World

பாலஸ்தீனம்: அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிளவு?

மேற்கின் அரசியல், இராஜதந்திரத் தோல்வி – ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார பிரதிநிதி

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மேற்கொண்டுவரும் படுகொலைகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிகளை எடுக்கவில்லை எனவும் இப்படுகொலைகளை அமெரிக்கா கண்டிக்கவேண்டுமெனவும் கோரி அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பணியாளர்கள் பலர் கையெழுத்திட்டு செயலாளர் அந்தொணி பிளிங்கனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பொலிற்றிக்கோ என்னும் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக இராஜாங்கத்திணைக்களத்தில் ஏற்கெனவே பல அபிப்பிராய பேதங்கள் நிலவி வருகின்ற போதிலும் தற்போது அது வேகமாக வளர்ந்து வருகிறது எனவும் நடுத்தர, கீழ்த்தரப் பணியாளர்கள் பலர் இப்போரில் அமெரிக்கா எடுத்துவரும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு படுகொலைக்களுக்காக ஜனாதிபதி பைடன் இஸ்ரேலைப் பகிரங்கமாகக் கண்டிப்பதோடு போர் நிறுத்தம் ஒன்றைக் கோர வேண்டுமெனவும் கேட்டு வருகிறார்கள்.

இஸ்ரேலைப் பிரத்தியேகமாக விமர்சிப்பதோடு பகிரங்கமாக எதையுமே கூறாமலிருப்பது “அமெரிக்கா பக்க சார்பானது, நம்பிக்கைக்குரியது அல்ல என்ற பிம்பத்தை உலகம் முழுவதும் வளர்ப்பதோடு உலகம் பூராவுமுள்ள அமெரிக்க நலன்களையும் பாதிக்கப் போகிறது” என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உண்மையான இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கவேண்டுமென்ற சர்வதேச நியமங்களை மீறிய இஸ்ரேலை நாங்கள் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும். நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் வன்குடியேறிகளின் வன்முறைகளை இஸ்ரேல் ஆதரிப்பதும், சட்டவிரோத நில அபகரிப்புக்களை ஆதரிப்பதும், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மட்டற்ற வன்முறைகளைப் பாவிப்பதும் அமெரிக்க விழுமியங்களுக்கு எதிரானவை என்பதனால் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நாம் கண்டிக்க வேண்டும். அவற்றை நாம் பொதுவெளியில் பேசிக்கொள்ள வேண்டும்” என இராஜாங்கத் திணைக்களப் பணியாளர்கள் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் “சுமுக நிலை பேணப்படவேண்டும்”, “வன்முறை இரத்தக்களரி நிறுத்தப்படவேண்டும்”, “போர் நிறுத்தம்” போன்ற கோரிக்கைகளை உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்க இராதந்திரிகள் ஒருபோதும் பாவிக்கக்கூடாது எனவும் “தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு” என்னும் சொற்பிரயோகத்தை மட்டுமே அவர்கள் பாவிக்கவேண்டுமெனவும் இராஜாங்கத் திணைக்களம் தனது அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறது.

1948 இல் பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேற்றப்படுவதற்கு அப்போதைய இராஜாங்கத் திணைக்களம் பின்னின்ற போதும் பெண்டகனின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஹரி ட்றூமன் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு அத்திவாரம் போட்டிருந்தார் என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

இதே வேளை காசாவை வடக்கு-தெற்காகக் கூறுபோட்டுவிட்டதாகவும் காசா நகரம் முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பு கூறுகின்றது. இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 10,000 த்தைத் தாண்டியுள்ளதாகவும் இதில் 4,000 த்துக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் எனவும் கூறப்படுகிறது. ஐ.நா. பணியாளர்களில் இதுவரை 88 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதே வேளை தனிமனித கருத்துச் சுதந்திரத்தை மறுதலிக்கும் சட்டமொன்றை அவசரம் அவசரமாக நிறைவேற்றும் முயற்சியில் பிரித்தானிய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இச்சட்ட மூலம் சட்டமாக்கப்பட்டால் பிரித்தானிய ஜனநாயகம் மற்றும் விழுமியங்களுக்கு குந்தகம் விளைவிக்குமெனக் கருதப்படும் எந்தவித தீவிரவாத சித்தாந்தங்களையாவது கொண்டிருப்பவர்கள் ‘தீவிரவாதிகள்’ எனக் கருதப்பட்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மேற்கு இராஜதந்திரத்தின் தார்மீகத் தோல்வி

“தற்போதைய இஸ்ரேல் – ஹமாஸ் போர் முற்றியமையால் ஏற்பட்ட இரத்தக்களரிக்கு மேற்கு நாடுகளே பொறுப்பேற்கவேண்டும். இப்பிரச்சினைக்கான மூலகாரணங்களை அறிந்து அவற்றைத் தீர்க்காமல் விட்டது எமது தார்மீக, அரசியல் தோல்வியாகும்” என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோசெஃப் பொறெல் தெரிவித்துள்ளார். நேற்று (நவமபர் 06) பிறஸ்ஸெல்ஸ், பெல்ஜியத்தில் நடைபெற்ற ஒன்றிய இராஜதந்திரிகள் கூட்டத்தில் பேசும்போது “பல தசாப்தங்கள் நீண்டுவரும் இப்பிரச்சினையை நாம் இராணுவ வழிகளினால் தீத்துவைக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இதே வேளை “மனிதாபிமான இடைவேளை என்று எதுவும் தரமுடியாது. அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டாலேயொழிய எங்களிடமுள்ள அனைத்துப் பலத்தையும் பாவித்து பாலஸ்தீனப் பிரதேசத்தின்மீது குண்டுவீச்சுகளைத் தொடர்வோம்” என இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாஹு வெள்ளியன்று தெரிவித்துள்ளார். (Image Credit: Dursun Aydemir/Anadolu).