயப்பட்ட பலர் அல்-ஷிஃபா மருத்துவ மனையில் வைத்திய சிகிச்சையளிக்கப்படுவதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசா நகர்ப்புறங்களை அண்டி வாழும் ஏறத்தாழ 1.1மில்லியன் பாலஸ்தீன மக்களை அவர்களின் வாழிடங்களை விட்டு 24 மணித்தியாலங்களில் வெளியேறுமாறு இஸ்ரேலிய அரசு வியாழன் இரவு விடுத்த கட்டளைக்கிணங்கி சுமார் 400,000 மக்கள் ஏற்கெனவே வெளியேறி காசாவின் இதர பகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள். காசா நகரிலிருக்கும் போராளிகளை அகற்றி அவர்களது இராணுவ நிலைகளை முற்றாக அழித்த பின்னர் இம்மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பமுடியுமென இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இதற்கான கால அவகாசம் பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலின் இந்த மோசமான நடவடிக்கையை உலகின் பல மனித உரிமை அமைப்புகளும் கண்டித்திருக்கின்றன. “முழுப் பிரதேசமுமே சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், உணவு, நீர், உறைவிடம் எதுவுமே வழங்கப்படாமல் 1 மில்லியன் மக்களைத் திடீரென இடம் பெயர்ப்பது மிகவும் ஆபத்தான காரியம்” என ஐ.நா. பொதுச் செயலாளர் குத்தெரேஸ் தெரிவித்துள்ளார்.

“தொடரும் விமானத் தாக்குதல்களின் மத்தியில், எல்லைகள் மூடப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஓடித்தப்புவதற்கு வசதிகளில்லை. இந்நிலையில் 1 மில்லியன் மக்களை இடம்பெயர்ப்பது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல இலகுவான காரியமுமில்லை. எனவே இஸ்ரேலிய நடவடிக்கையை உடனடியாக நிறுத்தும்படி நாம் கேட்டுக்கொள்கிறோம்” என உலக சுகாதார அமைப்பு (WHO) கோரிக்கை விடுத்துள்ளது.

“போர் நிறுத்தம் பற்றிப் பேசக்கூடாது” – அமெரிக்க ராஜதந்திரிகளுக்கு ராஜாங்கத் திணைக்களம் கட்டளை

இதே வேளை “போர்த் தணிப்பு”, “போர் நிறுத்தம்” என்ற சொற்பதங்களைப் பாவிக்கவே வேண்டாம் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளிநாடுகளில் வாழும் தமது ராஜதந்திரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாகத் தெரிய வருகிறது. மின்னஞ்சல் மூலம் இக்கட்டளைகள் அநுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலின் தற்பாதுகாப்புக்காக் அந்நாடு எடுக்கும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை அளிக்க அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளமை தெரிந்ததே.

கட்டார் நகரில் வெள்ளியன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் அந்தொனி பிளிங்கன் “காசாவில் எதுவித தவறுகளையுமிழைக்காத அப்பாவிப் பாலஸ்தீனிய மக்கள் துன்புறுகிறார்கள் என்பதை நாமறிவோம். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இஸ்ரேல் சகல முற்பாதுகாப்புக்களையும் எடுக்கவேண்டும் என நாம் இஸ்ரேலை வற்புத்தியுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

சனிக்கிழமை மோதல்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,300 இஸ்ரேலியர்களும் 1,900 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். (Image Credit: Sky News / AP)