பாலஸ்தீனம்: ஆறாத புண்
சிவதாசன்
அக்டோபர் 07 அன்று இஸ்ரேல் தேசத்தின் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட முவ்வழித் தாக்குதல் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறது. தமது வானளாவிய வீர வரலாற்றில் இப்படி நடக்கவே முடியாது என இறுமாப்புடன் இருந்த இஸ்ரேலியர்களுக்கு இது ஒரு பேரிடி. வான் முழுவதும் கண்களை வைத்திருக்கும் ஒரு நாட்டில் எப்படி இந்த அதிசயம் நடந்தது? பலரும் பலதைக் கூறுகிறார்கள்.
நடந்துகொண்டிருக்கும் இப்போரில் ஹமாஸ் போராளிகள் களத்தில் தற்காலிக வெற்றி பெற்றி பெற்றிருக்கிறார்கள். போர் இன்னும் முடியவில்லை. இருப்பினும் இதில் தோற்றுப் போனது ஐ.நா.வும் அமெரிக்க ஜனநாயகமும் என்பது போருக்கு முன்னரேயே தெரிந்துவிட்டது.
ஹமாஸின் இத் தற்காலிக வெற்றிக்குக் காரணம் இஸ்ரேலிய உளவு ஸ்தாபனங்களின் அசமந்தப் போக்கு (தோல்வி) என்கிறார்கள். அதே வேளை இவ்வெற்றிக்கு ஹமாஸ் போராளிகளின் அணுகுமுறை, கள நடவடிக்கை மாற்றங்கள், யூக்கிரெய்ன் ஆயுதங்கள் காரணங்களெனச் சிலர் கூறுகிறார்கள். இத்தோடு இஸ்ரேலிய அரசாங்கத்தின் சமீபகால நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளால் மனிதநேயம் கொண்ட மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கடந்த ஜனவரி (2023) முதல் இஸ்ரேலிய அரசாங்கம் கொண்டுவர முயற்சித்த நீதித்துறையைப் பலவீனமாக்கும் முயற்சியைக் கண்டித்து பல இலட்சம் மக்கள் தெருவுக்கு இறங்கினார்கள். பிரதமர் நெட்டன்யாஹுவின் அதிகாரப் பசியைத் தீர்க்க தீவிர இன/ மதவெறி கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். இதற்காக அவர்கள் கேட்ட பரிசு அரசாங்கம் இயற்றும் நீதிக்குப் புறம்பான சட்டங்களைத் தூக்கியெறியும் நீதிமன்றத்தின் அதிகாரங்களைப் பறித்தெடுப்பது. இதையே தான் இலங்கையும் மிகவும் சாதுரியமாக சஞ்சாய் ராஜரட்ணம் என்ற பொம்மைத் தமிழரைச் சட்டமா அதிபராக்கியதன் மூலம் சாதித்துக்கொண்டது. இஸ்ரேலில் அதையே சட்ட ரீதியாகச் செய்ய நெட்டன்யாஹு அரசு ஜனவரியில் சட்டமூலமொன்றைக் கொண்டுவந்தது. நீதிக்கான இஸ்ரேலிய மக்கள் வீதிக்கு வந்தார்கள். அங்குமொரு அரகாலயா நடந்தது. இதையும் மீறி கடந்த ஜூலையில் நெட்டன்யாஹுவுக்கு முதலாம் கட்ட வெற்றியை மதவாதக் கட்சிகள் பெற்றுக்கொடுத்தன.
இச்சட்டம் பாலஸ்தீனியர்களைக் குறிவைத்தே கொண்டுவரப்பட்டது. பாலஸ்தீனிய பிரதேசங்களில் யூத தீவிரவாதிகள் அத்து மீறி உருவாக்கும் குடியிருப்புகள் போன்ற நீதிக்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பாராளுமன்றம் இயக்கும் சட்டங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து வந்தமை வலதுசாரிகளுக்கு கடுப்பாக இருந்துவந்தது. எனவே தான் நெட்டன்யாஹு அரசு மக்கள் எதிர்ப்பையும் மீறி இச்சட்டத்தைக் கொண்டுவந்தது. இஸ்ரேலிய வரலாற்றில் நெட்டன்யாஹு அரசைப் போல் தீவிர வலதுசாரி அரசு இருந்ததில்லை என்னுமளவுக்கு மக்கள் மத்தியில் அது பிரபலமற்றுப் போகும் நிலையில் இருந்தது. நீதிமான்களும், கற்றோரும், நியாயவாதிகளும் மட்டுமல்லாது இராணுவத்தின் மத்தியிலும் இவ்வரசுக்கு எதிரான அபிப்பிராயம் பரவி வந்தது. 300,000 துணைப்படைகளில் (reservists) பெரும்பாலோர் தாம் போர்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்தார்கள். அந்தளவுக்கு மக்கள் வெறுப்பைச் சம்பாதித்திருந்தது நெட்டன்யாஹு அரசு. இக் கட்டத்தில் வந்து குதித்தார்கள் ஹமாஸ். 900 இஸ்ரேலியர்களின் மரணம் இப்போது 300,000 துணைப்படைகளைக் களமிறக்கியிருக்கிறது. இலங்கையில் போலவே இஸ்ரேலிலும் ‘அரகாலயா’ நீர்த்துப் போனால் நெட்டன்யாஹு துள்ளிக் குதிக்கலாம்.
ஹமாஸின் தற்காலிக வெற்றிக்கான காரணங்கள் என்ன? இரண்டு விதமான விளக்கங்களைப் பண்டிதர்கள் முன்வைக்கிறார்கள். ஒன்று இஸ்ரேலிய உளவு ஸ்தாபனங்கள் அசமந்தமாக இருந்துவிட்டன. தவறு முழுவதும் உளவு நிறுவனங்களில் தான் என்கிறது ஒரு தரப்பு. இல்லை இது நெட்டன்யாஹு செய்த ‘உயிர்த்த ஞாயிறு’ உத்தி. உளவு ஸ்தாபனங்கள் நெட்டன்யாஹுவுடன் சேர்ந்து வேண்டுமென்றே அரங்கேற்றிய படலம் என்கிறது இன்னுமொரு தரப்பு. மக்கள் அபிப்பிராயங்களை இலகுவாக மாற்றுவதற்கு உலகம் பூராவும் அரசுகள் இப்படியான உத்திகளைக் கையாண்டு வருகின்றன. இரண்டாம் உலகப் போரில் கலந்துகொள்ளக் கூடாது என்பது அமெரிக்க மக்களின் மனநிலையாக இருந்தபோது ஹவாய் தீவிலிருந்த பேர்ள் துறைமுகத்தை யப்பானிய படைகள் தாக்குகின்றன. யப்பானிய கமிக்காசி விமானங்கள் தாக்குதலுக்கு வருவது தெரிந்தும் அமெரிக்க பாதுகாப்பு ஸ்தாபனம் அதை வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அமெரிக்க மக்களின் ரோச நரம்புகளின் மீது விழுந்த இத்தாக்குதலின் பின்னரே அமெரிக்கா களத்தில் இறங்கியது. 9/11 இற்குப் பின்னாலும் இப்படியொரு கதை இருக்கிறது என்கிறார்கள். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் நோக்கம் பற்றி சனல் 4 போட்டுடைத்து விட்டது. அப்போ ஹமாஸின் இத் தாக்குதலின் பின்னாலும்…? இருக்கலாம். உண்மை நொண்டி நொண்டிக்கொண்டு பின்னால் வருகிறது. அதுவரை பொறுங்கள்.
பாலஸ்தீனம்
1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. பிரித்தானிய கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனத்தை யூத, அரபு மாகாணங்களாக்கி ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அப்போதைய அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறிவுறித்தியிருந்தாலும், பிரித்தானிய கட்டுப்பாடு முடிவடைந்த அதே திகதியில் அமெரிக்க அதிபர் ஹரி ட்றூமன் ஜூத தேசத்தை அங்கீகரித்து விட்டார். அன்றிலிருந்து தொடங்கியது பிரச்சினை. அவ்வப்போது அரபு தேசங்களிடம் சின்னத் தடிகளினால் அடி வாங்கிய இஸ்ரேல் அமெரிக்க பணக்கார யூதர்களின் உதவியுடன் அரச உதஹ்விகளைப் பெற்று இப்போது அப்பிரதேச சண்டியனாக வளர்ந்துவிட்டது. அமெரிக்க வரியிறுப்பாளர்கள் வருடா வருடம் 3 – 4 பில்லியன் டாலர்கள் வரை இஸ்ரேலுக்குத் தானம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் ஐரோப்பாவிலிருந்து கப்பலில் ஏற்றி அகதிகளாக எங்காவது போய்த் தொலையுங்கள் என்று துரத்தப்பட்ட மக்களுக்கு இப்படித் தோல் தடிப்பது ஆச்சரியமல்ல. ஆனால் அதற்காக பாலஸ்தீனியர்களின் பூர்வீக பூமியைத் துண்டாடி திறந்த வெளிச் சிறைகளில் அவர்களை வாட்டுவது நியாயமாகாது. இதற்கு முக்கிய காரணம் ஐ.நா.வின் இயலாமையும் அமெரிக்காவின் நாட்டாண்மையும். இதனால் ஹமாஸின் இந்நடவடிக்கைக்கு உலகம் பூராவும் ஒடுக்கப்பட்ட, நியாயம் தேடும் மக்களிடையே ஆதரவு வலுத்து வருகிறது.
இந்தத் தடவை பாலஸ்தீனியர்களின் தாக்குதல் வழக்கமான கெரில்லாச் சேட்டைகள் போலில்லை. இது தந்திரங்களுடன் முன்னெடுக்கப்பட்ட ஒரு போர். ‘இருட்டடி’ இஸ்ரேல் உலகுக்குக் கற்றுத்தந்த உத்தி மீன்றும் அம்மண்ணிற்கு வந்திருக்கிறது. 1973ம் ஆண்டு யொம் கிப்புர் போர் நடைபெற்ற அதே நாளில் பாலஸ்தீனிய தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. எகிப்து – சிரியா கூட்டணியால் ஆரம்பிக்கப்பட்ட யொம் கிப்புர் போரில் அரபு நாடுகள் மூக்குடைபட்டுப் போனதே வரலாறு. ஆனாலும் பாலஸ்தீனம் என்ற இஸ்ரேலின் புண்ணை இப்படியான சிறிய, பெரிய போர்கள் மாறிவிடாமல் பார்த்து வருகின்றன. சரியாக 50 வருடங்களுக்குப் பிறகு இஸ்ரேல் தேசம் இன்னுமொரு தடவை மத வழிபாடுகளில் தம்மை மறந்திருக்க ஹமாஸ் வந்து இருட்டடி கொடுத்திருக்கிறது. இதன் முடிவும் ‘இருந்ததை இழக்கும்’ நிலையேயானாலும் கூட்டிற்குள் வாழும் பாலஸ்தீனியர்களுக்கும் விடுதலைக் கனவு அவ்வப்போது வந்துபோவதைக் குறைசொல்ல முடியாது. இவ்வேளையில் ‘தமிழ் ஈழம்’ நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.
இபோரில் பாலஸ்தீனம் எரியப் போவது உண்மை. ஹிட்லரின் கரங்களில் யூதர்கள் அனுபவித்த கொடுமைகள் வெவ்வேறு வடிவங்களில் அரங்கேறுகிறது. கொடுமைகளுக்கு இலக்காகியவர்கள் அதே கொடுமைகளைத் தாமே புரியும் மனநிலைக்குத் தள்ளப்படுவது தவிர்க்க முடியாத பக்க விளைவு என உளவியலாளர் கூறுவர். இதே வாய்பாடு பாலஸ்தீனிய மக்களுக்கும் பொருந்தும். எனவே உலக நாடுகளின் தலைவர்கள் கூறும் ‘பயங்கரவாதிகள்’ பட்டம் ஹமாஸுக்குப் பொருந்துமானால் அது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் பொருந்தும்.
இந்தத் தடவை ஹமாஸின் தாக்குதல் காசா எல்லைக்கு வெளியே இருக்கும் இஸ்ரேலிய எல்லைக் கிராமங்களில் நடைபெற்றிருக்கிறது. இதில் இரையாகியவர்களில் பெரும்பாலோர் பாலஸ்தீனிய கிராமங்களில் அத்துமீறிக் குடியேறிய தீவிர மத வெறியர்களின் குடும்பங்களும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய இராணுவத்தினரும். வெளிநாட்டு ஊடகங்கள் இவ்விடயங்களை வெற்றிகரமாக மறைத்து ‘குழந்தைக்’ கொலைகளை மட்டும் ஊதிப் பரப்புகின்றன. ஊரை, வீட்டை, உறவினரை இழந்தவர்களின் பழிவாங்கலே இந்தப் படையெடுப்பு.
இந்தத் தடவை ஹமாஸ் போராளிகள் புதிய உத்திகளைப் பாவித்திருக்கிறார்கள். நிலக்கீழ் பாதைகள் மூலம் வந்து எல்லைப் பாதுகாப்பு / உளவு நிலைகளை முதலில் தகர்த்த பின்னர் அப்பகுதிகளில் இருந்த படையினரையும் யூதக் குடியிருப்பாளர்களையும் கொலை செய்தும் கைதுசெய்தும் தமது தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். யூக்கிரெய்னுக்கு அமெரிக்கா அள்ளிக் கொடுத்த ஆயுதங்கள் பாலஸ்தீனியர்களின் கைகளில் தாராளமாகப் புழங்குகின்றன. முந்திய காலங்களில் போல ரஸ்ய ஏ.கே.47களின் காலமல்ல இது. குளொக் 9 மி.மீ, கோல்ற் எம்.4 கார்பைன் போன்ற நவீன கைத்துப்பாக்கிகள் ஹமாஸ் போராளிகளின் உடைகளில் மறைந்து போயிருந்தன. ஈரானிய ட்றோண்கள், கிளைடர்கள் பாவிக்கப்பட்டிருக்கின்றன. தற்கொலை ஆயுதத்தைத் துறந்து அவர்கள் வெகுதூரம் வந்துவிட்டார்கள்.
விளைவு எதிர்பார்த்தது. இதுவரை 1,000 தொன்களுக்கு மேலான குண்டுகள் பாலஸ்தீனியர்களைச் சிதறடித்து விட்டன. அமெரிக்கா தனது உதவியை இரட்டிப்பாக்கியிருக்கிறது. என்றுமில்லாது வெள்ளை மாளிகையிலும், கனடிய, பிரித்தானிய பாராளுமன்றக் கோபுரங்களிலும் இஸ்ரேலிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கின்றன. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இறந்த இஸ்ரேலியர்களுக்கு மட்டும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அப்படியிருந்தும் பிரித்தானியாவிலும் கனடாவிலும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக மக்கள் பல்லாயிரக் கணக்காகத் தெருவுக்கு இறங்குகிறார்கள். ஒப்பீட்டளவில் இஸ்ரேலிய ஆதரவு குறைவாகத் தென்படுகிறது. அரசுகளுக்கு கடுப்பேத்தி வரும் இச்சம்பவங்களினால் பாலஸ்தீனிய ஆதரவு ஊர்வலங்கள், கொடிகள் போன்றவற்றுக்கு தடைவிதிக்க அரசுகள் தயாராகின்றன. அதே வேளை இந்நாடுகளின் நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களாகப் புகைந்துகொண்டிருக்கும் யூத எதிர்ப்பு / நாஜிகளின் மீள்வருகையை உசுப்பேத்தி விடும் அபாயமும் இருக்கிறது. இதுவும் ‘பாலஸ்தீனிய ஆதரவு’ என்ற முகத்துடனேயே வெளிவரும். சமூக வலைத் தளங்களில் இம்முகங்கள் நிறையத் தெரிகின்றன.
காசா மட்டுமல்லாது மேற்குக் கரையிலும் எழுச்சிகள் பரவும். அழிவும் பெருகும். அது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாலஸ்தீனப் போர் மேலும் வீறுகொண்டு எழுவதற்கான சாத்தியமே அதிகம். இதைக் கட்டுப்படுத்த உலகம் ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலேயே கண்ணாக இருக்கின்றன. இதன் விளைவாக மேற்கு நாடுகளுக்குத் தான் அதிக நட்டம். ஏற்கெனவே கொதி நிலையில் இருக்கும் பொருளாதாரச் சீர்குலைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமும் தம் மண்ணுமே முக்கியம். இதனால் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றமும், தலைவர்கள் மாற்றமும் நிகழ நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. நெருங்கி வந்த சவூதி-இஸ்ரேலிய ஒப்பந்தம் முறிவடையலாம். அரபு, இஸ்லாமிய நாடுகள் மீண்டும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அணிதிரளப் போகின்றன. உலகம் மேலும் பிளவடையப் போகிறது. மாறிவரும் உலக ஒழுங்கில் பாலஸ்தீனத்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டால் ஆச்சரியப்படத் தேவையில்லை.
அது இதர விடுதலை அமைப்புக்களையும் ……நமக்கேன் வம்பு?
(Image Credit: Samar Abu Elouf / The New York Times)