Satire | கடி-காரம்மாயமான்

பாரிஸ்: ரணிலிடம் ‘கடி’ வாங்கிய தமிழர்

மாயமான்

பாவம் பாரிஸ் தமிழர்கள். மாட்சிமை தங்கிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவமானப்படுமளவுக்கு தரமிறங்கி விட்டார்கள்.

பிச்சா பாத்திரத்துடன் சமீபத்தில் மேற்குலகம் சென்ற ரணில் விக்கிரமசிங்க பாரிஸ் கிளப் சந்திப்பிற்காக ஃபிரான்ஸில் ஸ்டொப் ஓவர் செய்திருக்கிறார். சார்ள்ஸ் மன்னருடன் கைகுலுக்கிய புல்லரிப்பில் தலை வீங்கிய கையோடு அவர் அங்கு சென்றிருக்கலாம். இதை முகர்ந்து பிடித்த தமிழ் உணர்வாளர் ஒருவர் ரணில் கலந்துகொண்டிருந்த கூட்டத்தில் எழுந்து “ஏனைய விடயங்களில் மினக்கெடுவதை விட முதலில் மனிதாபிமானச் செயற்பாடுகளில் கவனம் செலுத்துங்கள்; இலங்கை அரசு ஜனநாயகத் தன்மையுடையது என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை” என ரணிலை நோக்கிக்கூறியிருக்கிறார். இதற்குப் பதிலளித்த ரணில் “நீ பேசியது எனக்குப் புரியவில்லை. உனக்கு ஆங்கிலம் பேச வராதென்றால் தமிழிலேயே பேசும், எனக்குத் தமிழும் தெரியும்” எனப் பதிலளித்திருக்கிறார். இதன் பின்னர் தமிழில் பேச முற்பட்ட அந்த உணர்வாளரை ஒழுங்கமைப்பாளர் வெளியேற்றிவிட்டனர் எனப்படுகிறது.

உணர்வாளர் இந்தக் கேள்வியை நல்ல நோக்கத்துடன் தான் கேட்டிருப்பார். ஆங்கிலம் அப்படி இப்படியாயிருந்தாலும் புரியும்படியாகத் தான் அவர் கேட்டிருப்பார் என இப்போதைக்கு நாம் benefit of the doubt ஐ அவருக்கே கொடுப்போம். ஆனாலும் அவருக்குப் புரியாத ஒன்று ரணில் எந்தளவு கபடத்தனமும் அகங்காரமும் கொண்டவரென்பது. ரணில் கூட்டங்களில் தனக்குப் பிடிக்காதோரை அவமானப்படுத்தும் வகையில் மட்டம்தட்டிப் பேசுபவர். அது நிச்சயம் தமிழராகத் தான் இருக்கவேண்டுமென்பதில்லை. ரணில் ஒரு nasicistic person. தனக்கு எல்லாம் தெரியுமென நினைப்பவர். அவரோடு சமராடுவதற்கு GG பொன்னம்பலம், அமைர்தலிங்கம், C.சுந்தரலிங்கம், இப்போதைய தலைமுறையில் சாணக்கியன் போன்றோரால் தான் முடியும். உணர்வாளர் வாயைத் திறப்பதற்கு முதல் மண்டையைத் திறந்திருந்தால் அவமானம் தமிழர் மீது விழுந்திருக்காது. தென்னிலங்கைப் பத்திரிகைகள் அப்படித்தான் இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

ஒருவர் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றில் சில விவேகமான வழிகளும் இருக்கலாம். “வாயைக் கொடுத்து…” பழமொழியை இங்கு பாவிக்க முடியாது. ஆனாலும் அதையேதான் இந்த உணர்வாளர் செய்திருக்கிறார். ஆனால் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட கதையாக இந்த ரணிலின் அடியை / கடியை பாரிஸ் தமிழர்கள் அனைவர் மீதும் அவர் சுமத்திவிட்டதாகவே கருதவேண்டியிருக்கிறது.

ரணிலின் நக்கலுக்கு இந்த உணர்வாளர் சொல்லியிருக்கக்கூடிய ஒன்று: “I beg your pardon. I didn’t know that you don’t undersatand Kings’ English. May be I will ask the question in Tamil”. எப்படியோ அவர் சபையிலிருந்து கலைக்கப்படுவார் என்பது உறுதிதானே. மீதியிருந்த (?) தமிழரையாவது புல்லரிக்க வைத்துவிட்டுப் போயிருக்கலாம். பாரிஸ் தமிழர்களும் லாச்சப்பலில் பெரிய கூட்டமொன்றை வைத்து அவருக்குப் பொன்னாடை போர்த்திருப்பார்கள். கொழும்பு (ராஜபக்ச) ஊடகங்கள் ரணிலைப் போட்டு ஒரு மொங்கு மொங்கியிருக்கும்.

மிஸ் பண்ணிட்டீங்களே சேர்….

facebook sharing button
twitter sharing button
sharethis sharing button
whatsapp sharing button

A A A